சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் சார்பில் சிவ கார்த்திகேயன் தயாரிக்க , சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிறப்புத் தோற்றத்தில் சிவ கார்த்திகேயன்,
மற்றும் இளவரசு, தர்ஷன், ரமா நடிப்பில் அருண்ராஜா காமராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம் கனா .அதிகாலைக் கனவா ? இல்லை… பகல் கனவா ? பார்க்கலாம்
குளித்தலையில் காவிரி நீரின் ஆதரவில் காலகாலமாக விவசாயம் செய்யும் குடும்பத்தில் வந்த முருகேசனுக்கு (சத்யராஜ்)
தொழில் விவசாயம் . விவசாயி என்பதில் கம்பீரமும் பெருமையும் !
அவரது மனைவி சாவித்திரி (ரமா) வயலுக்குள் யாரும் செருப்புப் போட்டுக் கொண்டு வந்தால் கோபப்படும் அளவுக்கு விவசாயத்தை போற்றும் பாரம்பரிய விவசாயி.
முருகேசனுக்கு பொழுது போக்கு கிரிக்கெட் . பெத்த அப்பா செத்துக் கிடக்கும்போது கூட , அவ்வப்போது ஸ்கோர் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு கிரிக்கெட் வெறியர்
ஒரு முறை ஸ்ரீலங்காவிடம் இந்தியா தோற்ற மேட்ச்சில் டிராவிட் அழ, அதைப் பார்த்து முருகேசன் அழ,
தான் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக வந்து இந்தியாவை ஜெயிக்க வைக்கும் கனவை முன்னெடுக்கிறாள் முருகேசனின் ஆறேழு வயது மகள் கவுசல்யா .

பள்ளிப் பெண்ணாக வளர்ந்ததும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) கனவு வலுப்படுகிறது .
கனவுக்கு அப்பாவின் ஆதரவும் அம்மாவின் எதிர்ப்பும் !
பள்ளிக் கூடத்திலேயே கிரிக்கெட் விளையாட முடியாதது… ஒரு டீம் என்று பதினொரு பெண்களைக் கூட திரட்ட முடியாது ( உண்மையில் இரண்டு டீம் … 22 பேர் அல்லவா வேண்டும் ?) …..
எனவே ஆண்களோடு விளையாட வேண்டிய நிலைமை, அதனால் அம்மாவின் கொந்தளிப்பு,
பெரிய மனுஷி ஆன நிலையில் எதிர் அணியில் ஆடும் ஆண்களின் அசிங்கமான கிண்டல்கள் ….

போராடி மாவட்ட மாநில அளவிலான செலக்ஷன்களில் எல்லாம் வென்று, அப்பாவின் பால்ய காலந்தொட்ட நண்பர் தங்கராசு ( இளவரசு) செய்யும்
பண உதவியால் தேசிய அணிக்கான செலக்ஷனுக்கு போவது , அங்கே வட இந்திய மற்றும் இந்தி ஆதிக்கம்,
தமிழ் நாட்டு ஆள் மற்றும் கிராமத்து பெண் என்பதால் புறக்கணிப்புமற்றும் அவமானம் …
காசுக்காக தவறான ஆட்களை செலக்ட் செய்யும் கோச்சால் பின்னடைவு , பிறகு நல்ல கோச்சாக நெல்சன் திலீப்குமார் ( சிவ கார்த்திகேயன்)
வந்த பிறகு முன்னேற்றம் , அதையும் மீறி ஆட விடாமல் செய்யும் சக தோழிகளின் சதிகள்…

என்று போராட்டங்களுக்கு பிறகு களம்காண வாய்ப்பு வருகிறது கவுசல்யாவுக்கு!
அதே நேரம்…
காவிரியில் கர்நாடகா தண்ணீர் விடாததால் வறட்சி , நூறு நாள் வேலை திட்டத்தால் சம்பள உயர்வு மற்றும் விவசாயக் கூலிகள் பற்றாக்குறை ,
உரம் போன்ற விவசாயப் பொருட்களின் அதீத விலை உயர்வால் சிரமம் , இவற்றால் கடன் வாங்கி விவசாயம் செய்யும் நிலைக்கு முருகேசன் ஆளாகி …
அப்படி வளர்த்த பயிர்களும் கருகி , இன்சூரன்ஸ் கம்பெனிகளும் ஏமாற்ற, விவசாயத்தை விட்டு கார் டிரைவராக போன நிலையில்

