ஜீவ மலர் சத்தீஷ்வரன் மூவீஸ் சார்பில் தயாரித்து கதை திரைக்கதை வசனம் எழுதி சத்தீஷ்வரன் இயக்க, ஜெயகுமார், ஜெனிபர், பவா செல்லத்துரை , மாஸ்டர் ஆகாஷ், கிருஷ்ண மூர்த்தி, வீர சமர், கிரண் , பாலாசிங் ஆகியோர் நடித்திருக்கும் படம் .
குடிப் பழக்கம் காரணமாக மகன் மற்றும் மருமகளால் கைவிடப்பட்ட ஒரு பெரியவரை (பாலாசிங்) , குடும்பத்தோடு சேர்த்து வைத்து அவர் குடிப் பழக்கத்தை கை விடவும் காரணமாக அமைகிறார்கள் கிராமத்து மனிதர்கள் .
அவர்களின் முக்கியமானவர் கந்தன் (ஜெய்குமார்) . அவரது மனைவி செல்லக் கண்ணு (ஜெனீபர்) பள்ளிச் சிறுவனான மகன் ஆகாஷ் ( ஆகாஷ்) . அன்பான குடும்பம் .
இந்த நிலையில் அந்த ஊருக்கு டாஸ்மாக் கடை ஒன்று வருகிறது .
ஊரே திரண்டு வந்து எதிர்த்தும் ஒரு மாதம் கழித்து கடையை எடுத்து விடுவதாக கவுன்சிலர் ( கிரண்) சொல்வதை ஊர் நம்புகிறது . ஆனால் ஊர்த் தலைவரால் அதை சாதிக்க முடியவில்லை . காரணம் அதற்குள் பலரும் குடிகாரர் ஆகி விடுகிறார்கள் .
அவர்களில் கந்தனும் ஒருவர் . நண்பர்கள் குடிகாரர்கள் ஆக, அவர்களின் வழியே கந்தனும் குடிகாரர் ஆகிறார் .
செல்வம் , மரியாதை , குடும்ப நிம்மதி எல்லாம் போகிறது .
கந்தனை திருத்த செல்லக் கண்ணு எடுக்கும் எல்லா முயற்சிகளும் தோற்க , அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த குடிகாரன் .
நான் குடித்துக் கொண்டே இருப்பேன் துவங்கி குடியின் கொடுமையை மட்டுமே முக்கியக் கதையாக கொண்டு தமிழில் வந்திருக்கும் சில படங்களில் லேட்டஸ்ட் படம் இது.
நீட் தேர்வு கொடுமை , விவசாயிகளை மதிக்காத மத்திய அரசு, இந்தி மொழி அரசியல் என்று பல விசயங்களையும் தொடுவதை பாராட்டலாம் . சுய நல உறவுகளுக்கு உதவி , கடைசியில் கை விடப்பட்டு கலங்கும் சில அப்பாவிகளின் பிரதிபலிப்பாக கதாநாயகன் ஆகும் காட்சிகளும், கந்து வட்டிக்காரர்கள் நிலத்தை எப்படி எல்லாம் சமயம் பார்த்து தூண்டில் போட்டு பிடுங்குவார்கள் என்பதையும் சொல்லும் காட்சிகள் கனம்.
நாயகியாக நடித்து இருக்கும் ஜெனீபர் , சிறுவன் ஆகாஷ் இருவர் மட்டுமே நடிப்பில் சபாஷ் வாங்குகிறார்கள் . ஜெய்குமார் ஒகே .
மற்ற எல்லாரும் படு செயற்கையான நடிப்பு. அமெச்சூர் வசனங்கள் என்று படம் போகிறது .
அருள் செல்வன் ஒளிப்பதிவு ஜஸ்ட் ஒகே . ஒரே மியூசிக் பிட்டை வைத்துக் கொண்டு படம் முழுக்க கேப் இல்லாமல் அதையே வாசித்து படுத்தி எடுக்கிறார் இசை அமைப்பாளர்.
ஊருக்குள் ஒரு டாஸ்மாக் வருகிறது . அதனால் ஏற்படும் விளைவுகள் என்பது எப்படிப்பட்ட ஏரியா ! அரசியல்வாதி , போலீஸ் , சதிகள் , பெண்கள், ஆண்கள், போராட்டம், அதில் வரும் சதிகள், தந்திரம் , கோமாளிக் கூத்துகள் என்று பின்னிப் பெடல் எடுக்க வேண்டாமா ?
பாலாசிங் கேரக்டர் எல்லாம் படத்தில் கடைசி நேரங்களில் முக்கிய பங்கு எடுக்க வேண்டாமா ?
இன்னும் சிறப்பான காட்சிகள் , வசனம் , படமாக்கல் , இயக்கம் , நடிப்பு எல்லாம் தேவைப்படும் படம். .