கரையேறுமா? பார்க்கலாம்
இளம்பெண் ஒருவர் (நிகிஷா பட்டேல்) மங்களூரில் உள்ள ஒரு கடலோர கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார் .
பணக்கார அப்பா (ராதாரவி) , ஒரு தங்கை இருவருடனும் வாழ்ந்த அவர் , தங்கையின் காதலனை அவளோடு சேர்த்து வைத்து அதனால் அப்பாவின் கோபத்துக்கு ஆளானவள் . ஒரு நிலையில் தந்தையும் இறந்து தங்கை , தங்கையின் மகள் ஆகியோரும் அநியாயமாக இறந்து போக , மனம் நொறுங்கிய நிலையில் ஒரு மன மாற்றத்துக்காக மங்களூர் வந்து தங்குகிறாள் . தங்க வைப்பது அவளது தோழி (இனியா) .
அங்கே கலங்கரை விளக்கம் ஒன்றில் தங்கி இருக்கும் ஒருவனுடன் பழகி, காதலிக்கவும் செய்கிறாள் . ஆனால் அவன் செத்து பத்து வருஷம் ஆச்சு என்று பலரும் சொல்கின்றனர். ஆனால் அவனை இவள் தொடர்ந்து சந்திக்கிறான் .
இப்படி ஒரு திரில் விசயத்தை சொல்லி விட்டு , அதை சிறப்பாக அவிழ்க்க ஆயிரம் வழிகள் இருந்தும் , நட்புத் துரோகம் , சொத்துப் பத்திரம் , ஸ்லோ பாய்சன், குதிரைப் பந்தயம், அயோக்கிய காதலன் , அநாதைக் கதாபாத்திரங்கள் என்று படம் முழுக்க அரைத்த மாவை .. ம்ஹும் ! அரைத்து சுட்ட மாவை மீண்டும் ஊறவைத்து அரைத்து ரசிகர்களை ஒரு வழி செய்கிறார்கள் .
நிகிஷா பட்டேல் கிளாமராக இருக்கிறார் . முதல் ரெண்டு நிமிடங்கள் அது சுகமாகத்தான் இருக்கிறது. ஆனால் கேரக்டருக்கு சம்மந்தம் இல்லாமல் தினவெடுத்துத் திரிவது போல அவ்வப்போது முனகுவதும் , திடீரென்று அழுவதும் , திடீரென்று ஸ்டைல் காட்டுவதும் ஒரு நிலையில் எரிச்சலூட்டுகிறது . கதை இருந்தால்தான் சதைக்கும் மரியாதை !
ஒரு கேரக்டர் என்றால் என்ன? அது எப்போது என்ன செய்யும் ? என்ன மன நிலையில் இருக்கும் ? அதற்கேற்ப எப்படிப் பேசும் என்பது பற்றி எந்த தெளிவும் இயக்குனருக்கு இல்லாதது கொடுமை .
அதுவும் போலீஸ் ஸ்டேஷன் காமெடி என்று ஒரு கூத்து அடிக்கிறார்கள் பாருங்கள் . எதையும் தாங்கும் இதயத்தால் கூட இதைத் தாங்க முடியாது . அது மட்டுமல்ல…ஒரு சின்ன கேப் கொடுத்தால் கூட கடற்கரைக்குப் போய் காரணமே இல்லாமல் குதித்து குதித்து ஆட ஆரம்பித்து விடுகிறார்கள் .
சிம்ரன் வருகிறார் . ஸ்டைல் எல்லாம் செய்கிறார் . ஆனால் விஷயம் இல்லியே . ஓம குச்சி நரசிம்மனுக்கு போர்க் கவசம் போட்ட மாதிரி இருக்கிறது சிம்ரனின் காட்சிகள்.
நடந்த விசயங்களை எல்லாம் ஒரு முக்கியக் கேரக்டர் விலாவாரியாக படத்தின் கிளைமாக்சில் பேசி சஸ்பென்சை விளக்குவது என்பது கருப்பு வெள்ளைக் காலத்திலேயே தமிழ் சினிமா மென்று துப்பிய விஷயம் . அதே நேரம் வல்லவனுக்கு வல்லவன் படத்தில் கூட இவ்வளவு வசனம் இல்லப்பா . பேசிக் கொண்டே இருக்கிறார் சிம்ரன். .
எழுத்தாளர் தமிழ்வாணனின் மறைந்த நகரம் நாவலை சுட்டு விட்டார்களோ என்று ஒரு நிலையில் நாம் யோசித்தால் .. ம்ஹும் ! ஸ்கிரிப்ட் பற்றி எல்லாம் இவங்க அவ்வளவு சீரியஸா எல்லாம் எடுத்துக்கவே இல்ல.
படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர்கள் எல்லாரும் கன்னடர்கள் . அது பரவாயில்லை . ஆனால் அவர்களில் பலர் தமிழ் பேசுகிறேன் என்ற பெயரில் கன்னட வாசனையோடு பேசுவது ஒரு ரணகளம்
”அவன் கூட படுத்துட்டேன்னு கூட பொண்ணுங்க சொல்வாங்க” என்ற வசனத்தைப் பேசும் ஒரு காட்சியில் இனியா ஒரு சைகை செய்கிறார் பாருங்கள் . பீப் சாங் எல்லாம் பிச்சை வாங்கணும்.
அநேகமாக தமிழ் சினிமா ரசிகர்களைப் பற்றி யாரோ இவர்களுக்கு ரொம்பக் கேவலமாக சொல்லி இருக்கிறர்கள் .
அப்படியானால் படத்தில் பாராட்டக் கூடிய அம்சமே இல்லியா? இருக்கிறது
அதுதான் ஜெய் ஆனந்த்தின் ஒளிப்பதிவு .

இதுவரை இந்திய அளவில் எந்த படத்துக்கும் பயன்படுத்தப்படாத சோனி 65 8 கே என்ற ஒரு கேமராவை இந்தப் படத்தில் முதன் முதலில் பயன்படுத்தி, அருமையான ஷாட்களில் சிறப்பான கிரேடிங்கில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக மயக்கவும் ஏரியல் மற்றும் ஹெலிகேம் ஷாட்களில் அசத்தவும் செய்து இருக்கிறார் இவர் .
ஒன்று செய்யலாம் .. இந்தப் படத்தை ஒரு ஷோ ரீல் போலப் பயன்படுத்தி நல்ல கதையுள்ள படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பை ஒளிப்பதிவாளர் பெறலாம் . நிகிஷா பட்டேலுக்கு இந்தப் படம் ஒரு மூவி போட்டோ ஆல்பம் மாதிரி . இதை காட்டி அவரும் நல்ல படங்களுக்கு முயலலாம்.
மொத்தத்தில் கரையோரம் …. பெரும் சேதம்
மகுடம் சூடும் கலைஞர்
—————————————
ஜெய் ஆனந்த்