கல்கி 2898 AD @ விமர்சனம்

வைஜயந்தி பிலிம்ஸ் சார்பில் அஸ்வினி தத் தயாரிக்க, கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸ் ,தீபிகா படுகோனே, பசுபதி, ஷோபனா, திஷா பதானி நடிப்பில் நாக் அஷ்வின் இயக்கி இருக்கும் படம் . 

இந்த நாக் அஷ்வின் இதற்கு முன்பு இயக்கிய படம் மகாநடி. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது . பெயரே சொல்லும் இது நடிகை சாவித்ரி பற்றிய படம் என்று . சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு என்று அந்தப் படக் குழு சொல்லிக் கொண்டாலும் அது பல விதங்களில் உண்மைக்குப் புறம்பான படம். 

எனவே கல்கி 2898 AD பற்றிய விமர்சனத்தைப் பார்க்கும் முன்பு நடிகையர் திலகம் படம் எப்படி இருந்தது என்பதை இங்கே நினைவு கூர்வது அறிவுடைமை. 

சாவித்ரியின் கணவராக ஊர் உலகத்தில் அறியப்பட்ட நடிகர் ஜெமினி கணேசன் சில  மனைவிகள், பல காதலிகள், பலப் பல ஆசை நாயகிகள், மேலும் பல ஓரிரவுப் பெண்கள் என்று வாழ்ந்தவர்தான் . அதை மறைக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. ஆனால் எண்ணிக்கையில் ஜெமினி அளவுக்கு இல்லை என்றாலும் சாவித்ரியும்  பாலியல் விஷயத்தில் ஒரு சேலை கட்டிய ஜெமினியே . 

அன்றைய கால கட்டத்தில் நடிகை சாவித்ரிக்கு இருந்த குடும்பப் பாங்கு மற்றும் பக்திப் படங்களில் நடிக்கும் இமேஜ் பாதிக்கப்பட்டு அதனால் அந்தப் படங்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதால் அன்றைய கோடம்பாக்கம் சாவித்ரியின் பாலியல் பாய்ச்சல்களை  மூடி மறைத்தது . அதன்  விளைவாக எல்லாப் பழியும் ஜெமினி மீது விழுந்தது . 

சாவித்திரி இறந்து ரசிகர்களின் கண்ணீரும் வற்றிய பிறகுதான் மெல்ல மெல்ல சாவித்திரி பற்றிய விஷயங்கள் வெளியே வந்தன . 

ஆனால்  மகாநடி படத்தில்,   வாயில் விரலை வைத்தால் கடிக்க வேண்டும் என்பதையே சாவித்திரிக்கு கற்றுக் கொடுத்தது முதல் சாவித்திரி செய்த சகல குற்றங்களுக்கும் ஜெமினியே காரணம் என்பது போல அநியாயமாகக் காட்டியிருந்தார்கள் . சரி.. எப்படியோ.. கணவன் என்று ஆன பிறகு சாவித்ரியின் வாழ்க்கைக்கு ஜெமினிதான் பொறுப்பு என்பதால், ஏதோ ஒரு புள்ளியில் அதில் இருந்து ஜெமினி தவறியதால்…  மற்ற அநியாயப் பழி பாவங்களையும் ஜெமினி ஏற்றுக் கொண்டு போகட்டும் என்று சமாதானம் அடையலாம் என்றால்… 

இதுதான் சாக்கு என்று ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும்  தமிழ் சினிமா கலைஞர்களையும் அந்தப் படத்தில் வன்மத்தோடு கேவலப்படுத்தியவர்தான் இந்த நாக் அஷ்வின்  

சாவித்ரியை மிகச் சிறந்த நடிகையாகி ஆந்திராவும்  கொண்டாடும் அளவுக்கு உயர்த்திய தமிழ் சினிமா படைப்பாளிகள் ஆரூர்தாஸ், கே எஸ் கோபாலகிருஷ்ணன் போன்றவர்களை,  தொழில் தெரியாதவர்கள் , கோமாளிகள் என்று கேவலமாக படத்தில் சித்தரித்து இருப்பார் இந்த நாக்  அஷ்வின் .  தமிழ் சினிமாவைக் கேவலப்படுத்தும் காட்சிகள் வசனங்கள் அதில் உண்டு . 

