ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் டி. குமாரதாஸ் தயாரிக்க, விஜய் விஷ்வா, மஹானா, நலீப் ஜியா, ஜான் விஜய், மதுமிதா, பருத்தி வீரன் சரவணன், சாம்ஸ், செந்தி குமாரி, காதல் சுகுமார் நடிப்பில் கெவின் ஜோசப் எழுதி இயக்க, 2024 ஆம் ஆண்டின் முதல் படமாக வந்திருக்கிறது கும்பாரி . கன்னியாகுமரி மீனவர்களின் தமிழில் கும்பாரி என்றால் நண்பன் என்று பொருள் .
யூ டியூபர் தர்ஷினி ( மஹானா) தன்னை சிலர் துரத்திக் கற்பழிக்க முயல்வது போல் ஒரு பிராங்க் வீடியோ எடுக்க, அதை நம்பிக் காப்பாற்ற வந்து, மொக்கை வாங்குகிறான், கேபிள் டிவி ஆப்பரேட்டர் இளைஞனான அருண் ( விஜய் விஷ்வா)
மோதல் வந்து, இருவருக்கும் காதல் வருகிறது .
அப்புறம் என்ன ? அதேதான்..!

தர்ஷினியின் தாதா மற்றும் அப்பாவி அண்ணன் துரை ( ஜான் விஜய்), அந்தக் காதலை ஏற்க மாட்டான் என்பதால், இருவரும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொள்ளப் போக, அங்கேதான் மணப்பெண்ணுக்கு சட்ட ரீதியாக திருமண வயது வருவதற்கு, இன்னும் ஒரு வாரம் இருப்பது தெரிகிறது .
ஒருவாரம் கழித்துதான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில்,விஷயம் தெரிந்த தாதா அண்ணன் துரத்திக் கண்டுபிடித்து திருமணத்தை தடுக்க முயல, , அருணின் நெருங்கிய கும்பாரியான ஜோசப் ( நலீப் ஜியா) எப்படியாவது திருமணத்தை நடத்தி வைக்க முயல , நடந்தது என்ன என்பதே படம் .
மிக இயல்பாக , அழகாக சிறப்பாக நடித்துள்ளார் விஜய் விஷ்வா. வெகுநாளாக வெற்றிகளுக்குப் போராடும் தகுதியான இந்தத் தம்பிக்கு இந்த வருடமாவது நல்ல படங்கள் அமையட்டும் .

எளிய அழகு , எளிய நடிப்பு என்று பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் மஹானா . சில காட்சிகளில் சஹானா சாரலாக தூறுகிறார் மஹானா.
தனது சொந்த காமெடி பிட்டுகளை படப்பிடிப்பு மற்றும் டப்பிங்கில் நிரப்பி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார் சாம்ஸ் .
வித்தியாசம் என்று எண்ணி ஜான் விஜய் கேரக்டரை கேனயன் போலக் காட்டி விட்டதால் முக்கியமான கதைப்போக்குக்கு கிடைக்க வேண்டிய பதட்டம் காணமல் போனதைப் பற்றி ஒரு ஜீவன் கூட கவலைப்படவில்லை. அவர், மதுமிதா, செந்தி குமாரி மற்ற படங்களில் செய்வதையே நடிப்பென்று இதிலும் செய்து இருக்கிறார்கள். ஒரு காட்சியில் சாம்ஸ் சொல்வது போல ஒரு வித்தியாசம் கூட இல்லை

பருத்தி வீரன் சரவணன் , காதல் சுகுமார் மாதிரி இருவர் படத்தில் தென்படுகிறார்கள். அவர்கள்தானா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.
கும்பாரி என்று பெயர் வைத்தவர்கள் , நடிபவர்களிடம் அந்த வட்டாரத் தமிழில் பேச வைக்க முயன்ற மாதிரி தெரியவில்லை
திற்பரப்பு அருவி உட்பட, கன்யாகுமரி, ஆலப்புழா லொக்கேஷன்கள் யாவும் அருமை . அதுவும் திற்பரப்பு அருவிக்கு மேல கேமரா பாயும் ஷாட் எல்லாம் ரம்மியம் .
அதே போல கடல்புறக் காட்சிகளும் சிறப்பு . ஒளிப்பதிவாளர் பிரசாத் ஆறுமுகத்துக்கு பாராட்டுகள். உழைத்த ஒட்டு மொத்த படக் குழுவுக்கும் வாழ்த்துகள்
படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு உற்சாகம் தெரிகிறது . அது பார்ப்பவர்களையும் தொற்றிக் கொள்ளட்டும் . வருடத்தின் முதல் படம் வெற்றி பெறட்டும் என்று வாழ்த்துவோம் .