நீல்கிரீஸ் ட்ரீம் என்டர்டைன்மென்ட் சார்பில் நீல்கிரீஸ் முருகன் தயாரிக்க, ராஜ்குமார், ஸ்ரிஜிதா கோஷ், கிரா நாராயணன், சோனல் சிங், நாகேந்திர பிரசாத் , ஊர்வசி நடிப்பில் ,
ஏ எல் வெங்கி எழுதி இயக்கி இருக்கும் படம் கூத்தன் . இவன் ஜித்தனா ? எத்தனா? பார்க்கலாம் .
ஸ்டுடியோ முதலாளி ஒருவர் படம் தயாரிப்பதை நிறுத்திய ஒரு நிலையில் அந்த ஸ்டுடியோவை பல ஏழை எளிய நடிக நடிகையர் குடியிருக்க,
சலுகைத் தொகையில் அனுமதிக்கிறார் . அது பிலிம் நகர் என்ற பெயரில் ஒரு காலனியாகவே இருக்கிறது
அங்கே வாழும் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவரின் ( ஊர்வசி) மகன் (ராஜ்குமார்) நடனத் திறமை உள்ளவன் .
ஒரு நிலையில் ஸ்டுடியோ அதிபரின் மகன் ஸ்டுடியோவை விற்கும் நிலைக்கு வருகிறார் . மொத்தமாக ஒரு கோடி கொடுத்தால் சம்மந்தப்பட்ட வீடுகளை,
அங்கு குடியிருக்கும் கலைஞர்களுக்கே கொடுத்து விட சம்மதிக்கிறார் . அதற்கு பணம் ஈட்ட முயல்கிறான் அந்த நடனக் கலைஞன்.
பரத நாட்டியப் பள்ளி நடத்தும் ஓர் இளம்பெண்ணின் ( கிரா நாராயணன்) தங்கைக்கு (ஸ்ரீஜிதா கோஷ்) மேற்கத்திய நடனத்தில் ஆர்வம் .
அவர்கள் வீடு கடனில் இருக்கும் நிலையில் கடன்காரன் நெருக்க , வீட்டை மீட்க அவர்களுக்கும் ஒரு கோடி ரூபாய் தேவைப்படுகிறது .
அவர்கள் வீடு இப்படி கடனில் மூழ்க காரணம், நம்பி ஏமாற்றிய இன்னொரு நடனக் கலைஞன் (நாகேந்திர பிரசாத்).
பிரபலமான நடனப் பள்ளி நடத்தி செல்வாக்கோடு திகழும் அவன் , நாட்டிய சகோதரிகளை ஒழித்துக் கட்டுவதாக சபதம் எடுத்திருக்கிறான் .
நடன நாயகனுக்கும் மேற்கத்திய நடன திறமை உள்ள பெண்ணுக்கும் காதல் வருகிறது .
இதற்கிடையே ஆசிய அளவிலான நடனப் போட்டி பற்றிய அறிவிப்பு வருகிறது . ஜெயித்தால்,
வரும் பணத்தில் ஸ்டுடியோவையும் வாங்கலாம் . வீட்டையும் மீட்கலாம் என்ற நிலை .
எனவே நாயகன் நாயகி இணைந்து களம் இறங்க , அவர்களை ஜெயிக்க விடாமல் தடுத்து தான் ஜெயிக்க,
அதிகாரம், பலம், செல்வாக்கு , அதிரடி தாக்குதல் எல்லாவற்றின் மூலமும் பிரபல நடனப் பள்ளி உரிமையாளன் முயல …
நடந்தது என்ன என்பதே இந்த கூத்தன் .
ஸ்டுடியோ தொடர்பான கதைப் பின்னல் அருமை . பாராட்டுகள் ஏ எல் வெங்கி
‘சினிமாக்காரனுக்கு எதுவும் நிஜத்தில் தேவை இல்லை . விரும்பிய எதையும் பக்கத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டே சுகம் காண அவனால் முடியும்’ என்ற வசனம் நெகிழ்வு .கவிதாலயா கிருஷ்ணன் நடித்திருக்கும் உலகப் படம் பற்றியே பேசும் கதாபாத்திரமும் சிறப்பு
பால்ஸ் ஜி இசையில் பாடல்கள் இனிமை . முணுமுணுக்க வைக்கின்றன . டி. ராஜேந்தர் பாடி இருக்கும்,
மங்கிஸ்தா கிங்கிஸ்தா, ரம்யா நம்பீசன் பாடி இருக்கும் காதல் காட்டு மிராண்டி பாடல்கள் சூப்பர்.
மாடசாமியின் ஒளிப்பதிவில் அதீத வண்ணம் .
நாயகன் ராஜ் குமார் உற்சாகமான நடனம் ஆடுகிறார் . ஆர்வமாக நடிக்கிறார் .
பரத நாட்டியப் பள்ளி ஆசிரியையாக மிக பொருத்தமான நடிப்பு உடல் மொழிகள் புன்னகை என்று அசத்தி உள்ளம் கொள்ளை கொள்கிறார் கிரா நாராயணன் . சபாஷ்
நாயகியாக வரும் ஸ்ரீஜிதா கோஷ் சிறப்பு
நிறைய டேக் வாங்கும் நடிகை கேரக்டரில் தனக்கே உரிய பாணியில் அசத்தி நடித்து இருக்கிறார் ஊர்வசி .
கவுரவத் தோற்றத்தில் பாக்கியராஜ் வரும் காட்சியில் லேசான முருங்கைக்காய் வாசனை மீண்டும் . !
நடனம் நடனப் போட்டி என்று டி வி ஷோ கணக்காக முக்கியக் காட்சிகள் நிகழ்வதும் , அண்மையில்,
லக்ஷ்மி என்ற படம் இதே கதைப் போக்கில் வந்து அதுவும் ஓடாததுமே இந்தப் படத்துக்கு பின்னடைவு .
எனினும் படம் சுவாரஸ்யமாக நகர்வதை பாராட்டலாம் .
கூத்தன் … கவர்கிறான் .