வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஜி. கணேஷ் தயாரிக்க , புகழ்பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சித் தொடரின் நாயகன் குமரன் தங்கராஜ் நடிக்க (தொடரின் தயாரிப்பாளரும் கணேஷ்தான்) பாயல் ராதா கிருஷ்ணா, ஜி.எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா உள்ளிட்ட பலர் நடிக்க, நடிகரும் இயக்குனருமான பாலாஜி வேணுகோபால் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்
சமூகப் பொறுப்பு , நீதி நேர்மை மற்றும் பொதுமக்களுக்காக போராடும் குணம் கொண்ட – டிராபிக் ராமசாமி போன்ற ஒரு நபருக்கு (குமார வேல்) வீடு வாடகைக்கு கொடுத்து நெருங்கிய நண்பராகிறார் வீட்டு ஓனர் ஒருவர் ( ஜி என் குமார்) . வீட்டு ஓனரின் மகன் மகள் படிப்பு , கல்யாணம், பேரன் பேத்தி பிறப்பு சம்பவங்கள் எல்லாவற்றிலும் இணைந்து வீட்டு ஓனரின் குடும்பத்தில் ஒருவராகிறார் சமூகப் பொறுப்பாளி .
ஆனால் வீட்டு ஓனரின் பேரனான நாயகனுக்கு (குமரன் தங்கராஜ் ) அவரோடு மோதல். நாயகனின் நண்பன் ஒருவன் (இருக்கவே இருக்கார் பால சரவணன்)
சினிமாவில் டைரக்டாரகப் போராடும் நாயகன் படம் பண்ண முயன்று முடியாமல் , தாத்தாவின் வீட்டை விற்று படம் தயாரிக்க விரும்புகிறான் . ஆரம்பத்தில் மறுக்கும் தாத்தா அப்புறம் ஒத்துக் கொண்டு வீட்டின் உயிலில் சமூகப் பொறுப்பாளி நண்பருக்கும் ஒரு பங்கை எழுதி வைக்கிறார் .
அதை நாயகன் விரும்ப மாட்டான் என்று எல்லோரும் எண்ணும் நிலையில் சமூகப் பொறுப்பாளி மர்மமான முறையில் செத்துப் போகிறார் . அதில் கம்பெனி முதலாளிகள், நிறுவனங்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு மோட்டிவ் அல்லது பங்கு இருக்கலாம் என்ற சூழல்.
தாத்தாவின் வீட்டு மதிப்பு இருபது கோடி. சமூக பொறுப்பாளிக்கு, தாத்தா உயிலில் பங்கு கொடுத்தது பொறுக்காமல் நாயகன் , கொலை செய்து, அவர் இறந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டும் போலீஸ்காரர்,
நாயகனை கைது செய்ய முயல்கிறார் . அது நடக்கக் கூடாது என்றால் இருபது கோடியில் பத்து கோடியை லஞ்சமாகத் தர வேண்டும் என்கிறார் .
உண்மையில் அடிப்படையில் சமூகப் பொறுப்பாளிக்கும் நாயகனுக்கும் உள்ள தந்தை மகன் பாசம்; சமூகப் போராளி தனது வீட்டு ஓனர் நண்பரின் குடும்பத்துக்கு எவ்வளவு நல்லது செய்கிறார் ; அவரது கொடை , தியாகம் எல்லாம் புரிய வருகிறது.
உண்மையில் சமூகப்போராளி செத்தது எப்படி, நாயகன் – போலீஸ் டீல் என்ன ஆச்சு, என்ன நடந்தது என்பதை…..
இஷடத்துக்கு என்ன வேண்டுமானாலும் யோசித்து எழுதி நீட்டிக் கொண்டே போய் சுமார் சுமார் ஐந்து மணி நேர படம் போல் உணரவைத்தால் அதுதான் குமார சம்பவம்.
சமஸ்கிருதத்தில் காளிதாசன் எழுதிய ஒரு காப்பியத்தின் பெயர் குமார சம்பவம். அதே கதையை வைத்து மலையாளத்தில் ஒரு நல்ல படம்கூட வந்தது . இப்போ இந்த சம்பவம்,
வித்தியாசமான சிந்தனையாளர் இயக்குனர் பாலாஜி வேணுகோபால் . அதன்படி சில நல்ல காட்சிகள் வருகின்றன. வித்தியாசமாக எழுதுவார் அதன்படி சில காமெடிகள் வருகின்றன,
ஆனால் ஒரு தியேட்டரிக்கல் படத்தை , கதைக்கு போதுமான நீளத்தில் போதுமான திரைக்கதையோடு எங்கே நிறுத்த வேண்டும் எப்படி சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என்ற செல்ஃப் கண்ட்ரோல் புரிதல் இல்லாதவர் . அதுதான் படம் பார்ப்போரின் கழுத்துக்கு மேல் கத்தி போல தொங்குகிறது.
தனி மனிதனுக்கு சமூக அக்கறை வேண்டும் . பணத்தை விட அன்பு முக்கியம், உண்மை அன்பை வார்த்தையால் இனிக்க இனிக்க காட்ட வேண்டியது இல்லை செயலால் காட்ட வேண்டும் . நேர்மையாக வாழ வேண்டும்..
நாம தவறு செய்தால் பிள்ளைகள் அனுபவிப்பார்கள் .
ரொம்ப பாதிக்கப்பட்டு ஏமாற்றப்படுபவன் அதையே நியாய காரணமாக சொல்லி கெட்டவனாக மாற வேண்டியது இல்லை மேலும் நல்லவனாக தியாகியாகவும் மாறலாம்.