சாவித்ரிக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்தது . அவரை ஏமாற்றியது , அவர்  நஷ்டப் படக் காரணமானது எல்லாமே தமிழ் சினிமா ஆட்கள் என்று வாய் கூசாமல் பொய் சொன்ன படம் அது  

ஆனால் உண்மை என்ன ?

சாவித்திரி தன் தந்தை என்று சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்த நபர் உண்மையில் அவர் தந்தையே இல்லை . அவரே சிறு வயதில் சாவித்ரியிடம் அத்துமீறிய சம்பவங்கள் உண்டு என்கிறார்கள் . அந்த நபரின் உண்மையான மகள்தான் சாவித்ரியின் அக்காவாக அறியப்பட்டவர் . 

சாவித்ரியின் சம்பாத்தியத்தில் அந்த வினோத அப்பாவும் விவகார அக்காவும்  எப்படி தின்று கொழுத்தார்கள் என்பது பற்றி  அப்போதே சாண்டோ சின்னப்ப தேவர் உட்படப் பலர் கண்டு கோபப்பட்டு இருக்கிறார்கள் 

இப்படி தனது சம்பாத்தியத்தை அனுபவிப்பதோடு தன்னையும் கொடுமைப்படுத்திய அவர்களிடம் இருந்து தப்பிக்க சாவித்திரி சமயம் தேடியபோது, தானே போய் சிக்கியவர்தான் ஜெமினி . 

ஆரூர்தாசை அப்படி மதித்தவர் சாவித்திரி . கே எஸ் கோபால கிருஷ்ணனையும் அப்படியே . 

ஆனால் பணம் புகழ் அந்தஸ்து என்று  இங்கே உச்சியில் இருந்த சாவித்ரியிடம் மஞ்சள் குளிக்க ஆந்திராவில் இருந்து வந்த உறவுக்காரக் கூட்டம்  ஒன்று, அங்கே  தெலுங்கில் ஓடாமல் போன ஒரு பாடாவதி குப்பைப் படத்தை தமிழில் சாவித்ரியை எடுக்கச் சொன்னது.  ஊத்திக் கொடுத்து ஊத்திக் கொடுத்து சம்மதிக்க வைத்தது .  “நீயும் ஒரு பானுமதி மாதிரி ஆகலாம்”  என்று சாவித்ரிக்கு டைரக்ஷன் ஆசை காட்டியது . 

நடிப்பில் எப்படி பானுமதி சாவித்திரி ஆக முடியாதோ அப்படியே தொழில்நுட்ப அறிவில் சாவித்திரி பானுமதி ஆக முடியாது . ஆனால் தனது ஆந்திர உறவுக்காரக் கூட்டம் அடித்த வேப்பிலையில் அருள் வந்து ஆடிய சாவித்திரி, அந்த பாடாவதி தெலுங்குப் படத்தை தமிழில் தயாரித்து இயக்கினார். 

ஜெமினி எதிர்த்தார் . எம் ஜி ஆர் தெலுங்கிலேயே ஓடாத அந்தப் படம் தமிழில் எப்படி ஓடும் என்றார். சிவாஜி இது உனக்குத் தேவையா என்றார் . அவரிடம் கண்ணீர் காட்டி  காட்டி வற்புறுத்தி சிவாஜியின் கால்ஷீட்டை வாங்கி படத்தை இயக்கினார் சாவித்திரி. சாகாவரம் பெற்ற பாடல்களை கண்ணதாசனும் விசுவநாதன் ராமமூர்த்தியும்  கொடுத்தார்கள் . ஆனாலும்  படம் படு தோல்வி. அப்படி ஒரு மொக்கைக் கதை அது . சாவித்திரி சுருண்டார் . 

தெலுங்கில் முதலில் அந்த படத்தை எடுத்து , அதில் பட்ட நஷ்டத்தை சாவித்ரியிடம் பிடுங்கிக் கொண்ட அந்த தெலுங்குப் படக்குழு சாவித்ரியை முழு குடிகாரி ஆக்கி விட்டு , பிறகு உதறியது . காசு போனதும் தெலுங்கு உறவுகள் விட்டுப் போயின . காசுக்கு அலைந்தார் சாவித்திரி . மலையாளப் பட உலகம் அவரை அரைகுறை ஆடையோடு நடிக்க வைத்து சப்புக் கொட்டியது . 

