அறிமுக இயக்குனர் அருள் இயக்கி தயாரித்து ஹீரோவாக நடிக்க, காஷிமா, அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, சிறுமி பூசிதா, மகாராஜன், முருகானந்தம் நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் காதம்பரி .
புகழ் பெற்ற வட இந்திய அரசர் ஹர்ஷ வர்த்தனரின் வரலாற்றை எழுதிய பாணபட்டர் எழுதிய கற்பனைக் காதல் நூல் காதம்பரி . பதினைந்தாம் நூற்றாண்டில் இது தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டது
அப்படி ஒரு பெயரை வைத்திருக்கும் திரைப்படமான காதம்பரியின் கதை என்ன ?
காட்டு வழி பயணம் செய்யும் இரண்டு இளைஞர்கள் மற்றும் மூன்று இளம்பெண்கள் எதிர்பாராத சிறு விபத்தில் சிக்குகிறார்கள். சிரம பரிகாரம் செய்து கொள்ள ஒரு காட்டு பங்களாவுக்குள் போகிறார்கள் .
அங்கே ஒரு வயதான – வாய் பேச முடியாத –நபர் ஒரு சிறுமியை ஒரு பெட்டிக்குள் அடைத்து வைத்திருக்க, அவரை முடக்கி அந்த சிறுமியை மீட்கிறார்கள் .
நல்லது செய்தோம் என்று நினைத்தால் அப்புறம்தான் தெரிகிறது விபரீதம். அந்த சிறுமியை அந்தப் பெரியவர் நாற்பது வருடம் முன்பு அந்தப் பெட்டியில் அடைத்து வைத்துள்ளார்.
காரணம் அந்த பெண்ணின் உடலில் காதம்பரி என்ற சூனியக்காரியின் ஆவி இருக்கிறது .
காதம்பரி ஆவி ஒருவர் உடலில் வந்து விட்டால் உடனே அந்த நபர் தன் எதிரில் உள்ள யாரை வேண்டுமானாலும் கொல்வார். அதைத் தடுக்க காதம்பரியின் ஆவி உள்ள நபரை யாரவது கொன்றாலும் போச்சு.
கொல்லப்பட்டவர் செத்து விழ, கொன்றவரும் செத்து அவர் உடலுக்குள் காதம்பரி ஆவி நுழைந்து அடுத்த ஆளை கொல்ல ஆரம்பிக்கும் .
இப்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அஆட்கள் உடலுக்குள் காதம்பரி ஆவி மாறி மாறிப் போய் விட்டால் காதம்பரிக்கு பெரும் சக்திகள் வந்து விடும். அது உலகுக்கே தீமையாகும்.
ஆக, சிறுமியின் உடலில் உள்ள காதம்பரி தன் தந்தையான பெரியவரைக் கொன்று – நாற்பது வருடத்துக்குப் பிறகு தன் தாவலை தொடர அப்புறம் என்ன ஆனது என்பதை , ஹாரர், திகில், காதல் , பாசம் குழைத்து சொல்லி இருக்கிறார் , தயாரிப்பாளர் – இயக்குனர்- நாயகன் அருள் .
முதல் பாதி மிக பலவீனம் . சில பிரேம்களில் – ஒரு சோபா பகுதியில் மட்டும் படம் நிலையாக நிற்கிறது .
அட போப்பா என்று சலிப்பு வருவதற்கு முன்பு இரண்டாம் பகுதியில்,
எதிர்பார்க்கவே முடியாத நிலையில் அட என்று ஆச்சர்யப்படும்படியாக ஒரு கதை சொல்ல முயல்கிறார்கள் .
ஆனால் அதை நன்றாக- சிறப்பாக திரை மொழி தெரிந்து சொல்லி இருக்கலாம்.
காதம்பரியின் முன் கதை சொல்லி இருக்கலாம். அவளுக்கு உருவம் கொடுத்து இருக்கலாம்.
காதம்பரி எத்தனை உடல்கள் தாவினால் என்ன சக்தி வரும் அதனால் என்ன தீமை வரும் என்பது குறித்த தெளிவை திரைக்கதையில் கொடுத்து இருக்கலாம் .
காதம்பரி ஆவி புகுந்து அடுத்தவரை கொல்ல வருபவரை யார் கொன்றாலும் கொன்றவர் செத்துப் போவார் என்பது அட்டகாசமான அல்வாத்துண்டு டுவிஸ்ட். அதை ரசித்து சாப்பிட்டு அருமையான கிளைமாக்ஸ் கொடுத்து இருக்க வேண்டும்.
அவர்கள் எடுத்துக் கொண்ட கதைப் போக்கிலேயே ஒரு நல்ல கிளைமாக்ஸ் இருக்கிறது . அதை அநியாயமாக விட்டிருக்கிறார்கள்.
அந்த கிளைமாக்சை காதம்பரியின் பிளாஷ் பேக்கோடு தொடர்புப்படுத்தி இருக்க நிறைய வாய்ப்பு இருந்தும் செய்யவில்லை .
இதை எல்லாம் குறைவான பட்ஜெட்டிலேயே செய்து இருக்க முடியும்.
அதோடு நல்ல ஒளிப்பதிவு, நல்ல பின்னணி இசை , நல்ல நடிப்பு எல்லாம் கிடைத்து இருந்தால்(சிறுமியும் பெரியவரும் மட்டும் நடிப்பில் கவனிக்க வைக்கிறார்கள். ) காதம்பரி சும்மா கதற விட்டிருப்பாள் . (பெட்டர் லக் நெக்ஸ்ட் படம் அருள் . )
எனினும் இரண்டாம் பகுதியிலும் கடைசி நேர காதல் நெகிழ்விலும் கவர்கிறாள் காதம்பரி