தமிழ் ஆசிரியராக இருந்த ஒருவரின் வாழ்வியல் நேர்மை , சரியான சமயத்தில் அவர் சொல்லும் ‘ தமிழ் வாழ்க’ வசனம்….
இப்படி படத்தில் பல நல்ல விஷயங்கள் சொல்கிறார் எழுத்தாளர் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். வாழ்த்துகள் . பாராட்டுகள்
காதலன் காதலி பயண சம்பவங்களுக்கு ஏற்ப, செத்துப் போன பாட்டியின் எக்ஸ்பிரஷன்கள் போட்டோவில் மாறுவது டைரக்ஷன் குறும்பு .ஆனால் அப்புறமும் அடுத்த காட்சியிலும் அது நீடிப்பது ஓவர் டோஸ். இதான் பிரச்னை.
செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு கொடுப்பது போல , கொஞ்சம் கூட சுரத்தில்லாத திரைக்கதை . அதோடு கனகச்சிதம், நேர்த்தி பற்றி கவலைப்படாத காட்சிகளை இஷ்டத்துக்கு யோசித்து எழுதி எடுத்து, தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கிறார்கள். .
அதில் கொஞ்சமே சொறியல் காமெடி மட்டும் தப்பிக்க, மற்ற நல்ல விஷயங்கள் பொலிவிழந்து போய் விடுகின்றன. எழுத்தில் வராத காமெடியை ‘டோய்யா டோக்கா’ பின்னணி இசை மூலம் உருட்டி கடுப்பேத்தறார் யுவர் ஆனர், இசை அமைப்பாளர் அச்சு ராஜாமணி.
ஜெக்தீஷ் ஒளிப்பதிவு ஒகே
நடிகர்கள் நடிகைகள் யாவரும் வித்தியாசமான முகங்கள் கவனிக்க வைக்கிறார்கள் . ஆனால் கண் காது மூக்கு வழியே எல்லாம் வழிய வழிய வஜனம் பேசிக் குவிக்கிறார்கள் . .
கேரக்டர் டிசைனாவது காப்பாற்றும் என்றால், வீட்டில்இருக்கும் நாயகனின் அம்மா, தங்கை என்று யாருமே சமூகப் போராளி நல்லவர் என்று நாயகனிடம் சொல்லாததது ஏன்? அப்போதான் ஜவ்வு மிட்டாயை பம்பாய் மிட்டாயாக இழுக்க முடியுமா?
தறிகெட்டு அலையும் திரைக்கதை. என்னென்ன என்னவோ திருப்பங்கள்.
மலை உச்சியில் பள்ளத்தில் உருளும் பேருந்து நசுங்கி நாசமாப் போச்சு ; நாம வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்தால்….
அது கடைசியாக ஒரு ஆற்றுக்குள் விழுமா இல்லையா என்பதைக் காட்டி, அது ஆற்றில் விழுந்து அடித்துக் கொண்டு போகுமோ என்னவோ ….. அதையும் அடுத்த அஞ்சு நிமிஷம் விலாவரியாக காட்டுவார்களோ என்று வயிற்றுக்குள் பயப் பந்துகள் உருளும் நிலையில் கருணை மனதோடு படத்தை முடித்து வைக்கிறார்கள் . கோடானு கோடி நன்றிகள் பாலாஜி வேணுகோபால்.
இப்போதே இமேஜ் என்று எதையாவது நினைத்துக் கொண்டு சிக்கித் தவிக்கிறீர்களா பாலாஜி வேனுகொப்[அழ. வெய்ய வந்துடுங்க.
முன்னொரு காலத்தில் தமிழில் டப் செய்து போடப்பட்ட மொக்கையான வேற்றுமொழி சீரியல்களை சில டிஜிட்டல் பிளஸ் சேனல்கள் போடுமே… அப்படி நகர்கிறது படம். அதிலாவது ஒரு கிராண்டியர் இருக்கும் . மாமியாரும் மருமகளும் ஈகோ முற்றி , பிச்சைக்காரனுக்கு சோறு போடக் கூட முச்சந்தி பிள்ளையார் கொவுளுக்குப் போகாமல் , கற் ஏறி, தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் போவார்கள் .
இந்தப் படத்தில் அது கூட இல்லை.
தனது டிவி சீரியலின் ஒரு பகுதியை சுருட்டி தியேட்டருக்கு தியேட்டருக்கு கொண்டு வந்து விட்டாரோ தயாரிப்பாளர் கணேஷ் என்று ஐயம் எழுகிறது . செலவைக் குறைத்து படம் எடுப்பது முக்கியம்தான் . அதற்காக செலவை இறுக்கிப் பிடித்து போட்ட காசும் தேறாத படம் எடுப்பது புத்திசாலித்தனமா?
பொங்கல் சுண்டல் மட்டும் கொடுத்து ஒரு படம் எடுக்கலாம். யார் வாங்குவார்கள். எப்படியாவது விற்கலாம். ஆனால் வெற்றி பெற, லாபம் பார்க்க முடியாது
ஒரு திரையரங்க வெற்றிப் படத்தின் சூட்சுமங்களை தயாரிப்பாளர்கள் அறிய வேண்டும் .
இந்தப் படத்தை விட , இவரது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆயிரம் முறை பெட்டர் என்று சொல்கிறார்கள்
குமார சம்பவம் ….. கொலை சம்பவம்
