லிபி சினி கிராஃப்ட்ஸ் சார்பில் வி என் ரஞ்சித்குமார் தயாரிக்க, உதயநிதி, ஆத்மிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா, நடிப்பில் , இதற்கு முன்பு இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய மு. மாறன் இயக்கி இருக்கும் படம் கண்ணை நம்பாதே .
அனாதை இல்லம் நடத்தும் தன் தாய் ( ஆதிரா) அந்த பிள்ளைகளையே அதிகம் கவனிப்பது கண்டு பொறாமைப் படும் மகள் , அந்தப் பிள்ளைகளுக்கு உணவில் விஷம் வைக்க, அதைக் கண்டு பிடிக்கும் அம்மாவைக் கொன்று விட்டு ஜெயிலுக்குப் போகும் கருப்பு வெள்ளைக் காட்சிகளுக்கு பிறகு முதன்மைக் கதை துவங்குகிறது .
வாடகைக்கு குடி போன இடத்தில் வீட்டு ஓனரின்( ஞான சம்பந்தன்) மகளோடு ( ஆத்மிகா) , நாயகனுக்கு ( உதயநிதி) காதல் வர, அது ஓனருக்கு தெரிய வர, காதல் தொடர்கிறது . ஆனால் காலி பண்ண வேண்டி இருக்கிறது .
நண்பன் ஒருவன் ( சதீஷ் ) உதவியோடு, வேறு இடத்துக்குக் குடிபோக அங்கு ஒரு நண்பன் ( பிரசன்னா) அறிமுகம். .
காரில் தனியாக வரும் ஒரு பெண்ணுக்கு ( பூமிகா) நாயகன் உதவ, அதன் தொடர்ச்சியாக , புதிய நண்பன் அந்தப் பெண்ணை பலாத்கார முயற்சியில் கொன்று , விசயம் வெளியே தெரிந்தால் நாயகன் மேல் தான் பழி விழும் என்று நாயகனையே நம்ப வைக்கிறான் . அவனுக்கு உதவுவது போல கொலையை மறைக்க திட்டம் தீட்டுகிறான் .
இந்த முயற்சியில் ஓர் இளம்பெண்ணுக்கு ( சுபிக்ஷா) பாலியல் தொல்லை கொடுக்கும் ஒருவன் கொல்லப் பட, அவன் இன்ஸ்பெக்டருக்கு (மாரிமுத்து) மகனாகவும் , நாயகிக்கு சித்தப்பா பையனாகவும் இருக்க, இந்த விசயத்தில் ஒரு தொழிலதிபரும் சம்மந்தப்பட அவருக்கு வேண்டியவராக அநாதை இல்லத் தலைவியும் ( பூமிகா) வர, நடந்தது என்ன என்பதே படம்.
இரவுக்கு ஆயிரம் கண்கள் பாணியிலேயே அழுத்தமான ஒரு சில் திரில் இரவுப் படத்தை இரண்டாவது படமாக கொடுத்து உள்ளார் மு. மாறன் . சபாஷ் .
லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் மாதிரி கடைசி காட்சியாக வரும் மு.மாறன் யுனிவர்ஸ் அசத்தல் .
ஒவ்வொரு கேரக்டரும் உள்ளே இறங்கும் விதம், அவற்றை திரைக்கதையில் வளைத்து வளைத்து பயன்படுத்திய விதத்தில் இயக்குனரின் படைப்பாக்க உழைப்பு தெரிகிறது .
மிக எளிமையான ஒரு கேரக்டரை எந்த பாசாங்கும் இன்றி மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ளார் உதயநிதி . அடுத்த படத்தோடு சினிமா நடிப்பை நிறுத்திக் கொள்ளப் போகிறவரிடம் மேற்கொண்டு நன்றாக நடிக்கலாம் என்று சொல்ல எல்லாம் தேவை இல்லை .
மிக இயல்பாக வழக்கம் போல அசத்தலாக நடித்துள்ளார் பிரசன்னா.
போட்டோ பிடிக்க சீஸ் என்று சொல்லச் சொல்லுவோமே, அப்படி சீஸ் சொல்ல ஆரம்பிக்கும் முதல் கணத்தில் முகம் எப்படி இருக்குமோ அப்படி ஒரு முக பாவனையில் கடேஏஏஏஏசி வரை நடித்துள்ளார் வசுந்தரா. சட்டென்று கையில் உள்ள துப்பாக்கியை, ஷோலே பட தர்மேந்திரா மாதிரி கடித்து தின்று விட்டு, ”இது நிஜ துப்பாக்கி இல்லீங்க . சாக்லேட்…” என்று சொல்வாரோ என்று அஞ்சும் அளவுக்கு படம் முழுக்க போட்டோவுக்கு போஸ் கொடுத்து உள்ளார் .
