தணல் @ விமர்சனம்

அன்னை பிலிம் பேக்டரி சார்பில் எம் ஜான் பீட்டர்  தயாரிக்க, அதர்வா முரளி , அஷ்வின் காக்க மனு, லாவண்யா திரிபாதி,  பிரதீப் விஜயன். சர்வா , அழகம் பெருமாள், சோனியா, போஸ் வெங்கட், நடிப்பில் ரவீந்திரா மாதவா எழுதி இயக்கி இருக்கும் படம். 

வங்கியைக் கொள்ளை அடிக்கும் ஒரு  கூட்டத்தை சுட்டுக் கொல்கிறது போலீஸ். 
 
குற்றவாளிகள் போலீசில் மாட்டக் காரணம் ஓர் இளைஞன் (அதர்வா).  அவனுக்கு சில நண்பர்கள் . கொள்ளை அடித்தவர்கள் மாட்டும் சம்பவத்தால் விபத்தில் சிக்கும் – அந்த இளைஞனின் அம்மா (சோனியா) பெரும் விபத்துக்கு ஆளாகிறார் . அதனால் வசதிக்கு மீறிய மருத்துவ செலவுகளால் குடும்பம் தடுமாறுகிறது . (சோனியாவை எல்லாம் பார்த்தால் நோயாளி மாதிரியே தெரியவில்லை. சும்மா கிண்ணென்று இருக்கிறார் ) எனவே மனைவியை காப்பாற்ற பணம் புரட்டி ஒரு வங்கி லாக்கரில் வைத்து விட்டு ஆபரேஷனுக்கு காத்திருக்கிறார் தந்தை . சொத்து இல்லை என்பதால்  அப்பாவை மகன் மதிப்பது இல்லை. 
 
ஆனால் பொறுப்பில்லாத அந்த மகனுக்கு சிறு வயதில் ஒரு டாவு . பனிரெண்டாம் வகுப்பில் சண்டை . அவள் இடம் மாறி கலெக்டருக்கு படித்து  விட,  (லாவண்யா திரிபாதி) இவன் பனிரெண்டாம் வகுப்போடு படிப்பு கட். 
 
எனினும் காதல் இப்போது தொடர, பெண்ணின் தந்தையோ பெண் கொடுக்க மறுத்து அவமானப்படுத்துகிறார். 
 
அவர் மூலம் தன்னிலை , குடும்ப நிலை உணர்கிறான் . 
 
அவனும் நண்பர்களும் போலீஸ் தேர்வில் செலக்ட் ஆக. ஆறு பேருக்கும்  ஜாய்னிங் ஆர்டர் காப்பி தருவதாக சொன்ன ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அன்று வரவே இல்லை. 
 
காத்திருந்து மறுநாள் வந்து  என கிளம்பி நடக்கையில் இரவு நேரத்தில் சாலையோர மேன்ஹோலில் இருந்து எழும்  ஒருவன் போலீசைப் பார்த்து எழுந்து ஓட, 
 
‘இரவு நேரத்தில் அங்கீகரிக்கப்பட்ட மேன்ஹோல் பணி உபகரணம் இல்லாமல் தனி ஆள் மூலம் நடக்காதே ; என்று அவனை பின் தொடர்ந்து போகிறார்கள் . 
 
நகரின் மையத்து சேரியில் இருந்து அரசால் அப்புறப்படுத்தப்பட்டு,  ஆள் அரவமற்ற சேரிக்குள்  மேன் ஹோல் நபர் ஓட அவனைப் பின் தொடர, உள்ளே இருக்கும் ஒரு கொடூரக் கூட்டம் அறுவரில் ஒரு ஆர்டர் காப்பி போலீஸ் இளைஞனின் தலையை துண்டிக்கிறது 
 
செல்போன் இயங்கவில்லை . போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்ல முடியவில்லை  தப்பிக்க வழியில்லை. மற்ற புதிய போலீஸ்காரர்களும் அந்த ஆளரவமற்ற சேரிக்குள் இரவுக்குள் கொடூரமாகக் கொல்லப்படும் சூழல். 
 
