எஸ் ஃபோகஸ் பிலிம்ஸ் சார்பில் எம் . சரவணன், சிராஜ் , டி. சரவணன் தயாரிக்க, ஜி வி பிரகாஷ், ஆர். பார்த்திபன், பாலக் பன்னீர் அடச்சே, பாலக் லால்வானி, யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர் , பூனம் பஜ்வா நடிப்பில் நடன இயக்குனர் பாபா பாஸ்கர் கதை திரைக்கதை வசனம் எழுதி நடனம் அமைத்து இயக்கி இருக்கும் படம் குப்பத்து ராஜா .
இன்றைக்கு நாற்பது வருடம் இரண்டு வருடம் மூணு வாரம் முன்பு ரஜினி காந்த், விஜயகுமார், மஞ்சுளா , பத்ம பிரியா நடிக்க டி ஆர் ராமண்ணா இயக்கிய படத்தின் பெயரும் குப்பத்து ராஜா . ஆனால் அது ஓரளவுக்கு ஓடிய படம் .
சரி இந்த குப்பத்து ராஜா , ராஜாவா இல்லை கூஜாவா ? பேசலாம் .
மாநகரின் வடக்குப் பகுதி குப்பம் ஒன்றில் வாழும் துடுக்கான இளைஞன் ராக்கெட் ( ஜி வி பிரகாஷ்) அப்பா ஊர் நியாயம் ( எம் எஸ் பாஸ்கர்) அம்மா இல்லை . அங்கே பல நல்ல காரியங்கள் செய்து பெயர் வாங்கி இருக்கும் – எம் ஜி ஆர் ரசிகனான எம் . ஜி ராஜேந்திரனுக்கும் ( பார்த்திபன்) ராக்கெட்டுக்கும் ஆகறது இல்லை .
ஆனால் ராஜேந்திரனும் ஊர் நியாயமும் நண்பர்கள் .

குப்பத்தில் வட்டிக்கு விட்டுப் பிழைக்கும் அடாவடி பெண்மணியின் மகளுக்கும் ( பாலக் ) ராக்கெட்டுக்கும் காதல் . அது அவளது அம்மாவுக்கு பிடிக்கவில்லை . அங்கே குடி வரும் வெள்ளை வெளேர் ஆண்ட்டி மேரி( பூனம் பஜ்வா)யைப் பார்த்து ராக்கெட் சொல் விடுவது காதலிக்கு பிடிக்கவில்லை .
அங்கே மிட்டாய் கம்பெனி நடத்தும் சேட் ஒருவனின் கம்பெனியில் குப்பத்துப் பெண்கள் பலரும் வேலை செய்கிறார்கள் . தவணை கட்டாத வாகனங்களை தூக்கி வரும் வேலையை அதே சேட்டுக்காகத்தான் ராக்கெட் செய்கிறான் . இந்த நிலையில் அந்த கம்பெனி மிட்டாயை தின்ற ஒரு பையன் காணாமல் போகிறான் . ஒரு சிறுமியும் ஆபத்துக்கு ஆளாகிறாள் .
அதே நேரம் ஊர் நியாயம் கொல்லப் பட , தன் அப்பனை கொன்றது ராஜேந்திரன் என்று கோபப்படும் ராக்கெட் அவரை அடிக்கிறான், குப்பம் ரெண்டு பட , குப்பத்தின் பெயரால் பிழைக்கு கவுன்சிலர் லாபம் பார்க்கிறான் . குழந்தைகள் என்ன ஆனார்கள் ? ஊர் நியாயத்தை கொன்றது யார் ? ராக்கெட் – ராஜேந்திரன் பிணக்கு என்ன ஆனது என்பதே குப்பத்து ராஜா .

ஜி வி பிரகாஷ் படம் முழுக்க எனர்ஜியாக குதிக்கிறார் . ஆடுகிறார் . அடிக்கிறார் . நடிக்கிறார் பார்த்திபன் கெத்து காட்டுகிறார் . பூனம் பஜ்வா பார்க்க சகிக்காத இடுப்பை காட்டுகிறார் பாலக் வாயை வாயை காட்டுகிறார் .
கூட்ட நெரிசல் உணர்வை, பின்புல உருவாக்கத்தை மகேஷ் முத்துசாமியின் சிறப்பான ஒளிப்பதிவின் துணையோடு அருமையாகக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் பாபா பாஸ்கர் .
கதாபாத்திரப் பெயர்களில் மண் மணம். அபாரம் .
மற்றபடி ஆயிரத்தெட்டு தடவை பார்த்து சலித்து இளித்து புளித்த கதை காட்சிகள் . சினிமா சினிமா சினிமா பக்கா சினிமாத்தனமான சினிமா .

இந்த மண்ணுக்கு பிழைக்க வருபவர்கள் எப்படி இந்த மக்களின் அறியாமை மற்றும் கள்ளங்கபடமற்ற தன்மை இவற்றை இங்கே கிடைக்கும் துரோகிகள் , அற்பர்கள் துணை கொண்டு பயன்படுத்தி நம்மை ஏய்க்கிறார்கள் என்று சொல்லும் விதத்தை பாராட்டலாம்
