‘நீலப் படங்கள் பார்ப்பதை சாமி படம் பார்க்கிறோம்’ என்று சொல்வது நம்ம ஊரு நபர்கள் சிலரின் வழக்கம் .
”அடப்பாவிகளா இது அநியாயம் இல்லையா ?” என்று கேட்டவர்கள் கூட இயக்குனர் சாமி இயக்கிய சிந்துச் சமவெளி , உயிர் போன்ற படங்களை பார்த்த பிறகு அந்த எதிர்ப்பை குறைத்துக் கொண்டார்கள் .
அந்த அளவு கருத்து ரீதியாக கதை மற்றும் கருத்து ரீதியாக வில்லங்கங்களை கொண்டது இயக்குனர் சாமி இயக்கும் படங்கள்
அந்த அளவுக்கு சாமி இயக்கும் படங்கள் என்றால் அது ‘ஏ’ முத்திரை கொண்ட படமாகத்தான் இருக்கும் என்பது எல்லோரின் கருத்தாக இருந்த நிலையில் அவர் கங்காரு என்று ஒரு படத்தை இயக்க ஆரம்பிக்க,
கண்ணியமாக படம் பார்க்க விரும்புபவர்கள் கலங்கித்தான் போனார்கள் . ‘சிந்து சமவெளி என்ற பெயரிலேயே அப்படி ஒரு படம் எடுத்தவர் கங்காரு என்று பெயர் வைத்தால் எப்படியெல்லாம் தாவுவார் ‘ என்ற எண்ணத்தில் வந்த கலக்கம் அது .
ஆனால் என்ன ஆச்சர்யம் !
கங்காரு படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது என்ற செய்தியை நம்பவே முடியவில்லை . அதிசயம் ஆனால் உண்மை .
அர்ஜுனா ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, ஆர்.சுந்தர்ராஜன், தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, ஜின்னா ஆகியோர் நடிக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கும் கங்காரு படம் முழுக்க முழுக்க குடும்பத்தோடு பார்க்கும் குடும்பப் படமாக வந்துள்ளதுதான் யு சான்றிதழ் பெற வைத்துள்ளது
சாமியின் முந்தைய படங்கள் பற்றி அவரது அம்மாவே திட்டியிருக்கிறாராம் ”இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியாக படம் பண்ணு” என்று’.
அப்படிப்பட்ட சாமியை பாலுணர்வுப் படங்கள் எடுப்பதில் இருந்து பாச உணர்ச்சிப் படம் எடுக்க வைத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை அந்த காஞ்சி காமாட்சியே வாழ்த்துவாள் .