இவர்களுக்கு வர வேண்டிய ஆர்டர் காப்பி , அங்கே சேரிக்குள் இருக்கிறது. சில போலீசாரே சமூக விரோதிகளின் தலைவனுக்கு அடியாள். தீவிரவாதிகளின் தலைவன் (அஷ்வின் காக்கமனு) திறமையானவன். முன்னாள் ராணுவ வீரன் 
 
பழைய சேரியின்  டிரைனேஜ் வழியே தென் சென்னையில் உள்ள வங்கிகளை ஒரே நேரத்தில் கொள்ளை அடித்து பணத்தை மொத்தமாக அள்ளிச் செல்ல தீவிரவாதி  திட்டமிடுவதாக நாயகன் கண்டு பிடிக்கிறான். 
 
அவன் கொள்ளையடிக்கப் போகும் ,  ஒரு வங்கி லாக்கரில்தான் ஹீரோவின் அம்மாவின் ஆப்பரேஷன் செலவுக்கு பணம் வைக்கப்பட்டு இருக்கிறது . பணம் கொள்ளை போனால் அம்மா சிகிச்சை தாமதம் உயிர் ஆபத்து . ஆகவே தொழிலாகவும் பர்சனல் ஆகவும் கொள்ளையை தடுக்க நினைக்கிறான் ஹீரோ . 
 
கொலை செய்பவர்கள் எல்லோரும் விவசாயிகள் . 
 
தென் மாவட்டத்தின் வளமான பகுதியில் விவசாயம் செய்து அவர்கள் பெரும் பணக்காரர்களாக வாழ, அங்கே ஒரு கார்ப்பரேட் சுரங்கக் கம்பெனி வருகிறது . மழை இயற்கை வளம் குறைகிறது . விவசாயத்தால் நஷ்டம் என்று ஆகும் நிலையில் , அரசும் வங்கிகளும் இனி விவசாயம் செய்ய முடியாது என்று தெரிந்தும் செய்யலாம் என்று விவசாய நிலத்தின் மேல் கடன் கொடுக்கிறது. 
 
விவசாயம் மேலும் பொய்த்து விவசாயிகள் கஷ்டப்பட , வட்டி ஏறுகிறது . வங்கிகள் நநெருக்க , ஒவ்வொரு சிக்கலிலும் அரசுக்கும் வங்கிக்கும் , நிறுவனத்துக்கும் ஆதரவாக செயல்படும் போலீஸ் விவசாயிகளை அடித்து  உதைக்கிறார்கள். எனவே போலீஸ் மேல் அந்த விவசாயிகளுக்கு கோபம். 
 
அந்த விவசாயிகள் வங்கிக் கடன் கட்ட கொள்ளை அடித்த போதுதான்,  ஹீரோ மூலம் அவர்கள் மாட்டிக் கொண்டு என் கவுண்டரில் சாகிறார்கள். 
 
அந்த என்கவுண்டரில் விவசாயிகள் தரப்பில் சுடப்பட்டு செத்துப் போன போலீஸ்காரர்கள் குடும்பத்தார்பலருக்கு இப்போது புதிதாக வேலை கிடைத்து இருக்க, அதில் ஹீரோவும் இருக்கிறான். 
 
ஆக,  இவர்களையும்  கொன்று விட்டு பணத்தைக் கொள்ளை அடிக்க விவசாயிகள் குழு திட்டமிடுவதாக நாயகன் உணர்கிறான். 
 
ஆனால் முன்னாள் விவசாயிகள் குழுவின் திட்டம் பணத்தைக் கொள்ளை அடிப்பதோ இந்த நபர்களை மட்டும் கொல்வதோ இல்லை. 
 
பணம் கொள்ளை அடிப்பதை கடைசியாக போலீசுக்கு தகவல் சொல்லி , தென்சென்னை போலீசை மொத்தமாக டிரைனேஜ் உள்ளே  இறக்கி,  அவர்களை மொத்தமாக் கொன்று பழி வாங்கி போலீசின் இமேஜை கெத்தை மக்கள் முன் குறைப்பது . 
 
தடுக்க நாயகன் போராட , வெடிக்க வைக்க விவசாயி வில்லன் போராட , பிரச்னையின் மெயின் குற்றவாளிகள் திரைக்கதையின் சந்து பொந்துகளில் தப்பிக்க, நடந்தது என்ன என்பதே தணல். இப்படி விலாவரியாக கதை சொன்னால்தான் இந்தப் படத்தை நியாய அநியாய ரீதியில் விமர்சிக்கவே முடியும். 
 
அந்த சேரி செட் அபாரம். 
 
