ஜே ஸ்டுடியோஸ் சார்பில் ஜேசு சுந்தரராமன் தயாரிக்க, லிங்கேஸ், அனுமோள், காயத்ரி, ரமேஷ் திலக் நடிப்பில் எழுத்தாளர் தமயந்தி இயக்கி இருக்கும் படம்.
பாண்டிச்சேரியில் பணியாற்றும் – நேர்மை பார்க்காமல் பணத்துக்காக அட்ஜஸ்ட் செய்து வாழும் அசிஸ்டன்ட் கமிஷனர் ஒருவர் , யாருக்கு என்ன நடந்தா என்ன ?நாம நம்ம விசயத்துல குறியா இருக்கணும் என்ற குறுகிய மனோபாவம் கொண்ட மனைவி (அனுமோள்) ஆகியோரின் மகள் (காயத்ரி) . சமூக அக்கறை உள்ள தாழ்ந்த சாதி நல்ல பையனைக் (லிங்கேஷ்) காதலிக்கிறாள் .
அப்பாவுக்கு அவனை மிகவும் பிடித்தாலும் சாதி வெறி கொண்ட அம்மாவுக்கு பிடிக்கவில்லை. ஊரில் இருக்கும் தன் அண்ணன் மகனுக்குக் கட்டிக் கொடுக்க, , அங்கே அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.
மகளின் மரணத்துக்கு மனைவிதான் காரணம் என்று என்னும் கணவன் , அவளை வெறுக்கிறான். அவள் மன நலம் பாதிக்கப்படுகிறது.
தம்பதியின மகனும் இறந்த பெண்ணின் சகோதரனுமான அமெரிக்க வாழ் மகன், ஊருக்கு வந்து அம்மாவை தன் நண்பனான மன நல மருத்துவரிடம் (ரமேஷ் திலக்) அழைத்துப் போகிறான் .
மருத்துவரை திருமணம் செய்து கொண்ட மலையாளப் பெண் ஒருத்தி கர்ப்பமான ஒரே மாதத்தில் கணவன் பிடிக்கவில்லை என்று கர்ப்பத்தோடு கேரளா போய் விடுகிறாள்.
செத்துப் போன மகளின் அஸ்தியை கரைக்க , கடற்கரை நகரங்களான பிச்சாவரம், வேளாங்கண்ணி , ராமேஸ்வரம் என்று கார் பயணம் போனால், மனம் லேசாகி கணவன் மனைவி பிணக்கு குறையும என்று மனநல மருத்துவர் சொல்ல, காரில் போகிறார்கள்.
வழியில் அப்பா, தன் மகளின் முன்னாள் நல்ல காதலனை சந்திக்கிறார் . அவன் யார் என்பதை மனைவியும் உணர்கிறாள். அந்த இளைஞனை இப்போது ஒரு அதி தீவிரக் காதலி (ஸ்வாகதா கிருஷ்ணன்) – எந்த நிலையிலும் காதலிக்கிறாள்.
மகள் இறந்ததை முன்னாள் காதலனிடம் அப்பா சொல்ல, அவன் இப்போது காதலிக்கும் அதி தீவிரக் காதல் பெண்ணை மணக்க மறுக்கிறான்.
இப்போதும் தன மகளின் முன்னால் காதலனிடம் சாதி வித்தியாசம் காட்டுகிறாள் மனைவி. அசிஸ்டன்ட் கமிஷனர் முன்னாள் காதலனிடம்” நீ என் மகளை நினைத்துக் கொண்டே வாழ வேண்டும். வேறு பெண்ணை மணக்கக் கூடாது ‘ என்கிறார்.
அதி தீவிரக் காதலி யார் மேலும் கோபப் படாமல் , காதலனை மணக்க போராடுவது அல்லது ஏற்றுக் கொண்டு பிரிவது என்ற முடிவுக்கு வருகிறாள்.
இறுதியில் யாருக்கு என்ன நிகழ்ந்தது என்பதே காயல்.