துடிதுடித்துப் போன எம் ஜி ஆர் ஒரு சாக்கு நிறைய பணத்தைக் கட்டி சாவித்ரியிடம்  கொடுத்து ”இனி அப்படி நடிக்காத எங்களால சகிக்க முடியல”  என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார் . 

ஆனால் அதை வைத்தும் சாவித்திரி குடித்தார் . சந்திரபாபுவுடன் கூத்தடித்தார் . கோமாவுக்குப் போனார் . அத்தனைக்குப் பிறகும் கணவனாக கடமைகள் செய்தார் ஜெமினி. 

இதை எல்லாம் இங்கே சொல்வது  மாபெரும் நடிகையும் மிகுந்த இரக்க சுபாவம் உள்ளவருமான சாவித்ரியைக் கேவலப்படுத்த அல்ல.  இப்போது   கல்கி 2898 AD படத்தை இயக்கி இருக்கும் நாக் அஷ்வின்  எப்பேர்ப்பட்ட வஞ்சகன் என்பதை சொல்லவே  இப்போது இங்கே இதை எல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது . 

நாக் அஷ்வின்  நடிகையர் திலகம் படத்தில் உண்மையைப் பேசி இருந்தால் நான் அப்போதும் இப்போது இங்கேயும்  சாவித்திரி பற்றிய இந்த உண்மைகளை பேச வேண்டி வந்திருக்காது. 

இவை எல்லாம் கூட ஒகே. 

சாவித்திரி என்றால் இன்னொரு கிரகத்துக்குப் போனாலும்  இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் பாசமலர்தான் . பாச மலர் என்றால் சிவாஜி . அதற்கு இணையாக சாவித்ரியை வைத்து எந்த மொழியிலும் எந்த மயிராண்டியும் ஒரு மயிரும் புடுங்கல.  

மலர்ந்தும் மலராத பாட்டுக்கும்  நடிப்புக்கும் படமாக்கலுக்கும் அந்த டைரக்டோரியல் ஷாட்களுக்கும்  இணையாக ஒரு பாட்டை இனி சினிமா உலகம் காண முடியாது . 

அந்தப் பாட்டில் சிவாஜியின் ஆளுயர ஓவியம் இருக்கும் . ஹாலிவுட் நடிகர்கள் எல்லாம் காலில் விழுந்து வணங்கும்படி அப்படி ஒரு ஸ்டைலாக அழகாக  ராயலாக அந்த ஓவியத்தில் சிவாஜி  இருப்பார் . 

மகாநடி படத்தில் அந்தப் பாடலை ஒரு ஷாட்டில் காட்டிய இந்த  நாக் அஷ்வின் அந்த சிவாஜி ஓவியத்தில் வேண்டும் என்றே சிவாஜியை அசிங்கமாக முட்டைக் கண்கள் கோணல் மூக்கு என்று வரைந்து வைத்திருப்பார் . என்ன ஒரு கேடுகெட்ட புத்தி 

உண்மையில் சிவாஜி குடும்பம் செருப்பைக் கழட்டிக் கொண்டு போயிருக்க வேண்டும் . ஆனால் நம்ம ஆளுக….. என்னத்தைச் சொல்ல…

அவ்வளவுதான் . அந்த நாக் அஷ்வின் அஞ்சு வருஷம் கழித்து கொண்டு வந்திருக்கும் இன்னொரு குப்பைதான் இந்த கல்கி 2898 AD. 

குருஷேத்திரப் போரில் துரோணரின் மகன் அஸ்வத்தாமன்  (அமிதாப் பச்சன்) , அர்ஜுனனின் மகனான அபிமன்யூ மனைவியும் மத்ஸ்யா தேசத்து இளவரசியுமான உத்ரா  வயிற்றில் வளரும் கருவை பிரம்மாஸ்திரத்தை ஏவி அழிக்கப் போக,  அதைப் பொறுக்க முடியாத கண்ணன்  அஸ்வத்தாமனின் செயல்களுக்காக கலியுகம் வரை மரணமில்லாத நிலை தந்து  சபிக்கிறான் . (இப்போது மரணம் இல்லா நிலை என்றால் அது பெரிய வரமாச்சே என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது )

”ஆறாயிரம் ஆண்டுகள் கழித்து என்னை நீ ஒரு முறை காப்பாற்றுவாய் . அப்போது உன் சாபம் தீரும்” என்கிறான்  நம் கண்ணன் 

அப்படியே ஆகிறது . 