சக்தி சரவணன் ஒளிப்பதிவும்   ஜஸ்டின் பிரபாகரன் இசையும் அந்த சேரி  செட்  காட்சிகளில் சிறப்பு. .  அந்தப் பகுதியில் பொதுவாகவே இயக்குனரின் மேக்கிங் பிரம்மாதம் . 
 
ரசிகர்களுக்கு திரைக்கதை ரீதியாக முடிவு தெரிந்த விசயங்களை ஆர அமர கொட்டாவி விட்டுக் கொண்டு சொல்லி பொறுமையை சோதித்தாலும் சின்னச் சின்ன  கிம்மிக்ஸ் மூலம் சில  காட்சிகளை சொன்ன விதம் சுவை. ஒரு நிலையில் அதுவும் இழுவை ஜாஸ்தியாவது தான்  கொடுமை . 
 
அதான் அந்த காதல் பிளாஷ்பேக் தான். எந்த கதைக்கு எந்த உணர்வுள்ள பகுதி முக்கியம் என்பதில் ஒரு நாலேஜ் வேண்டும். தவிர  லாவண்யா திரிபாதி என்னவோ கோவக்கார சோகக்கார அப்நார்மல் பெண் போலவே படம் முழுக்க வருகிறார்  
 
அதன் பின் வரும் சேரிப் பகுதி அசத்துகிறது . படம் எழுந்துருச்சி என்று நம்பினால் பின்னால் வரும் இரண்டாம் பகுதி அந்த நம்பிக்கையை அடித்து பவுடர் செய்து தனது அரைவேக்காடு  திரைக்கதை முகத்தில் பூசிக் கொள்கிறது , 
 
தவறான அணியில் நின்று தவறான அணிக்காகப் போராடும் தவறான படமாகிறது . 
 
பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிக்கப்பட  வைக்கும் திரைக்கதை . 
 
பிரச்னையில்  முதன்மைக் குற்றவாளிகள் யார் ?
 
கார்ப்பரேட் சுரங்கம், அதற்கு துணை போன அரசுகள்,  அரசியல்வாதிகள், வங்கிகள் ஆகியவையே 
 
ஆனால் அவர்கள் பற்றி படம் பேசவே இல்லை. போலீசை மெயின் வில்லனாக காட்டுகிறது . 
 
இவ்வளவு அறிவார்ந்த கருத்தியல் கொண்ட விவாசாயிகள் குழு ஆட்களுக்கு அது புரியவில்லையா?
 
மேற்சொன்ன நிறுவனங்களின்  எலும்புத் துண்டுகளுக்ககாக அலையும் சுயநல ஜந்துவாக போலீஸ் இருப்பதால் விவசாயிகளின் கோபம் நியாயம் என்றாலும், 
 
 என்கவுண்டர் போலீசின் வாரிசுகள் மேலும் ஹீரோ மேலும் விவசாயிகளுக்கு கோபம் இருப்பதில் விவசாயிகளின் அறம் சார்ந்த நியாயம் இருந்தாலும், 
 
 தென் சென்னை போலீஸ் அனைவரையும் ஏன் விவசாயிகள் கொல்ல வேண்டும்.?
 
அவர்களில் நல்ல போலீஸ் இருக்கலாம் என்ற ஹீரோவின் கேள்விக்கு   அந்த விவசாயக் கூட்ட தலைவரின் பதிலில்  பதில் நான்சென்ஸ்.  நியாயம் இல்லை.கேரக்டர் அசாசினேஷன். 
 
முழுமையும் தெளிவும் இல்லாத கேரக்டர் வார்ப்பு . ரசிகனை ஏமாற்றும்படி திரைக்கதையை வளைத்து ஜெயித்து விடலாம் என்ற மமதை. 
 
சரி .. இவ்வளவு திட்டம் போடும் விவசாயிகள் குழுவுக்கு அறிவும் இல்லை,
 
தென் சென்னை போலீசை முழுக்க காலி பண்ணினா அவர்கள் இமெஜ் குறையும் ; மக்களின் பயம் போகும் என்று அடிமுட்டாள்தனமாக கூறுகிறான் விவசாயிகள் தலைவன்.
 
அப்படி கொல்லப்பட்டால் தமிழ் நாடு முழுக்க போலீஸ் விவசாயிகளின் மீது வஞ்சம் வைக்கும். இப்பவே  பொழுதுபோக்காக கொடுமைப் படுத்தும் போலீஸ் அப்போ நினைச்சப்ப எல்லாம் போலீசை தாக்கும் . விவசாயிகள் அப்பாவிகள் ஏழைகள் இன்னும் கொடூரமாக  பாதிக்கப்படுவார்கள். 
 
