மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரிக்க, ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சங்கீர்த்தனா விபின், விஸ்மயா விஸ்வநாத், அகிலன், ஆடுகளம் முருகதாஸ், ராகுல் தாத்தா , சாந்திமணி பாட்டி, ஆதிரா , சுப்ரமணிய சிவா நடிப்பில் சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’.
நகரில் ஒரு நடுத்தர சமூகப் பெண்ணும் (சங்கீர்த்தனா விபின்) தாழ்த்தப்பட்ட சமூக இளைஞனும் (அகிலன்) காதலிக்கிறார்கள். அவர்களின் பெற்றோர் இருவரும் சரியான ஜோடி என்பதை அறிந்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இதே காதல் வேறொரு இடத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வியோடு படம் தொடர்கிறது.
செங்கல்பட்டுக்கும் காவிரி வடகரைக்கும் இடைப்பட்ட நடுநாடு ! மன்னர்கள் காலத்தில் போர் வீரர்கள் தங்குவதற்கு, காட்டை வெட்டி இடம் அமைத்த பகுதியில் பின்னால் விவசாயம் நடந்து அதனால் ஊர்களாக உருவான பல காடு வெட்டி கிராமங்களில் ஒன்று படத்தில் வரும் இந்த காடுவெட்டி கிராமம்
அக்கினி சின்னத்தை அடையாளமாகக் கொண்ட சமூக மக்களின் தலைவராக டாக்டர் அய்யா ( ஏ எல் அழகப்பன்) . பெரியவன் என்ற அடைமொழியோடு அவரது தளபதியாக காடு வெட்டியில் வாழும் குரு (ஆர் கே சுரேஷ்) . வீரமும் தைரியமும் கொண்ட அவரது மனைவி (விஸ்மயா விஸ்வநாத்).

உயர் சாதிப் பெண்ணை மணந்து குடிகாரனாக பொழுதைக் கழித்து , மனைவியைக் கொடுமை செய்யும் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞனையும் அவன் ஆட்களையும் அடித்து நொறுக்கி பெண்ணை மீட்டுக் கொண்டு வந்து தங்கையாக வைத்துக் காப்பாற்றுகிறார் குரு .
அக்கினி சின்னத்தை அடையாளமாகக் கொண்ட மக்கள் அதிகமாகவும் அந்த மக்களுக்கு சமமான சாதி அந்தஸ்தோடு தெலுங்கு மொழி பேசும் மூன்று குடும்பங்களும் வாழும் ஒரு கிராமம் .
பக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி . அங்கு வாழும் ஓர் இளைஞனுக்கும் (அகிலன்) மூன்று தெலுங்குக் குடும்பங்களில் ஒன்றில் பிறந்த பெண்ணுக்கும்(சங்கீர்த்தனா விபின்) காதல் .
அந்தக் காதலை ஊர் ஏற்கவில்லை . பக்கத்து வீட்டுக்காரன் தனது சிறுநீரைப் பிடித்து அந்தப் பெண்ணின் மேல் ஊற்றி தாழ்த்தப்பட்ட சமூக ஆளை காதலித்ததற்காக அடிக்கும் அளவுக்கு நிலைமை
ஊர் கூடி பெண்ணின் தகப்பனிடம் (சுப்ரமணிய சிவா) இரவோடு இரவாக உன் பெண்ணைக் கொன்று புதைத்து விடு என்று கூற , அவர் சாதிப் பாகுபாட்டை விடுத்து மகளை ,அவளது காதலனோடு அனுப்பி வைக்க,

ஆனால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் வேங்கைத் தலைவர் இந்தக் கல்யாணத்தை வைத்து பெண்ணின் சமூகம் மற்றும் ஊரின் அக்கினி சமூக மக்களை அசிங்கப்படுத்த முயல்கிறார் . அதற்கு காதலனே சம்மதிக்கவில்லை என்ற நிலையில் அந்தத் தலைவர் . காதல் ஜோடி மீது வஞ்சம் வைக்கிறார்
நகரில் பிறந்து வாழும் அந்த ஜோடியின் காதலானது கல்யாணம் , பிள்ளைப் பேறு என்று போக, கிராமத்தில் பிறந்து வாழும் அதே ஜோடியின் காதல் என்ன ஆனது என்பதே படம்.
ஆணவக் கொலை என்பதை ஆண்ட சாதி சமூகம்தான் செய்யும் என்று இல்லை. தேவை என்றால் தனது ஆணவத்துக்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள்- ஆளும் கட்சியின் கூட்டணியில் இருக்கிற தைரியத்தில்- என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்குவது இல்லை என்ற ஒரு கோணத்தைச் சொல்கிறது படம்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் சோற்றுக்கு அடித்துக் கொள்வது போல சில காட்சிகளை வைத்து , அதற்கு மாற்றாக தாழ்த்தப்பட்ட சமூகத்து வீட்டில் செய்த சுவையான கோழிக் குழம்பை சாப்பிட, ஆதிக்க சாதி பெண்கள் ஆலாய்ப் பறப்பது போன்ற காட்சி உட்பட ஓரிரு காட்சிகள் மூலம் இரண்டு தரப்பையும் சமமாகப் பார்ப்பது போன்ற ஒரு பிரம்மையை சில இடங்களில் படம் காட்டினாலும்
ஆதிக்க சாதிப் பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றும் தாழ்த்தப்பட்ட சமூக ஆட்களை டீல் செய்வது பற்றியே முக்கியமாகப் பேசுகிறது படம் . ”பின்னாலேயே வந்து காதல் என்ற பெயரில் அவனுங்க டார்ச்சர் செய்தால் கத்தியால் ஒரே போடா போடு” என்றும் படிக்கிற காலத்தில் காதலில் விழாமல் படிப்பதில் பெண்கள் ஆர்வம் காட்ட வேண்டும்” என்றும் பலமாகவே சொல்கிறது படம்.
தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு சிலர் ஆதிக்க சாதிப் பெண்கள் மீது கொள்வது உண்மைக் காதலாகவே இருந்தாலும் அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் ஆதிக்க சாதியினர் தங்கள் மகள்களின் அது போன்ற காதலை மகளின் சந்தோஷத்துக்காக ஏற்றுக் கொண்டாலும்,

அந்த தாழ்த்தப்பட்ட சமூக அரசியல் தலைவர்கள் அந்தக் காதலின் மூலம் ஆதிக்க சாதியினரை பழிவாங்கி அவமானப்படுத்தவே முயல்வார்கள். நிம்மதியாக அந்தக் காதல் ஜோடியை வாழ விட மாட்டார்கள் என்று அழுத்தமாக சொல்கிறது படம்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோரின் வாழ்வில் நடந்த அரசியல் போராட்ட சம்பவங்களும் படத்தில் இருக்கின்றன.
“ஒரு அப்பனுக்குப் பொறந்தா போராட்டத்துக்கு வா .. உண்மையிலேயே ஆம்பளைன்னா போராட்டத்துக்கு வா ..” போன்ற வாக்கியங்கள் மூலம் தங்கள் சாதி அமைப்புகளாலேயே ஆதிக்க சாதி மக்கள் எப்படி மனரீதியாக நெருக்கடிக்கும் உணர்ச்சிவசப்படுதலுக்கும் ஆளாகிறார்கள் என்பதையும் படத்தில் பூடகமாகச் சொல்கிறார்கள்
தாழ்த்தப்பட்ட சமூக இளைஞன் ஆதிக்க சாதிப் பெண் இடையேயான காதல் நகரத்தில் நடந்தால் என்ன ஆகிறது கிராமத்தில் நடந்தால் என்ன ஆகிறது என்பதை அதே நடிக நடிகையரை வைத்து விவரித்து இருக்கும் உத்தி அருமை . சபாஷ் சோலை ஆறுமுகம்.

மகளை அப்பனே கொல்ல வேண்டும் என்று ஊர் தூண்டும் விதம் பதைபதைப்பு என்றால் . அப்போது நடக்கும் திருப்பமும், ”நீ பொழைச்சுக்குவ போ..” என்று பாட்டி சொல்வதற்கு அடுத்து வரும் ஷாட்டும் இயக்குனரைப் பாரட்ட வைக்கிறது.
வணக்கம் தமிழா சாதிக்கின் பாடல்கள் உணர்ச்சி ஏற்றுகிறது . ஆனா அதுக்காக இவ்வளவு பாட்டா? ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் சிறப்பு.
ஏரியல் ஷாட்களில் அசத்துவதோடு மட்டுமின்றி ,கிராமச் சூழலைத் திரைக்குக் கொண்டு வர , குளம் , குட்டை, மரம், செடி , கொடி, தோப்பு, மலை என்று இயக்குனர் வைத்திருக்கும் அட்டகாசமான கேமரா கோணங்களின் மூலம் சிறப்பான ஒளிப்பதிவு கொடுத்து இருக்கும் வகையிலும், அசத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் புகழேந்தி.
அடி , இடி , முறி, உடை , நொறுக்கு, பிரி, கிழி, சொருகு , திருகு என்று.. கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகள் பிரம்மிக்க வைக்கின்றன .

வீர சமரின் கலை இயக்கம் மிகச் சிறப்பு
குரு கேரக்டரில் சின்சியராக நடித்தும் அடித்தும் உள்ளார் ஆர் கே சுரேஷ் . ஆதிக்க சாதிக் காதலியாக வரும் சங்கீர்த்தனா நகரத்துக் கதாபாத்திரத்தில் படு செயற்கையாக இருந்தாலும் ( அவர் மட்டுமல்ல… எல்லோரும்தான்) கிராமத்துக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் . குருவின் மனைவி கதாபாத்திரத்தில் விஸ்மையாவும் சரியான தேர்வு . அகிலனும் அப்படியே.
சுப்ரமணிய சிவா, பையனின் சித்தப்பாவாக ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் யதார்த்தமாக சிறப்பாக நடித்துள்ளனர். ஆனால் இவர்கள் எல்லோரையும் விட படத்தில் இயல்பாக வரும் பெயர் தெரியாத கிராமத்து முகங்கள் அசத்தி விடுகிறார்கள். குறிப்பாக கிராமத்து நாயகியின் தோழியாக வரும் பெண்… அந்த அக்கினி மண்ணுக்கே உரிய பொருத்தமான அழகு . முக்கியமாக அவரது நடை உடை பாவனைகள் உடல்மொழிகள் கொள்ளை அழகு.

இரண்டு தரப்பிலும் மக்களிடம் ஊறி இருக்கும் சாதி வன்மத்தை ஒரு அரசியல்வாதி மீது திருப்புவது சரியா தவறா இல்லை தப்பித்தலா ? நோகாமல் நோன்பு கும்பிடும் வேலையா ? என்ற வாதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு படத்தின் மிகப் பெரிய குறை அதீத நீளம் . முன்னும் பின்னும் நகரம் பிளாஷ்பேக் காட்சிகள் அலுப்பு .
நகரத்துக் காட்சிகளை இவ்வளவு விட்டேத்தியாக என்னவோ தூர்தர்ஷன் டிராமா மாதிரி எடுத்து இருக்க வேண்டாம். அதுவும் உங்க படத்துல தானே வருது ?
அந்தப் பக்கம் ரஞ்சித் , மாரி செல்வராஜ் என்றால் இந்தப் பக்கம் மோகன் ஜி , இப்போது சோலை ஆறுமுகம் . நடக்கட்டும் … நடக்கட்டும் .