ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அரவிந்த் வெள்ளை பாண்டியன், அன்பரசு கணேசன் தயாரிப்பில் வினோத் குமார் தங்கராசுவின் இணை தயாரிப்பில் யோகிபாபு, இனியா, மொட்டை ராஜேந்திரன், சென்றாயன், நமோ நாராயணன், பால சரவணன் , மகேஷ், மாரிமுத்து மற்றும் பலர் நடிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் தூக்கு துரை.
இந்த மஞ்சு நாத் இதற்கு முன்பு அட்வெஞ்சர் திரில்லர் படமான ட்ரிப் படத்தை இயக்கியவர்
PRE எனப்படும் (Pre Royal Entertainer ) வகையைச் சேர்ந்த படம் இந்த தூக்குதுரை
பழைய பல்லவப் பகுதி அப்புறம் காஞ்சிபுரம் மாவட்டம் , இப்போ திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பழங்கால மன்னர் மாளிகையில் உள்ள கிரீடத்தை கொள்ளையடிக்க ஒரு குழு முயல்கிறது . கலாச்சாரம் மாறாமல் பழைய மாண்புகளைக் கொண்டாடும் அந்த ஊரில் நடக்கும் திருவிழா பண்டிகைகளை மற்றும் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை யூ டியூபுக்காக படம் பிடிக்கும் குழு வருகிறது .
தவறான எண்ணத்தில் வந்தவர்களுக்கு அந்த ஊரில் ஏற்பட்ட நிகழ்வுகள் அதன் விளைவுகள் என்ன என்பதே படம் என்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் .
யோகிபாபு , இனியா இருவருக்கும் கதையில் மிக முக்கியத்துவம் இருந்தாலும் மற்ற எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று கூறும் இயக்குனர் தொடர்ந்து,
” படத்தில் பதினெட்டாம் நூற்றாண்டு நிகழ்வு ஒன்று அனிமேஷன் காட்சிகளாக வருகிறது. பிறகு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூறுகள் கால கட்டமும் இரண்டாயிரத்து இருபதுகள் கால கட்டமும் படத்தில் வருகிறது .
கதை பிடித்துப் போய் யோகிபாபு முழு ஒத்துழைப்புக் கொடுத்து நடித்தார் , இனியா உட்பட அனைவருமே பாத்திரத்தை உணர்ந்து முழு ஒத்துழைப்புக் கொடுத்து நடித்தது எனக்கு பெரிய பலமாக இருந்தது
கிரீடக் கொள்ளை முயற்சி என்பது படத்தின் ஒரு பகுதிதான் . அதையும் மீறி கிராமியப் பின்னணியில் பல சுவையான விஷயங்கள் படத்தில் உண்டு .
ரவிவர்மா என்ற ஒளிப்பதிவாளரை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்துகிறோம் . அவர் நான் குறும்படம் இயக்கிய காலம் தொட்டே என்னோடு பணியாற்றியவர் . . . கே எஸ் மனோஜ் இசை அமைத்து இருக்கிறார். தீபக் எஸ் துவாரகநாத் படத் தொகுப்பு செய்கிறார். . படம் விரைவில் திரைக்கு வரும் ” என்றார் இயக்குனர்
படத்தின் இணை தயாரிப்பாளர் வினோத்குமார், ” படம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்த போது , அது குடும்பத்தோடு பார்க்கக் கூடிய – முகம் சுளிக்க வைக்காத பொழுது போக்குப் படமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். டென்னிஸ் மஞ்சுநாத் சொன்ன கதை அப்படியே இருந்தது. எனவே முழு மனதோடு தயாரித்தோம். படம் நாங்கள் விரும்பியபடி கண்ணியமான பொழுதுபோக்குப் படமாக வந்திருப்பதில் மகிழ்ச்சி ” என்றார் .
படத்தின் முன்னோட்டத்தைத் திரையிட்டுக் காட்டினார்கள். இருவரும் சொன்ன விசயங்களுக்கு ஏற்றபடியே இருந்தது முன்னோட்டம்