அது நிச்சயமாக விவசாயிகளுக்கு நல்லது  இல்லை என்று இந்த தீவிரவாத விவசாயிகளுக்கு தெரியாதா ? ஆக அவன் திட்டமே விவசாயிகளுக்கு எதிரான ஒரு  தப்பான திட்டம்தான்.  .
 
படத்தில் ஹீரோவின் பிரச்னைகளை காட்சிகளாக நீண்ட நேரம் காட்டி விட்டு,  தீவிரமான நிஜமான முக்கியமான  விவசாயிகள் பிரச்னையை  சட்டுன்னு கேரிகேச்சரில் காட்டி அதனால் ”அவிய்ங்க கெட்டவிங்க.. போலீஸ் பாவம்”  என்ற போங்கு ஆட்டம் வேறு . மக்கள் ஒன்றும் மடையர்கள் இல்லை டீம். 
 
அதையே திருப்பிப் போட்டு இருந்தால் –  விவசாயிகள் பிரச்னை விலாவாரியாக சொல்லப்பட்டால் , விவசாயி குழுவா வில்லன்?  நீங்க செய்யாட்டியும் ரசிகர்கள் திருப்பிப் போட்டு அவர்களாகவே பார்த்துக் கொள்வார்கள் 
 
பறவைகளை காக்கும் அக்ஷய் குமாரை வில்லனாக காட்டி விட்டு , செல்போனைக் காப்பாற்றும் ரஜினியை ஹீரோவாக காட்டியதால் தான் ஷங்கரின் 2.o  நக்கிக் கொண்டு போனது .
 
ரஜினி அக்ஷய் குமாருக்கே அந்த கதி என்றால் அதர்வாவுக்கும் அஷ்வின்  காக்கமனுக்கும்? ஊரே சொல்லும். 
 
தணல் படக் குழுவின் பிரச்னை என்ன தெரியமா?
 
இந்தப் படத்தை நியாயமாக எடுத்தால் அது விஜய்யின் கத்தி படத்தின் ஈயடிச்சாங் காப்பி மலிவுப் பதிப்பு என்று ஓப்பனாக தெரிந்து விடும் .
 
அதற்காக சமூக விசயங்களில் மக்களை ஏமாற்றி முட்டாளாக்கி ஜெயிக்க முடியுமா? இந்த ஆட்டிடியூடே அயோக்கியத்தனமாக இருக்கு .
 
கத்தி  படத்தில் கார்ப்பரேட் கம்பெனியிடம் நியாயம் கேட்கும் விஜய்யை,  ஒரு எலும்புத் துண்டு வெறிநாய் போலீஸ் பொளேர் என்று கன்னத்தில் அறைவானே ,அப்படி ஓர் உருப்படியான காட்சி  ஒன்று கூட இல்லை இந்தப் படத்தில் .
 
ஹீரோவின் அம்மா மருத்துவமனையில் செத்தால் அவன் குடும்பத்துக்கு மட்டுமே நஷ்டம். ஆனால் ஒரு  விவசாய குடும்பத்தின் அழிவு விவசாயத்தின் அழிவு நாளை போலீஸ்காரன் குடும்பத்துக்கும் நஷ்டம் அவன்தான் விளைவிக்க வேண்டும் . எனில் யார் தரப்பு முக்கியம்? 
 
 சொல்லப்படக் கூடாத வகையில் சொல்லப்பட்ட சொல்லக் கூடாத படம் இது . 
 
முதலில் இது ஆக்ஷனில் சொல்லப்பட வேண்டிய படமே இல்லை.  இது ஒரு கருத்தியல் மோதல் . 
 
கருத்தியல் விவாதத்தின் ஒருவரின் கருத்தை எதிர்த்தரப்பு ஏற்க வாய்ப்பு உண்டு . ஆனால் கட்டி உருண்டால் பகைதான் வளரும். 
 
கேப்டன் பிரபாகரன் படத்தில் மன்சூர் அலிகான் செத்ததொடு படம் முடிந்தால் என்ன ஆகி இருக்கும். படம் பண்டல். அப்புறம் வரும் விவாதம் . வீரப்பனா நிஜ குற்றவாளி என்ற கேள்வி . அதுதான் சிந்தனை . அதுதான் வெற்றி . 
 