ஆரம்பத்தில் சில காட்சிகளில் வந்து அப்புறம் காணமல் போய் , ‘திடீர்னு யார்றா ஒரு புள்ள குறுக்க மறுக்க சுத்துது.. ஓ… கதாநாயகில்ல..? ‘என்று நமது ஞாபக சக்தியை நாமே பாராட்டிக் கொள்ளும்படியான ஒரு கேரக்டரில், ‘இன்னிக்கு என்னமோ வெள்ளிக் கிழமை’ என்ற ரீதியில் நடித்துள்ளார் ஆத்மிகா. (இது போன்ற கதைகளில் கதாநாயகி கேரக்டரை வேறு என்ன செய்வதாம்?” என்ற – இம்சை அரசன் படப் பாணியிலான – இயக்குனரின் மைன்ட் வாய்ஸ் கேக்குது) ஆனாலும் அந்த முகத்தில் என்னமோ இருக்கு.
சதீஷ் , ஸ்ரீகாந்த், மாரிமுத்து எல்லாம் ஒகே .
ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவும் சித்துகுமாரின் பின்னணி இசையும் சிறப்பு .
நீட்டிப் பிடித்த துப்பாக்கியை கை வலிக்கும் அளவுக்கு நெடுநேரம் தூக்கிப் பிடித்தபடி பிளாஷ் பேக் சொல்லும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார் எடிட்டர் சான் லோகேஷ் .
திரைக்கதையில் பாராட்ட எவ்வளவு விஷயம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு யூகிக்க முடிந்த மற்றும் பழமையான காட்சிகளும் இருக்கிறது. கிளைமாக்சில் எம் ஜி ஆர் எல்லாம் நினைவுக்கு வருகிறார் . எதாவது ஒரு காட்சியில் உள்ளே புகுந்து ” கண்ணை நம்பாதே .. உன்னை ஏமாற்றும்” என்ற நினைத்ததை முடித்தவன் பாடலைப் பாடுவாரோ என்று கூட தோன்றியது
பொதுவாக ஒரு படத்தில் அமைச்சரை கேவலமாக சித்தரித்தால் ஆளுங்கட்சி சற்றே மானசீகமாகவாவது . நெற்றி சுருக்கி புருவம் நெறிக்கும். ஆனால் திமுக ஆட்சியில் இனி அப்படி செய்யவே முடியாது என்ற அளவுக்கு இந்தப் படத்தில் ஒரு அமைச்சரை நச்சு நசுக்கி எடுத்து விட்டார்கள். அதற்காக மாறனுக்கும் உதயநிதிக்கும் நன்றி சொல்லலாம். படைப்பாளிகள் கதைக்காக காட்சிகள் யோசிக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார்களே! ( நாலு வருஷம் எல்லாம் ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருந்தால் இப்படிதான் நாம வீசும் கத்தி நம்ம கழுத்துக்கே வரும் ).
இந்த வாரம் வந்துள்ள குடிமகான் படம் auto breweries syndrome என்ற பிரச்னையை அளவுக்கு அதிகமாக பொங்கல் வைக்கிறது .
D 3 படத்தில் டோபமைன் மருந்தை என்னமோ டோப் அடிக்கும் விட்டலாச்சார்யா லெவலுக்கு காட்டி கதற வைத்திருக்கிறது .
இந்தப் படத்திலும் சோதனையில் கண்டு பிடிக்க முடியாத ஊக்க மருந்துக்காக என்று வயிறு கலங்க வைக்கும் விசயம் ஒன்று சொல்கிறார்கள்.
இப்படியாக இந்த வாரமே மெடிக்கல் மிராக்கிள் வாரமாகிவிட்டது .
நான்கு வருடமாக எடுக்கப்பட்ட ஒரு படத்தை பெரிதாக சோதிக்காத அளவுக்கு ஒரு வழியாக தட்டித் தடவி உருட்டிக் கொடுத்ததற்காக மு. மாறனுக்கு ஒரு இஸ்கார் (பிரச்னை) விருதாவது- அதாவது போராடி பிரச்னைகளை சமாளிப்பவர் விருதாவது – கொடுக்கலாம் .
அரசியல் தொடர்பான எதிர்ப்பார்ப்பு இல்லாமல் படத்துக்குப் போனால் வருத்தப்படும் அளவுக்குப் பெரிதாக சேதாரம் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக வீடு வரலாம்