அதையும் தொடர முடியாத நிலையில் வறுமைக்கு ஆளாகி … கடன் கொடுத்த வங்கிக்காரர்கள் இறுக்குகிறார்கள்.
கவுசல்யா களம் இறங்க வேண்டிய நேரம் , குளித்தலையில் வீடு ஜப்தி ஆகி, அப்பா முருகேசனும் அம்மா சாவித்திரியும் தெருவுக்கு வந்த செய்தி அவளுக்கு தெரிய வருகிறது .
ஆட முடியாமல் அழும் கவுசல்யா ஊருக்குப் போக விரும்ப, கோச் நெல்சன் அவளை தேற்ற ,
அவள் ‘நான் ஆடுவதை விட இந்த நேரத்தில் அப்பா பக்கம் இருப்பதே முக்கியம்’ என்று மறுக்க …

அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த கனா
அற்புதம் ! அட்டகாசம் ! அருமை !
இதுவரை விளையாட்டு பற்றி வந்த இறுதிச் சுற்று, தங்கல் முதலிய படங்கள் எல்லாம் விளையாட்டில் ஒரு நபர் அல்லது டீம் ஜெயிப்பது பற்றியே பேசின .
(லகானில் கூட அந்த ஏரியாவில் அடிமைத்தனத்தில் விடுதலை கிடைக்கவே கிரிக்கெட் ஆடுவார்கள் )
ஆனால் அப்படி எல்லாம் எந்த ஒரு விளையாட்டையும் போற்ற வேண்டுமானால் அதற்கு உடம்பில் தெம்பு வேண்டும் ;
அதற்கு சாப்பிட வேண்டும் ; சாப்பிட விளைபொருள் வேண்டும் .அதற்கு விவசாயம் வேண்டும் .

– என்ற ஒரு அட்டகாசமான கதையை ,— இதுவரை சொல்லப் படாத கதையை — மனம் கனத்து அதிர்ந்து ,
நெகிழும் படி சொன்ன வகையில் மேற்சொன்ன படங்களை எல்லாம் விட உயர்ந்து விட்டது கனா .
வாழ்த்துகள் பாராட்டுக்கள் சிவப்புக் கம்பள வரவேற்பு … ‘இயக்குனர்’ அருண் ராஜா காமராஜா !

பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி ஆடித் தோற்கையில் முருகேசன் அழுவது போல காட்டாமல்
இலங்கை அணியுடன் ஆடித தோற்கும் பொது அழுவது போலக் காட்டுவது ..
முருகேசனை கேவலமாக பேசும் வங்கி அதிகாரி மதிய உணவாக தயிர்சாதமும் ஊறுகாயும் சாப்பிடுவது …
இது போன்ற காட்சிகளில் வெளிப்படும் இயக்குனரின் உணர்வு அடையாளத்துக்கு ஒரு சபாஷ் !
முருகேசன் கிரிக்கெட் பார்க்க அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்கும் கவுசல்யா வளர்ந்து கிரிக்கெட் ஆடுவதை முருகேசன் பார்க்க ,

இப்போது சாவித்திரி அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு உட்காந்து இருப்பது போன்ற காட்சிகளில்
அருண் ராஜா காமராஜா கொடுத்து இருக்கும் உணர்வுப் பெருக்கு நிறைந்த அழகியல் இயக்கம் அபாரம் .
முன்னரே சினிமாவில் சொல்லப்பட்ட — கிரிக்கெட்டில் உள்ள அரசியலை படத்தில் சொல்லும் அதே நேரம் , அந்த வெளிச்சத்தை வைத்து ,
விவசாயிகளுக்கு எதிரான இருண்ட அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டும் உத்தியும்
அருண்ராஜா காமராஜ் எவ்வளவு நேர்த்தியான திரைக்கதை ஆசிரியர் என்பதையும் உணர்த்துகிறது .

”ஜெயிக்கிற வரைக்கும் எது சொன்னாலும் கேட்க மாட்டாங்க; ஜெயிச்சுட்டு சொல்லு .. என்ன சொன்னாலும் கேட்பாங்க ”
விளையாட்டா சீரியஸா எடுத்துக்கற நாம , விவசாயத்தை விளையாட்டா கூட செய்யறது இல்ல …
போன்ற வசனங்களிலும் வளமோ வளம்
அடம் என்ற விஷயத்தை அம்மா சாவித்ரியின்குணம் வழியாக ஆரம்பித்து கவுசல்யாவுக்கு ஏற்றுவது ..
சாவித்ரியே கவுசல்யாவுக்கு ஆதரவாக மாறும் தருணம் …

முருகேசனின் தற்கொலை முடிவை மோப்பம் பிடித்து , பக்குவமாக அதை மாற்றும் தங்கராசு கதாபாத்திரம் இவை படத்தின் கவிதை நிகழ்வுகள்
இடைவேளை சமயத்தில் என்னடா இது … இதுவரையிலான காட்சிகளில் கிரிக்கெட் தொடர்பான காட்சிகளை விடவும்
விவசாயம் தொடர்பான காட்சிகள்தானே நன்றாகவும் அழுத்தமாகவும் இருக்கிறது என்ற யோசனை வரத்தான் செய்தது .
ஆனாலும் இப்படி ஓர் அட்டகாசமான கிளைமாக்சை யோசிக்க முடியவில்லை . அங்கேதான் ஃபுல்டாஸ் பந்தாக சீறிச் சினந்து சிறக்கிறது கனா .
ஹாட்ஸ் ஆஃப் !

அசத்தல் ஐஸ்வர்யா ராஜேஷ் . டங்கல் , இறுதிச் சுற்று போன்ற படங்களில் நடித்த நாயகிகள் நிஜமான பாக்சர்கள் .
ஆனால் கிரிக்கெட் விளையாடத் தெரியாத ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் அவர்களுக்கு இணையாக
உரு மாறி இருக்கும் உத்வேகமும் அந்த உழைப்பும் போற்றுதலுக்கு உரியது . நடிப்பும் மிக சிறப்பு
முருகேசனாக … மகளின் கனவுகளை நிறைவேற்ற துடிக்கும் கிராமத்து அப்பனாக அசத்தி இருக்கிறார் சத்யராஜ் .
ஒரு விபத்தால் கிரிக்கெட் கேரியரை இழந்த அற்புதமான விளையாட்டு வீரன் மற்றும் நேர்மையான கோச்

கதாபாத்திரத்தில் சிறப்பான காட்சிகளில் தெறிப்பாக நடித்து ஜொலிக்கிறார் சிவ கார்த்திகேயன்
தங்கராசு கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் இளவரசு .
ரமா முகப் பொருத்தம் .
சின்ன வயசு கவுசல்யாவாக வரும் இரண்டாவது சிறுமி .. மற்ற அனைத்து நடிக நடிகையருக்கும் சவால் விடுகிறாள் . வாழ்த்துகள் தங்கமே !
சிபு நைனான் தாமஸ் இசையில் வாயாடி பெத்த புள்ளை பாடல் ஒரு huge sixer .
மகளிர் கிரிக்கெட் போட்டியின் உலகக் கோப்பைக் ஆட்டங்களை கண் முன் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனுக்கு ஒரு பாராட்டுக் கோப்பை

முனீஸ்காந்த் காட்சிகள் மட்டும் முடியல . தர்ஷன் படத்தில் ஒட்டவில்லை
இந்திய அணியில் செலக்ட் ஆகி விட்டாலே வருட சம்பளம் 25 லட்சம் . உடனே ஏதாவது நிறுவனங்கள் ஆபிசுக்கே வர வேண்டாம் என்று சொல்லி
மாசாமாசம் சம்பளத்தை மட்டும் அனுப்பி வைத்து விடும் . அப்படி இருக்க உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில்
கவுசல்யா களம் இறங்க வேண்டிய நேரத்தில் அவள் வீடு ஜப்தி ஆகிறது என்ற இடத்தில் மட்டும் stumped ஆகிறது திரைக்கதை
ஆனாலும் என்ன … படத்தின் முதன்மைக் கதைக்கு பொருத்தமாக ஜப்தி என்பதை விட சிறப்பான விஷயம் சொல்ல முடியாது என்று இயக்குனர் நினைத்து இருக்கலாம் . போகட்டும் !

கடைசியில் கிரிக்கெட் கிரவுண்டில் கவுசல்யா கேட்கும் கேள்விகள்… விவசாயங்கள் நிலங்களை அழித்த்தும் அழிக்கவும்
வித விதமாக திட்டம் போடும் அதிகார வர்க்க அயோக்கியர்களையும் கார்ப்பரேட் சித்தாந்தத்துக்கு வாலாட்டும் கபோதிகளையும்
பாடி லைன் பந்து போட்டு முகரையை உடைக்கிறது படம்
கனா … ‘காண’ வேண்டிய லட்சியக் கனா
மகுடம் சூடும் கலைஞர்கள்
——————————————–
அருண் ராஜா காமராஜா , ஐஸ்வர்யா ராஜேஷ் , சிவ கார்த்திகேயன் , சத்யராஜ், இளவரசு, சிபு நைனன் தாமஸ்,
தினேஷ் கிருஷ்ணன். சின்ன வயசு கவுசல்யாவாக வரும் இரண்டாவது சிறுமி