முப்பது வருஷம் முன்னாலேயே அப்படி எழுதினால்,  இப்ப எவ்வளவு முன்னேற்றம் இருக்கணும்?
 
தணல் படத்தில் கைகால் எல்லாம் நல்லா யூஸ் பண்ணி இருக்காங்க. ஆனா மூளை எங்கே? 
 
இன்னிக்கு விவசாயம் என்ன ஆச்சு? ஒரு காலத்தில் அவர்களுக்கு ஆதரவாக  இருப்பது போல சினிமா நடிக்கவாவது செய்தது . ”இப்போ சாவுடா”  என்று சினிமாவிலும் கூட சொன்னா என்ன நியாயம் . 
 
இந்திரா படத்தில் இயக்குனர் நடிகை  இயக்குனர் சுகாசினி மாதிரி, ‘  நெல்லு நாற்று விடாமல் அப்படியே வயலில் விதைக்கலாம்’ என்று காட்சி  வைத்த அறியாமையின்  வார்ப்பு இந்தப் படக் குழு .
 
அரிசி வெள்ளையாக விளையுது , புழுங்கல் அரிசியும் பச்சை அரிசியும் தனித்தனியாக விளையுது என்று நம்பி சாப்பிட உட்காரும் கூட்டத்தை எல்லாம் சார்ந்து படம் எடுத்தால் எப்படி? 
 
இன்று வெளியே போலீசின் மனப்பான்மை எப்படி இருக்கு 
 
இன்று போலீஸ் வேலைக்கு வரும் ஒரு புதிய நபர்,  பப்ளிக்கை முதன் முதலில் எப்படி எதிர்கொள்கிறான் .  அதை அவர்களுக்கே தெரியாமல் சர்வே எடுங்கள்.  அந்த நிஜ விகிதாச்சாரத்தை படத்தின் காட்சியில் வையுங்கள் . அதற்கேற்ப  திரைக்கதை கிளைமாக்ஸ் வையுங்கள் . அப்பதான் படம் தியேட்டரில் ஓடும். அதை விடுத்து இப்படி நேர்மாறாக கூத்தடித்தால் எப்படி?
 
”இல்லீங்க . இப்படி எதையோ எடுத்துட்டோம் . இனி மாத்த முடியாது . இதை வச்சு எப்படி நல்லபடியா படத்தை முடிக்கிறது?” என்று கேட்டால்,  அதற்கும் வழி இருக்கு. ஆனால் செய்யல 
 
போலீசாரை  மொத்தமாக வெடி வைத்துக் கொல்ல  பட்டன் அழுத்தப்பட இருக்கிறது . பட்டனை அழுத்துவது போலக் காட்டி அதன் விளைவைக் காட்டாமல் , டைட்டில் போட்டு படம் முடிக்கலாம் . சென்சார் விடாது என்றால்  பட்டனை அழுத்தப் போகும் கையை நிறுத்தி ஃபிரீஸ் செய்து. ”நீங்களா இருந்தா என்ன செய்வீங்க?”  என்று படத்தை முடித்து, 
 
  ரசிகன் கதையோடு வீட்டுக்கு வரும்படி செய்து இதை வெற்றிப் படமாகவே ஆக்கி இருக்கலாம். அல்லது அந்த சிறுவன் எதாவது செய்யலாம். அவன் பட்டனை நோக்கி  ஒரு கல்லை ஏறிய , அது பட்டதா  என்று காட்டாமல் படத்தை முடிக்கலாம் . நல்ல முடிவு அதில் வரலாம். அதுக்கு எல்லாம் யோசிக்கணும்.  ஓ பி அடித்தால் முடியாது. 
 
டிரைனேஜ், சுரங்கம் என்பதை வைத்து….  ஆங்கிலத்தில் அதற்கு பெயர் TUNNEL, தமிழில் தணல் என்றால் நெருப்பு என்று அழுத்தமாக  எதாவது செய்வார்கள் என்று  யோசித்துக் காத்திருந்தால், “யோவ் … படம் எடுத்த நாங்களே யோசிக்கல. படம் பாக்கற நீ எதுக்கு யோசிக்கிற என்கிறார்கள் . நமக்கு ஏன் வம்பு ?
 
தணல்….. சாம்பல். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *