F3 Films சார்பில் ஃபிரயா, ஃபெனி, பெலிக்ஸ் ஆகியோர் தயாரிக்க,
கெவின் , ரேணு செளந்தர், ருக்மணி பாபு, பாபு ரஃபீக் ஆகியோர் நடிப்பில்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி S.குமார் இயக்கி இருக்கும் படம் கடத்தல்காரன்.
படம் ரசிகர்களின் மனதைக் கடத்துகிறதா? இல்லை நேரத்தைக் கடத்துகிறதா?
பேசுவோம்.
திருட்டையே தொழிலாகக் கொண்ட ஒரு கிராமம்.
அந்த கிராமத்து இளைஞர்கள் சிலர் வேறொரு ஊரில் ஒரு கல்யாண வீட்டில் திருடப் போகிறார்கள்.
கட்டாயத் திருமணத்தில் இருந்து தப்பிக்கத் திட்டமிடும் அந்த மணப்பெண் (ரேணு செளந்தர்), காதலன்(கெவின் ) அனுப்பிய காரில் ஏறுவதற்குப் பதில் தவறுதலாக திருடர்கள் நிறுத்தி இருந்த காரில் ஏறி விடுகிறாள்.
கார், திருடர்களின் ஊருக்கு வந்து விடுகிறது.
தவிர மணப்பெண் கழுத்தில் உள்ள நகை எல்லாம் கவரிங் என்று அறிந்து கோபப்படும் ஊர்ப் பெரியவர், பெண்ணை ஊருக்குள்ளேயே வைத்துக் கொண்டு அடுத்த கட்டம் பற்றித் திட்டமிடுகிறார்.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு அந்த ஊரில் வெறியாட்டம் ஆடிய ஒரு போலீஸ் அதிகாரியின் மகள்தான் இந்த மணப்பெண் என்பது தெரிய வருகிறது.
பெண்ணை வைத்து போலீஸ் அதிகாரியை ஊருக்குள் வரவைத்து , பழி வாங்க ஊர்ப் பெரியவர் திட்டமிட, நடந்தது என்ன?நாயகியின் காதலன் என்ன ஆனான்? காதல் என்ன ஆனது என்பதே இந்தக் கடத்தல்காரன்.
மலையாளக் கலைஞர்கள் எடுத்து இருக்கும் தமிழ்ப் படம் .
கடத்தல்காரன் என்பது ஒற்றை வார்த்தை. ஆனால் அதை டைட்டிலில் கடத்தல் காரன் என்று இரட்டை வார்த்தையாகப் பிரித்துப் போடுவதில் தெரிகிறது மொழி அலட்சியம் .வசனங்களிலும் முழுமையும் மண் தன்மையும் இல்லை .
முன்பே பலமுறை தமிழ சினிமா பார்த்த கதைதான். திரைக்கதையும் வெகு சாதாரணம்.
நடிக நடிகையர் நடிப்பில் பெரும் குறைபாடு. கதாநாயகனின் நண்பனாக ஆகி அவருக்கு உதவி சிக்கலில் சிக்கிக் கொள்ளும் பாபு ரஃபீக் தவிர மற்ற அனைவரின் நடிப்பிலும் இயல்பின்மை.
கதாநாயகியை விட கதாநாயகியின் தோழியாக வரும் ருக்மிணி அழகாக இயல்பாக நாயகி கதாபாத்திரத்துக்கு பெட்டராக இருக்கிறார் .
அட்டகாசமான லொக்கேஷன்களில் படமாக்கி கவர்கிறார் இயக்குனர் குமார் . ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமுக்கு பழிபாவம் வராமல் காப்பதே அந்த லொக்கேஷன்கள்தான்.
படம் முழுக்க எளிமையான அழகான பெண்கள் வருகிறார்கள் .
L.V.கணேஷ் இசையில் முத்து விஜயன், கெளசல்யன் வரிகளில் பாடல்கள் இனிமை மற்றும் அருமை .(ஆனால் பின்னணி இசை அமைத்தவர் ஏதோ வாசித்து இருக்கிறார். )
ஆங்காங்கே காமெடியும் ஒகே .
நண்பன் கல்யாணம் செய்து வரும் ‘பெண்’, யார் என்பது சட்டென்று உடனே புரியாத அளவுக்கு ஆரம்பத்தில் ஹீரோவுக்கு கம்மியான காட்சிகள் வைத்திருக்கும் வகையில் கவனிக்க வைக்கிறார் இயக்குனர் குமார். சபாஷ்.
மிகக் குறைவான பட்ஜெட்டில் ஒரு முழு படம் எடுத்து இருப்பதையும் பாராட்டலாம் .
அதை விட முக்கியமாக , நாயகனுக்கு தமிழ் என்று பெயர் வைத்து இருப்பதற்காகவும்…
ஒரு போலீஸ் அதிகாரிக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து , அதற்குப் பொருத்தமாக ”பிரபாகரன் மீண்டு வருவார்” என்று வசனம் வைத்தமைக்காகவும் இயக்குனருக்கு ஒரு உம்மா .
