மீத்தேன் தடை விதித்த தமிழக அரசுக்கு ‘கத்துக்குட்டி’யின் நன்றி

jayalalalitha
நரேன் –  சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கிய கத்துக்குட்டி படம், தமிழகம் முழுக்க கடந்த 9 ஆம் த்தி வெளியானது. பெரிய அளவிலான விளம்பரங்களோ பரபரப்போ இல்லாத நிலையிலும் மக்களின் ஏகோபித்த வரவேற்பால் நாளுக்கு நாள் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது இப்போது அந்த எண்ணிக்கை 242 ஆக உயர்ந்திருக்கிறது..
காரணம் ?
நூறு சதவீத காமெடி படம். அதே நேரம் விவசாய நிலங்களை அழிக்கும் மீத்தேன் கொடூரத்தை மக்களுக்கு சரியாக புரியவைத்த விதம். 
விளைவு ?
தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாய சங்க நிர்வாகிகளும் அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து படத்துக்கு ஆதரவு தெரிவிப்பதோடு,  படம் பார்க்க வரும்  பொதுமக்களை இனிப்பு கொடுத்து வரவேற்கின்றனர். 
kathu 5
அவர்களில் ஒருவரான பட்டுக்கோட்டை வீரசேனன் என்ற விவசாயி”எங்களின் வாழ்க்கையையும் வலியையும் நெஞ்சைப் பிழியும் அளவுக்கு இந்தப் படம் பதிவு செய்துள்ளது . காமெடி படமாக தெரிந்தாலும் கூட, விவசாயிகளின் சோகங்களை நெஞ்சில் ஆணியடிக்கும் விதமாக இந்தப் படம் விளக்கி இருக்கிறது.
எங்கள் மண்ணின் அழுத்தமான பதிவாக உருவாக்கி இருக்கும் இந்தப் படத்தை தமிழக மக்கள் பெரும் ஆதரவு தந்து கொண்டாடவேண்டும் . 
செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் விதமாக நகர மக்களும் படித்தவர்களும் படத்துக்கு ஆதரவு தரவேண்டும் . இந்தப் படத்தின் வெற்றி விவசாய ஜீவன்களுக்கான வெற்றி ” என்கிறார் 
இதே சமயத்தில் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  
‘கத்துக்குட்டி’ படக்குழு சார்பில் இதைக் கொண்டாடும் இயக்குனர் சரவணன் “தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைத் தரிசாக்கத் துடித்த மீத்தேன் திட்டத்தின் அபாயத்தையும், கொடூரத்தையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது எங்களுடைய ‘கத்துக்குட்டி’ படம். 
 மீத்தேன் திட்டத்தை ஆஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா, போலந்து உள்ளிட்ட உலகத்தின் பன்னாடுகளும் தடை செய்திருக்கும் நிலையில், தஞ்சை மண்ணில் 691 சதுர கி.மீ. விவசாய நிலத்தைக் காவு வாங்கி, வாழவாதாரத்தையே நிர்மூலமாக்கக் கூடிய அந்தத் திட்டத்தைக் கொண்டுவர அதிகார வர்க்கம் துடிப்பதையும், அதனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளையும் ‘கத்துக்குட்டி’ படம் அப்பட்டமாக்கியது. 
kathu
வாழ்வாதாரங்களும் பாரம்பரியப் பெருமைகளும் மீத்தேன் திட்டத்தால் அழிந்துபோகும் அபாயத்தை கிராபிக்ஸ் காட்சிகளால் பதைபதைக்கும் விதமாக ‘கத்துக்குட்டி’ படத்தில் சொல்லியிருந்தோம். கடந்த 9-ம் தேதி வெளியான எங்களின் ‘கத்துக்குட்டி’ படம், தமிழகம் முழுக்க மீத்தேன் குறித்த விழிப்பு உணர்வையும், விவசாயத்தைக் காக்கும் போராட்டத்தையும் மக்களிடத்தில் பெரிதாக ஏற்படுத்தியது.
 ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மீத்தேனுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமாகத் தொடங்கின. அரசு ஊழியர்களும் மீத்தேனுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து அரசாணை வெளியிட்டிருப்பது விவசாய மக்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது. எங்கள் படத்தால்தான் இது நடந்தது என்று சொல்லவில்லை. அதே நேரம் படத்தில் மீத்தேன் திட்டத்தில் கொடூரமாக நாங்கள் என்ன சொன்னோமோ அந்த விவரங்களை அப்படியே அரசும் சொல்லி இருக்கிறது .
உதாரணமாக மீத்தேன் எடுத்தால் பூகம்பம் வராது என்று மீத்தேன் திட்டம் சம்மந்தப்பட்டவர்கள் சொல்லிக் கொண்டு இருந்தனர் . ஆனால் பூகம்பம் வருவது தவிர்க்கமுடியாத ஆபத்து என்று நாங்கள் படத்தில் சொன்னோம் . தமிழக அரசும் மீத்தேன் திட்டத்தால் வரும் ஆபத்துகளில் பூகம்பத்தையே முதலில் குறிப்பிட்டு உள்ளது .
சூரி , நரேன் , நடுவில் இயக்குனர் இரா. சரவணன்
சூரி , நரேன் , நடுவில் இயக்குனர் இரா. சரவணன்

