ஐ ஸ்டுடியோஸ் தயாரிக்க , இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட , வைபவ் , சோனம் பிரீத் பஜ்வா ஆகியோர் நடிக்க ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கி இருக்கும் படம் கப்பல் .
பேரைப் பார்த்ததும் கடல் பயணம் செய்கிற கதை என்று நினைத்தால் காய்ந்து போவீர்கள் .
‘மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்தான்’ என்ற பாடல் வரியில் ‘ஷிப்’ வருது இல்லியா? இந்தப் படத்துக்கு கப்பல் என்று பெயர் வந்ததும் அந்த வகையில்தான் . (சபாஷ் டைரக்டர் . இது ஒரு வித சிறப்பான டைரக்டோரியல் இன்டர்பிரட்டேஷன்)
அதன்படி நட்புக்கும் காதலுக்கு இடையே நடக்கும் சண்டையில் எது ஜெயிக்கிறது என்பதுதான் படத்தின் கதையாம். அதற்கேற்ப படத்தில் ஹீரோவுக்கு வி டி வி கணேஷ், கருணாகரன், அர்ஜுன் நந்தகுமார், வெங்கட் சுந்தர், ரோபோ ஷங்கர் , கார்த்திக் பிரியதர்ஷன் என்று பல நடிகர்களோடு நிறைய நண்பர்கள் கேரக்டரும் இந்தப் படத்தில் உண்டு.
மொத்தம் ஒன்பது புரடியூசர்கள் சேர்ந்து தயாரித்த படமாம் இது . (அப்படீன்னா இந்த படத்துக்கு மட்டுமே தனியா ஒரு புரடியூசர் ‘கவுன்சில்’ இருக்குன்னு சொல்லுங்க!)அந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சுதனும் இயக்குனர் கார்த்திக்கும் கல்லூரி நண்பர்களாம் . இவர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வர, அவர் ஐ டி துறையில் வெளிநாட்டில் சம்பாதித்து வர, இருவரும் சந்தித்த ஒரு பொழுதில் , சுதன் படம் தயாரிக்க முடிவு செய்தார் . கார்த்திக்கிடம் கதை கேட்டார்.
சுதனும் அவரது நண்பர்கள் பலரும் சேர்ந்து படம் தயாரிக்க முன்வர, தன்னிடம் இருந்த மெகா பட்ஜெட் கதைகளை விட்டுவிட்டு கார்த்திக் ரெடி செய்த கதைதான் இந்தப் படம் .
முதலில் எல்லா தயாரிப்பாளர்களும் ஒன்று சேர்ந்து இயக்குனரை சந்தித்த போது சமோசா சாப்பிட்டுக் கொண்டுதான் பேசினார்களாம் . இதனால் இயக்குனரான கார்த்திக் இவர்கள் எல்லோரையும் சமோசா புரடியூசர்கள் என்றுதான் அழைப்பாராம் . (இதே பேருல ஒரு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிக்க புரடியூசர்ஸ்!)
கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற ஊரு விட்டு ஊரு வந்து பாடலை இந்தப் படத்துக்காக ரீமிக்ஸ் செய்து இருக்கிறாரர் படத்தின் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் .
படத்தை முடித்த கார்த்திக் தனது குருநாதர் ஷங்கருக்கு படத்தை போட்டுக் காட்ட, இரண்டாவது காட்சியில் இருந்து விழுந்து விழுந்து சிரித்து படத்தை ரசித்த ஷங்கர் படத்தை தானே வாங்கி தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் வெளியிட முடிவு செய்ய, இப்படியாக சாதாரண கப்பல் ராயல் கப்பல் ஆகி இருக்கிறது .
அப்புறமென்ன கண்ணுகளா….அசத்துங்க !