காயல் என்பது தீவிரச் சூடும் ஈரமும் உப்புக் காற்றும் கலந்த கடல் மற்றும் ஏரிப்புறத்துக்கான நீர் நிலைகளுக்கான வட்டார வழக்குச் சொல். காயல் பட்டினம், புன்னைக்காயல், காயாமொழி ஆகிய ஊர்கள் போல.
ரத்தம். கத்தி, கிட்னி , கொக்கையின் இல்லாமல் மனித உணர்வுகளின் மோதலை வைத்து கதாபாத்திரங்கள் எழுதி தன் முதல் படத்தை இயக்கி உள்ளார் எழுத்தாளர் தமயந்தி .
படத்தின் முதல் பலம் கார்த்திக் சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு. கடல் புறமும் தண்ணீர் வெளிகளும், வாழ்வியலும் , இயற்கை சூழலும் தாழவும் மேலாகவும் தண்ணீருக்கு மேல் பறவைகள் பறக்கும் காட்சிகளும் ரம்மியம் . அருமை
ஜஸ்டின் கெனனியாவின் இசை பரவாயில்லை ராகம் (எழுத்துப் பிழை அல்ல)
கேரக்டருக்கு பொருத்தமான முகங்கள். குறிப்பாகப் பெண்கள்.
அனுமோள் உச்சம். அழகான கண்ணியமான பாந்தமான தோற்றம் கொண்ட அவர் உள்ளுக்குள் எப்படி என்று வெளிப்படுத்தும் விதம் அழகு.. அட்டகாசமான நடிப்பு .
பல படங்களில் போலீஸ்காரராக வந்து போகும் நபருக்கு கதாபாத்திரச் செறிவு கொண்ட அசிஸ்டன்ட் கமிஷனர் வேடம். நல்ல நடிப்பு.
முன்னாள் காதலனின் இந்நாள் காதலியாக வரும் அதிதீவிரக் காதலி ஸ்வகாதா , தனது ஆண்மைக் குரல், உற்சாகமான கேரக்டருக்குக் பொருத்தமான நடிப்பு , என்று அசத்துகிறார். காதல் கோட்டை ஹீராவை நினைவுபடுத்துகிறார்.
மற்றவர்கள் வந்து வஜனம் பேசிப் போகிறார்கள்.
தமயந்தி எல்லா கேரக்டர் வழியாகவும் தான் பேச நினைப்பதையே பேசிக் கொண்டு இருக்கிறார் . அவர்களை பேச விடவில்லை. சினிமாவில் அது ரொம்ப தப்பு. டி. ராஜேந்தருக்கு அது செட் ஆகலாம். எல்லாருக்கும் ஆகாது. மணிரத்னமே மாறி விட்டார்.
ஒருவேளை காமெடிக்கு அது ஒர்க் அவுட் ஆகலாம். சீரியஸ் காட்சிகளில் பயன்தராது. உண்மையில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அந்த நிலையில் இருந்து வசனம் எழுத வேண்டும்
தவிர, , காட்சிகளின் நீளம் அதிகம்.
வணிக சினிமாவுக்கான உத்திகள் இல்லை.
எதை சொல்வது என்பது உணர்வு . எந்த ஊடகத்துக்கு எப்படி சொல்வது என்பது உத்தி. உணர்வு இருக்கிறது . ஆனால் உத்தி இல்லை. ஒரு புத்தகம் படிக்கும் உணர்வே ஏற்படுகிறது.
மிக நீண்ட படம் போல ஓர் உணர்வு ஏற்படுவது பலவீனம் . ஒரு நிலையில் படம் இழுக்கிறது . சீரியஸ் காட்சிகளில் ரசிகர்கள் சிரிக்கிறார்கள். இதுதான் முடிவு என்றால் இந்த இந்தப் பாயல் எதற்கு என்று கேள்வி வரும் மெல்லிய கிளைமாக்சில் காயல் முடிகிறது.
ஒவ்வொரு விஷயத்திலும் இன்னும் அழுத்தமும் ஆழமும் தேவை .
காயல் என்பது ஆழம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் காயல் படமாக வரும்போது ஆழம் இருக்க வேண்டுமே. அது இல்லாததால் காயல் தரை தட்டி நிற்கிறது.