ஊருக்கே படியளக்கும் ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணில் மீத்தேன் திட்டத்தைக் கொண்டுவரத் துடித்த  கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து, விரட்டி அடித்திருக்கிறது.

 அதோடு மட்டும் அல்லாமல், காவிரி படுகைப் பகுதிகளில் நிலக்கரிப் படுகை மீத்தேன் எரிவாயு வெளிக்கொணர்தல், உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் எதிர்காலத்தில் தமிழக அரசை ஆலோசிக்காமல் இத்தகைய திட்டங்களைப் பற்றி யோசிக்கவே கூடாது எனவும் தமிழக அரசு கேட்டுக்கொண்டிருப்பது ஒவ்வொரு விவசாயியையும் நிம்மதி அடைய வைத்திருக்கிறது. 
மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது எங்கள் ‘கத்துக்குட்டி’ படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மீத்தேன் திட்டத்தின் அபாயத்தை உணர்ந்து மக்களின் மனசாட்சியாக நின்று அரசாணை வெளியிட்டிருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ‘கத்துக்குட்டி’ படக்குழு ஆத்மார்த்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. 
நினைத்துப் பாரக்க முடியாத பேரபாயத்தில் இருந்து விவசாய மண்ணை மீட்டிருக்கும் தமிழக முதல்வர், காலத்துக்கும் மீத்தேன் அரக்கன் தஞ்சை மண்ணில் கால் வைத்துவிடாதபடி தடுத்து எதிர்காலத்திலும் விவசாய மக்களின் அரணாக விளங்க வேண்டும். விவசாய மக்களின் சார்பாகவும், மீத்தேன் எதிர்ப்புக் குழு சார்பாகவும், திரைத்துறை சார்பாகவும் தமிழக முதல்வருக்கு ‘கத்துக்குட்டி’ படக்குழு காலத்துக்குமான நன்றியைச் சொல்லிக் கொள்கிறது. 
240-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மீத்தேன் கொடுரத்தைக் காட்சிப்படுத்தும் ஆவணமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கத்துக்குட்டி’ படத்துக்குக் கிடைக்கும் ஒவ்வொரு கைத்தட்டலும், மீத்தேனுக்கு அனுமதி மறுத்து அரசாணை வெளியிட்டிருக்கும் முதல்வரையே சென்று சேரும்.” என்கிறார். 
நடிகர் சூரி சொல்லும்போது ” படத்துக்கு ஆரம்பத்துல பதிமூணு நாள் என் கால்ஷீட் போதும்னு சரவணன் சொன்னார் . அப்புறம் இன்னும் சில விசயங்களை சொல்லி இந்த சீன்லயும் நீங்க இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னார் . அதையும் பண்ணிக் கொடுத்தேன் . 
அப்புறம் இன்னும்  வேணும்னார் . என் புள்ள மேல சத்தியமா சொல்றேன் . ஒத்துக்கிட்டு பண்ணிக் கொடுத்தேன் . மொத்தம் 33 நாள் ஆச்சு . காரணம் இந்தப் படம் சொல்லுற நல்ல விஷயம் ” என்றார் .
நல்லது செய்து அங்கீகாரம் வாங்குவது குறைந்து விட்ட இந்தக் காலத்தில் , கத்துக்குட்டி கொண்டாடவேண்டிய படம்தான். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →