சக்தி சினி புரடக்ஷன்ஸ் சார்பில் முருகானந்தம் வீர ராகவன் தயாரிக்க முனீஷ்காந்த், காளி வெங்கட், மைம் கோபி, ஹரி கிருஷ்ணன் , சுவாதி முத்து, ஸ்ரீலேகா ராஜேந்திரன் நடிப்பில் ராஜா குருசாமி எழுதி இயக்கி இருக்கும் படம்.
ஆபாசமில்லாத கண்ணியமான கிராமிய ஆடல் பாடல் நடனக் குழு நடத்தி பல கலைஞர்களுக்கு உதவி செய்தபடி, கல்யாணம் செய்து கொள்ளாமலே வாழும் ஒருவர் ( முனீஷ்காந்த்). அந்தக் குழுவில் உள்ள ஓர் ஒழுக்கமான நடனப் பெண்மணியிடம் கந்து வட்டிக்காரன் ஒருவன் தவறாக நடக்க முயல, அவனை நடனக் கலைஞரின் தம்பி (ஹரி கிருஷ்ணன்) அடிக்கிறான். ஊர்த் தலைவராக உள்ள ஒரு மோசமான நபரின் ( மைம் கோபி) கையாள அந்தக் கந்து வட்டிக்காரன் .
அந்த ஊர்த்தலைவரின் குழுவில் உள்ள ஒரு டுபாக்கூர் பாடகன் . அவனுக்கு பிரம்மச்சாரி கலைஞருக்கும் ஆகாது . அந்த டுபாக்கூர் பாடகனின் தங்கையை , பிரம்மச்சாரி கலைஞரின் தம்பி காதலிக்க, ஒரு நிலையில் ஊர்த் தலைவனுக்கும் கலைக் குழுவுக்கும் முட்டிக் கொள்கிறது . நாட்டுப்புறக் கலைஞரின் தம்பி நாட்டுப்புற நிகழ் கலைகளை மேம்படுத்தி தரக் கூட்டல் செய்து கற்றுக் கொடுத்தல் மூலம் வளர்க்க விரும்புகிறான்.
ஆனால் ஊர்த் தலைவர் இந்த நாட்டுப்புறக் கலைக்குழுவின் தொழில் மற்றும் தனி வாழ்வில் சிரமங்களை ஏற்படுத்த, அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப் படம் .கிராமிய கலைகள் அவற்றின் சிறப்பு, அந்தக் கலைஞர்கள் படும் சிரமங்கள் அவமானங்கள், அதையும் மீறி அவர்கள் வாழும் கண்ணியமான வாழ்க்கை, அந்தக் கலைகளைக் காத்து வளர்த்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும என்ற நோக்கம் இவற்றைப் பேசுவது இந்தப் படத்தின் சிறப்பு.
படத்தின் மிகப் பெரிய பலம் ஹென்றி இசையில் இயக்குனரே எழுதி இருக்கும் தேனினும் இனிய டூயட் பாடல்கள். ஒரு முறை கேட்டால் மீண்டும் மீண்டும் முணுமுணுக்க வைக்கிறது . அருமை .
அடுத்த பலம், பாலைவனத்தில் பசுஞ்சோலையாக உலாவரும் கதாநாயகி சுவாதி முத்து . சட்டென்று மனசுக்கு நெருக்கமாகும் அழகும் தோற்றமும் எளிய நடிப்புமாய் ஈர்க்கிறார் .
திண்ணையில் முடங்கிக் கிடக்கும் ஆத்தாவுக்கும் கிராமியக் கலைஞருக்குமான பாசம் ஓர் அழகிய கவிதை. பிரம்மிப்பூட்டும் நடிப்பால் அசத்தி இருக்கிறார் ஆத்தாவாக வரும் ஸ்ரீலேகா ராஜேந்திரன்.
சுடுகாட்டில் மாலையை தப்பாகப் போட்டு விட்டு மீண்டும் எடுத்துக் கொண்டு ஓடிவருவது போல சில சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும் உண்டு . அந்தக் காட்சிகளில் தனது மண் மன முகம் கொண்ட எளிய நடிப்பால் கவனிக்க வைக்கிறார் ராஜ்குமார்.
படத்தின் மிகப் பெரிய பலவீனம் முனீஷ்காந்த். கதைப்படி அவர் தலைமை நடனக் கலைஞர் . ஆனால் ஆடல் காட்சிகளுக்கான இசை சீறிச் செல்ல , நாலு கிலோ மீட்டர் பின்னால் துரத்திக் கொண்டு ஓடுபவரைப் போல, அவர் ஆடுவதாக எண்ணி ஏதோ செய்கிறார். சித்திரம் பேசுதடி படத்தில் வரும் வாலை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலில் ஒருவர் உட்கார்ந்தபடி வயிற்றுக்கு மேலே கைகளை மட்டும் ஆட்டியபடி ஆடுவாரே , அவர் இவருக்கு மேல் .
ஹரி கிருஷ்ணனும் செயற்கையாக நடிக்கிறார் .
மைம் கோபி, காளி வெங்கட், நடனப் பெண்ணாக வருபவர் .. இவர்கள் ஒகே .
இப்படியாக சில நல்ல விஷயங்கள் , பல போதாமைகள் கொண்ட படமாகி விட்டது இந்தப் படம்
.