சென்னை அலங்கார் தியேட்டரில் படம் பார்த்த ரஜினி ரசிகர்கள் படம் பிடிக்காமல் கோபத்தில் கொந்தளித்து வெளியே வரும் வேளையில் படத்தின் இயக்குனர் எஸ் பி முத்துராமன் எதிர்ப்பட, அவர் மீது பாய்ந்து விட்டார்கள் பாய்ந்து .
ரஜினியை ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோவாக கட்டமைத்த பிரம்மா என்பதற்காக எஸ்.பி. முத்துராமனுக்குக் கூட எந்த சலுகையும் காட்டவில்லை அவர்கள் . ஏனெனில் அந்த ரசிகர்கள் ரஜினி மீது கொண்ட பாசம் அப்படி
நல்லவேளை! லிங்கா படம் வெளியான அன்று படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிகுமார் எந்தத் தியேட்டருக்கும் போய் ரசிகர்களை சந்திக்கவில்லை. சந்தித்திருந்தால் நிலைமை விபரீதம் ஆகி இருக்கும் .
அப்படி ஒரு ஏமாற்றத்தை ரஜினி ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கிறது லிங்கா .
படம் வெளியான முதல் நாளே சென்னை காசி திரையரங்கின் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டது . திருநேல்வேலி பாம்பே தியேட்டரில் குண்டு வெடிக்காத குறைதான் . வடக்கு முதல் தெற்கு வரை நிலவரம் என்ன என்பதற்காக இதை சொல்ல வேண்டி இருக்கிறது .
ரஜினியின் படங்களில் அண்மைக் காலமாக ஓடாத படங்கள் லிஸ்டில் உள்ள குசேலன், பாபாவை விட மோசமான சரிவை சந்தித்து இருக்கிறது லிங்கா .
படத்தின் முதல் பாதியாவது பரவாயில்லை . இரண்டாவது பாதி திரையரங்குக்குள் உட்கார முடியவில்லை என்று ரஜினியை நேசிக்கும் தீவிர ரசிகர்களே மனம் நொந்து சொல்லும்படியாகிவிட்டது.
”சூர்யா நடித்து ஓடாத படங்களில் ஒன்றான ஆதவன் கிளைமாக்ஸ் ஞாபகம் வருகிறது . சூர்யாவுக்கு அஞ்சான் ரஜினிக்கு லிங்கா என்று ஆகிவிட்டது ” என ரசிகர்களே புலம்புகிறார்கள் . படத்தில் ராஜா கெட்டப் அருமை . ஆனால் டைட்டில் ரோலான லிங்கா கெட்டப் சகிக்கவில்லை என்று ரஜினியை மனமார நேசிக்கும் ரசிகர்களே வெறுப்போடு சொல்வதுதான் எதிர்பாராத ஒன்று .
பொதுவாக ரஜினி போன்ற சூப்பர்ஸ்டார் படங்களில் டூப் ஷாட்டுகள் தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனால் படத்தில் பல இடங்களில் டூப் ஷாட்டுகள் நிறைய இருப்பது படம் பார்க்கும் சாதாரண ரசிகர்களுக்கே தெரியும்படி படமாக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.
எந்த காழ்ப்புணர்ச்சியும் இன்றி படம் பற்றிய நியாயமான பல கமெண்டுகளே இப்படி இருக்க….
“இது யாருக்கு கடைசிப் படம்?” என்று ஆரம்பித்து சமூக வலை தளங்களில் வரும் கமெண்டுகள் ரொம்பவே ஓவர். .
இது இப்படி இருக்க, படம் ரிலீசாவதற்கு முன்பே ரஜினி லிங்கா பட விசயத்தில் அப்செட் அப்செட் ஆகி விட்டாராம்.
படம் ரிலீசாவதற்கு இரண்டு நாள் முன்பு ஒரு பிரபலம் ரஜினியிடம் லிங்கா படம் பற்றி கேட்க, படத்துக்கு ரஜினி கொடுத்ததாக கூறப்படும் ஒரு அடை மொழி, ரஜினி எப்படிப்பட்ட தீர்க்கதரிசி என்பதை சொல்லாமல் சொல்கிறது என்று வியக்கிறார் அந்த பிரபலம் .
நிஜமாவே மனசுக்கு கஷ்டமாக இருக்கு ரஜினி சார் !