அதாவது கிபி  2898. அதாவது இந்த 2024இல் இருந்து 874 வருடங்கள் ஆகி விட்டது . கங்கை வற்றி விட்டது . காசி மாநகரம் வறண்டு கிடக்கிறது. உலகிலேயே அந்த ஒரு நகரம்தான் இருக்கிறதாம் . மக்கள் வெம்மை வறுமையில் தவிக்கிறார்கள் . அந்தக் கூட்டத்தில் ஒருவன் பைரவா ( பிரபாஸ்).  மேலிடம் சொல்லும் ஆட்களை காசு வாங்கிக் கொண்டு பிடித்து ஒப்படைப்பவன் . 

மேலிடம்?

இந்த வறுமையான உலகுக்கு நேர் மாறாக தலை கீழ் முக்கோண வடிவில் ஒரு உலகம் அந்தரத்தில் தனி கிரகம் போல சிருஷ்டிக்கப்பட்டு காம்ப்ளெக்ஸ் என்ற பெயரில்   இருக்கிறது. அங்கே ஆறு, கடல், மலை, வளம், செல்வம், சந்தோஷம் .. என்று இன்று நாம் வாழும் உலகின் செல்வச் செழிப்பான வளமான இடம் போல இருக்கிறது . அந்த உலகத்தின் தெய்வ அரசனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு   இருப்பவன் சுப்ரீம் என்று அழைக்கப்படும் யஸ்கின் (உலக நாயகன் கமல்ஹாசன்) 

வறுமையான காசியில் ஆறாயிரம் ஆண்டுகளாக அஸ்வத்தாமன் முதுமைத் தோற்றத்தில் இருக்க, அதே போல இரண்டாயிரம் ஆண்டு முதுமையில் சுப்ரீமும் இருக்கிறார்.

வறுமையான காசியில் இருந்து ஒரு லட்சம் யூனிட்  என்ற அளவில் பணம் சம்பாதித்துக் கொடுத்தால்  காமப்ளக்ஸ்க்குள் நிரந்தரமாகப் போய் வளமாக வாழலாம் . தன்னிடம் உள்ள புஜ்ஜி என்ற  பேசும் கார் மூலம் அதற்காக முயல்கிறான் பைரவா 

காசியில் இருந்து பெண்களை மட்டும் காம்ப்ளக்ஸ் உள்ளே கொண்டு போய் அவர்களை செயற்கை முறையில் கர்ப்பமாக்கி கர்ப்பமான நிலையில் கர்ப்பப்பையில் ஊறும் உயிர் திரவத்தை தனது உடலுக்குள் செலுத்திக் கொண்டு மீண்டும் இளமையாகத் திட்டமிடுகிறார் சுப்ரீம் யஸ்கின்.  

காரணம் கல்கி பிறந்து வரும்போது அவனை எதிர்க்க யஸ்கினுக்கு  இளமை வேண்டும் . ஆனால் அப்படி கொண்டு வந்து செயற்கை முறையில் கருவுறும் எல்லாப் பெண்களின் கர்ப்பமும் நூற்றி ஐம்பது நாளில் கலைந்து விடுகிறது.

கல்கி அவதாரத்தில் கண்ணன் பிறந்து வருவான் . அவனைக் காத்து வளர்த்து சுப்ரீம் யஸ்கினை வீழ்த்த வேண்டும் என்று ஷம்பாலா   என்ற பகுதி மக்கள் , சுப்ரீம் யஸ்கினுக்குத் தெரியாமல் ஓர் எளிய வளமான உலகத்தை உருவாக்கிக் கொண்டு கல்கிக்காகக் காத்து இருக்கிறார்கள். அதன் தலைமை ஒரு பெண்ணிடம் ( ஷோபனா) . அதன் வீரப் படைத் தளபதி ஒருவர் (பசுபதி) 

இந்த நிலையில் காசியில் இருந்து பிடிக்கப்பட்டு காம்ப்ளக்ஸ் உள்ளே கொண்டு வரப்படும் ஒரு பெண்ணின்  (தீபிகா படுகோனே) வயிற்றில் உள்ள கரு நூற்று ஐம்பது நாளைக் கடந்து விடுகிறது . ஏனெனில் அந்தக் கருவில்தான் கண்ணன் கல்கி அவதாரமாக உருவாகி  இருக்கிறார்

அந்தப் பெண்ணைப் பிடித்து கருவில் உள்ள உயிர் நீரை எடுக்கும் போது ஒரு துளி மட்டும் எடுக்கப்பட்ட நிலையில்  அவளை ஷம்பாலா  ஆட்கள் காப்பற்றி விடுகிறார்கள் .ஷம்பாலாவுக்கு கொண்டு போகிறார்கள் .  ஆறாயிரம் ஆண்டுகளாக வாழும் அஸ்வத்தாமன்,  கல்கி அவதாரம் உருவாகி இருப்பதை உணர்ந்து,  அந்தப் பெண்ணைக் காப்பாற்றி,  கண்ணன் கல்கி அவதாரமாகப் பிறந்த உடன் அவர் மூலம்,சாப விமோசனம் பெற , அந்த கர்ப்பிணிப் பெண்ணை  பத்திரமாக ஷம்பாலா  கொண்டு போக உதவுகிறார் . கர்ப்பிணிப் பெண் ஷம்பாலா வை அடைகிறாள் . 

அவளை சிறை பிடிக்க சுப்ரீமின் நவீன அறிவியல் படைகள் விரைகின்றன . அவளைப் பிடித்துக் கொடுத்தால் ஒரு லட்சம் யூனிட் பெற்று நிரந்தரமாக காம்ப்ளக்ஸ் உள்ளே போகலாம் என்று பைரவாவும் சுப்ரீம் படைகளுக்கு உதவியாக போகிறான் . பெரும் போர் நிகழ்கிறது . 

ஒரு நிலையில் கர்ப்பிணியை சுப்ரீமின் படைகள்  சிறை பிடிக்கின்றன

காம்ப்ளக்ஸ் உள்ளே , முன்பே கர்ப்பிணியிடம் இருந்து எடுக்கப்பட்ட ஒரு  துளி உயிர் திரவத்தை சுப்ரீம் தன் உடலுக்குள் செலுத்த அந்த ஒரு துளியே சுப்ரமுக்கு இளமையையும் வலுவையும் அழகையும் தர, ஒரு துளிக்கே இவ்வளவு சக்தி என்றால் , மொத்தமும் கிடைத்தால் என்று சுப்ரீமின் கையாள் நிர்வாகி வியக்க, 
அவ்வளவுதான் படம் முடிஞ்சு போச்சு . கிளம்பு கிளம்பு … 

கமல்ஹாசனின் ஆட்டத்தைப் பார்க்க இரண்டாம் பாகம் வா என்று வெளியே தள்ளி கதவை மூடுகிறார்கள் . .
இப்படியாக அதிக வசூலுக்கு ஆசைப்பட்டு இடைவேளை வரை காட்ட வேண்டிய படத்தை மட்டும்  மூணு மணி நேரம் காட்டி, இடைவேளைக்கு அப்புறம் காட்ட வேண்டிய படத்தை இரண்டாம் பாகமாகக் காட்டுவதால் நம்பிப் போன ரசிகனுக்குத்தான் நேரம் பணம் என்று இழப்புகள் 

உண்மையில் அடிப்படைக் கதை ஒன்று மோசமானது அல்ல. இன்னொரு வகையில் இது கண்ணனை கருவிலேயே கொல்ல முயன்ற கம்சன் கதையின்  பிரதி கூட.

ஆரம்பத்தில் சில நிமிடங்கள் வரும் குருஷேத்திரக் காட்சிகள் ஓகே. 

இடைவேளைக்கு முன்பு வரும் ஆக்ஷன் , இரண்டாம் பாதியில் பிரம்மாண்டமான  செட்கள், சிறப்பான வரைகலை வேலைகள், அட்டகாசமான கலை இயக்கம், ஒளிப்பதிவு, இசை  கடைசி அரைமணி நேர அதிரடி ஆக்ஷன் காட்சிகள், சம்பாலா சம்மந்தப்பட்ட ஏரியா  இவை தவிர திரைக்கதையில் படுத்தி  எடுக்கிறார்கள் . இதை மூன்று மணி நேரம் ஒரு நிமிடம் பார்க்க வேண்டி இருக்கிறது . 

