கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்க, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் சார்பில் மதன் வெளியிட,
தனுஷ், திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் நடிக்க , துரை.செந்தில்குமார் இயக்கி இருக்கும் படம் கொடி.
இந்த கொடி வெற்றிக் கொடியா ? வெற்றுக் கொடியா ? பார்க்கலாம் .
காது கேளாத – வாய் பேச முடியாத நிலையிலும், தான் சார்ந்த குடியரசுக் கட்சியின் தீவிரத் தொண்டன் ஒருவன் (கருணாஸ் ),
தனக்கு பிறந்த இரண்டு குழந்தைகளுக்கும் தனது தலைவர் (இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன்) கையால் பெயர் வைக்கச் சொல்கிறான் .
‘‘ வீட்டுக்கு ஒரு பிள்ளை நாட்டுக்கு ஒரு பிள்ளை’ என்று சொல்லும் அவர், பெரிய பிள்ளைக்கு கொடி (தனுஷ்) என்று பெயர் வைக்கிறார்.
இளையமகன் (இன்னொரு தனுஷ் ) அம்மா (சரண்யா ) பிள்ளையாக வளர, கொடி சிறு வயது முதலே அப்பாவுடன் கட்சிக் கூட்டங்களுக்கு போகிறான் .
கிராமம் ஒன்றில் அமைக்கப்பட்ட பாதரசத் தொழிற்சாலைக் கழிவுகளை அகற்றுவது குறித்து கட்சி நடத்தும் போராட்டம் போலீசாரால் அடக்கப்பட ,
போராட்டம் பிசு பிசுப்பது கண்டு மனம் வருந்தும் கொடியின் அப்பா , தீக்குளித்து சாகிறான் .
அதனால் மனம் நெகிழும் கட்சித் தலைவர் கொடிக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சியில் வளர்த்து விடுகிறார் . அதே நேரம் தலைவரின் மச்சான் உட்பட பல எத்ரிகளும் கொடிக்கு உருவாகின்றனர்.
இது இப்படி இருக்க , இவர்களுக்கு எதிரான கட்சியில், சிறு வயது முதலே மேடை ஏறிப் பேசி, ‘அரசியலில் பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும்’
— என்ற லட்சியத்தோடு இருக்கும் தீப்பொறி ருத்ரா (த்ரிஷா )வுக்கும் கொடிக்கும் சிறுவயது முதலே காதல் .
இருவரும் அவரவர் கட்சியில் வளரும்போது அரசியல் கனவுகள் , காதல் இரண்டுக்கும் இடையில் பெரும் உரசல்கள் ஏற்படுகின்றன. அதனால் ஏற்படும் விபரீதத்தின் விஸ்வரூபமே இந்தப் படம் .
சபாஷ் இயக்குனர் துரை செந்தில்குமார் !
ஒரு இயல்பான கதைக்கு மிக வித்தியாசமாக திரைக்கதை அமைத்து தனுஷ், திரிஷா , சரண்யா இவர்களை மிக அழகாக பயன்படுத்தி மிக மெச்சூரிட்டியுடன் கட்சிகளை நகர்த்தி
வழக்கத்துக்கு மாறான படத்தைக் கொடுத்து இருப்பது பாராட்டுக்குரிய விஷயம் . வாழ்த்துகள் !
குறிப்பிட்டுப் பாராட்ட படத்தில் பல காட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன . ஆனால் அதை எல்லாம் சொன்னால் பல கதைத் திருப்பங்கள் வெளிப்படும் என்பதால் கையைக் கட்டிப் போட்டுக் கொண்டு எழுத வேண்டி உள்ளது .
இரட்டை வேடங்களில் மிக அட்டகாசமான நடிப்பில் தனுஷ் . பிறவி அரசியல்வாதியாக வாழ்கிறார் . நுணுக்கமான உணர்வுகளை அந்த முகம் காட்டும் விதமே அலாதி .
முதல் இரட்டை வேடத்தை சும்மா போகிற போக்கில் செய்து இருக்கிறார் . கிரேட் .
ஆனால் யாரும் எதிர்பாராத ஆச்சர்யம் திரிஷாவின் அசத்தலான நடிப்பு . அப்படி உணர்ந்து நடித்திருக்கிறார் தனது கேரக்டரில் .
சரண்யா மனம் கனக்க வைக்கிறார் .
இன்னொரு கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் சொந்தக் குரல்லதான் பேசணும்னு யாருங்க அழுதீங்க ? பேச்சில் மலையாள நெடி தாங்கல .
வெங்கடேஷின் ஒளிப்பதிவு கதையின் சூழலுக்கு அழகாக துணை போகிறது . பிரகாஷின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக கொண்டு சொல்ல உதவுகிறது .
பாடல்களில் இனிமையாக மயக்கி பின்னணி இசையில் படத்துக்கு பலம் சேர்க்கிறார் சந்தோஷ் நாராயணன் .
நம்மூர் போலீஸ் லோக்கல் எம் எல் ஏ வை மதிக்காமல் ராஜ்ய சபா எம்பியை மதிக்கும் என்பது அவ்வளவாக லாஜிக் இல்லை. இது போல ஒரு சில இடங்களில் இடறல் இல்லாமல் இல்லை .
அதே போல படத்துக்கு பொருத்தமான கிளைமாக்ஸ் என்றால் அது சரண்யா சொல்லும் வார்த்தைகள்தான் . அங்கேயே படம் முடிஞ்சு போச்சு . அதன் பிறகு காளி வெங்கட் செய்யும் வேலை தேவை இல்லாத ஒன்று .
ஆனாலும்…
வெவ்வேறு கட்சியில் இப்படி முக்கிய இடத்தில் இருப்பவர்கள் இப்படி எல்லாம் லவ் பண்ணுவது சாத்தியமே இல்லாத ஒன்று . ஆனால் அதை சொன்ன விதத்தில்
நம்மை நம்ப வைத்து ரசிக்கவும் வைக்கிறார் பாருங்கள், இந்த இயக்குனர் துரை செந்தில்குமார் …
அங்கேயே இந்தப் படத்தின் தரம் நிரந்தரம் ஆகி விட்டது .
கொடி…. ஜெயக்கொடி.