இந்த மூன்று மணி நேரத்தில் ஒரு மணி நேரத்துக்கு சற்றும்  மனசாட்சியே இல்லாமல் சூர மொக்கைக் காட்சிகளோடு வெறுப்பேற்றுகிறார்கள்.  இன்னும் ஒரு மணி நேரம் அவ்வப்போது மூச்சு விட அனுமதிக்கிறார்கள் . அடுத்த ஒரு மணி நேரம்தான் பரவாயில்லை,  அபாரம் என்று இரண்டையுமே சொல்ல வைக்கின்றன.  .ஆனால்  மார்வல் படங்களைப்[  பார்த்த ரசிகர்களுக்கு இது ஒரு சாதாரண படமாகவே தெரியும். 

எனினும் தயாரிப்புத் தரம் பிரம்மாதம்.

பிரபாஸ் மேல் நாக் அஷ்வினுக்கு என்ன கோபமோ தெரியவில்லை.அஸ்வத்தமானாக வரும் அமிதாப்புடன் தோற்கும்போது எல்லாம் கொடுக்கும் அந்த ஹய்யோ ரியாக்ஷன் தவிர,  அவர் வரும் காட்சிகள் எல்லாம் மகா எரிச்சல் . 

அஸ்வத்தாமனாக அசத்தி இருக்கிறார் அமிதாப் பச்சன் . அந்த கேரக்டர் அதற்கு ஏற்ற தோற்றம் உடல் மொழிகள் அபாரம் . 

இடைவேளைக்கு முன்பு ஒரு காட்சி கடைசியில் ஒரு காட்சி என்று இரண்டே காட்சிகளில் வரும் கமல்ஹாசன் அமிதாப்புக்கு அடுத்து அந்த இரண்டே காட்சிகள் மூலமே அசத்துகிறார் . 

உண்மையில் படம் முடிந்த பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்க்கலாம் என்று யாருக்காவது தோன்றினால் அதற்கு ஒரே காரணம் ஒன் அண்ட் ஒன்லி கமல்ஹாசன் 

அடுத்த கட்ட நடிகர்களில் சம்பாலா தேசத்து படைத்தலைவனாக எல்லா மொழிகளிலும்  வீரன் என்ற பெயரிலேயே வரும் பசுபதி சபாஷ் போட வைக்கிறார் . அவரது ஆட்களில் ஒருத்தியாக கைரா கதாபாத்திரத்தில் வீர தீர சாகசம் செய்யும் அன்னா பென் கவிதைப் புயல் போல வீசிப் போகிறார் அருமை . 

அதே நேரம் இந்தப் படத்தில் கொட்டிக் கிடக்கும் வட இந்திய அடிவருடித் தனமும் அருவருப்பு 
படத்தின் கதை துவங்கும் இடம் குருசேத்திரம் . எனவே அதில் எந்தக் கருத்து மாறுபடும் இல்லை . அமிதாப்  கேரக்டரும் ஒகே 

இந்திரன் என்பவன் தமிழ்க் கடவுள் . ஆனால் அவனை வேண்டும் என்றே வடமொழி புராணங்கள் கேவலமாகக் கூறும். செல்வச் செழிப்பான வளமான நாடு அவனுக்கு இருக்கும் . ஆனால் குடிகாரன். பயந்தவன் பெண் பித்தன் என்று இந்திரனை சித்தரிப்பார்கள்

ஓர் அரசன் குடிகாரனாகவும் பெண் பித்தனாகவும் பயந்தவனாகவும் இருந்தால் முடியாட்சிக் காலத்தில் அந்த நாடு எப்படி தொடர்ந்து ‘சுபிக்ஷா’வாக இருக்கும் என்ற அறிவு,  அப்போது புராணப் புரட்டுகளை  எழுதியவர்களுக்கு இல்லை. கேவலமாக சித்தரிக்க வேண்டும் என்ற வன்மத்தில் லாஜிக் பார்க்காமல் விட்டு விட்டார்கள் .  

இந்தப் படத்தில் கமல்ஹாசன் கேரக்டர் இந்திரனின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது  (வளமான செழிப்பான இந்திர லோகம்தான் இந்தப் படத்தில் வரும்  சுப்ரீம் கடவுளின் காம்ப்ளெக்ஸ்) 

இன்னொரு பக்கம் இந்தப் படத்தில் ராவணனின் குறியீடு ஆகவும் இருக்கிறது கமல்ஹாசன் நடித்து இருக்கும் அந்தக்  கேரக்டர் .  

படத்தில் வரும் ஷம்பாலா திபெத்திய பின்னணி கொண்டது என்றாலும் அதில் முழுக்க முழுக்க தென்னிந்தியத் தன்மை தெரிகிறது. கல்கியை கருவில் சுமந்து கொண்டு ஷம்பாலா வரும் கர்ப்பிணியை, காது தொங்கத் தொங்கட்டான் அணிந்த –  தென் தமிழ்நாட்டுப் பாட்டிகள் ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள். 

ஷம்பாலாவின் தலைமைப் படைத்தலைவனாக வரும் பசுபதி கேரக்டர் எல்லா மொழ்கிகளிலும் வீரன் என்ற பெயரோடே இருக்கிறது . தவிர அவரும் அவரது படையும் பயன்படுத்தும் ஆயுதம் முருகப் பெருமானின் வேல் போலவே இருக்கிறது.. 

ஆனால்  இவர்கள் எல்லோருக்கும் மேலாக வீராங்கனையாக  கல்கி யை கருவில் சுமக்கும் பெண்ணின் கேர் டேக்கராக இயேசுவின் தாயின் பெயரான மரியம் என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில்,   கேரளத் தன்மை கொண்ட பெண்ணாக  ஷோபனா பாத்திரதத்தைப் படைத்து… ”நானாவது…? திருந்தி நியாயமாக படம் எடுப்பதாவது?”  என்று கேட்காமல் கேட்கிறார் நாக் அஷ்வின் . 

ஆனால், கர்ணன், அர்ஜுனன் மற்றும் பல ஹீரோ பாத்திரங்களில் மட்டும் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் போன்ற தெலுங்கு மலையாள ஹீரோக்கள் வருகிறார்கள் . எந்த ரோலிலும் தமிழ் ஹீரோக்கள் யாரும் இல்லை.  
இவர்கள் எல்லாம் மறைக்கும் இன்னொரு விஷயம் .. மகாபாரதக் கண்ணனே தோற்றம் மற்றும் நில அடிப்படையில் ஒரு தமிழ்த் தன்மை கொண்ட கதாபாத்திரம்தான் 

கதைப்படி காசி மாநகரம்தான் கி பி 2898 ல் இருக்கும் ஒரே நகரம் என்று சொல்லிக் கொள்கிறார்கள் . தப்பில்லை அது படைப்பாளியின் உரிமை . ஆனால் வரலாறு சொல்றோமாக்கும் என்ற மாய்மாலத்தோடு “உலகின் முதல் நகரமும் காசிதான் ஹக்காங்… ஹக்காங், ஹக்காங்.. “என்கிறார்கள் . 

அப்போ காவிரிப் பூம்பட்டினம் என்ன சொல்வது? ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே கடலில் மூழ்கிக் கிடக்கும் முதல் மதுரை , கொழும்புவுக்குத் தெற்கே கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் இரண்டாம் மதுரை .. இவற்றை எல்லாம் என்ன சொல்வது ?

உண்மைக்கு புறம்பாக பொய் வரலாற்றை  எண்ணெய் ஊற்றிப் பொறிக்கவே பிறந்து வந்திருக்கிறார் இந்த நாக் அஷ்வின். 

இப்படியாக அறுக்கத்  தெரியாதவன் கையில் கருக்கரிவாள் ஆயிரம் என்ற கதையாக இருக்கிறது கல்கி 2898 AD. 
இரண்டாவது பாகத்தை கமல்ஹாசன் காப்பற்றினால்தான் உண்டு . 

அது நடந்தால் … 

இப்போதே தோல் சுருங்கி கிழடு தட்டி , இரண்டாயிரம் ஆண்டு வயது சுப்ரீம் போல இருக்கும் இந்த முதல் பாகத்துக்கு,  உயிர் திரவ சீரம் ஆக, அது அமைந்து … அந்த இரண்டாவது பாகம் தேறினால் அதன் பின் இந்த முதல் பாகத்துக்கு மதிப்பு  வரலாம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *