ரைசிங் சன் பிலிம் சார்பில் கே. என். ரவிசங்கர் தயாரிக்க, தி வைப்ரன்ட் மூவீஸ் சார்பில் வெங்கடேஷ் ராஜா வெளியிட , வினய் கிருஷ்ணா , ஹாசிகா நடிப்பில் வீரா என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட் . படம் பவுண்டரி அடிக்கிறதா ? இல்லை விக்கெட் இழக்கிறதா என்று பார்ப்போம் .
விஷ்வா (வினய் கிருஷ்ணா ) ரம்யா (ஹாசிகா) காதல் ஜோடியின் காதலை ஏற்றுக் கொள்ளாமல், ரம்யாவுக்கும் அவளது முறை மாமன் சிங்கதுரைக்கும் (சென்ட்ராயன்) திருமணம் ஏற்பாடு செய்கின்றனர் ரம்யாவின் பெற்றோர் .
அம்மாவுடன் கோவிலுக்கு வருவது போல் வந்து காதலனுடன் ரம்யா ‘எஸ்’ஸாக, நண்பர்களின் துணையோடு பதிவுத் திருமணம் செய்து கொள்ள சென்னை வருகிறது காதல் ஜோடி . வந்தது ஒரு வெள்ளிகிழமை மாலை நேரம் . திங்கள் கிழமைதான் பதிவுத் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடற்கரையை ஒட்டிய பங்களாவில் மூன்று இரவுகள் தங்க வேண்டிய நிலை .
அங்கே தங்கி இருக்கும்போது ரம்யாவுக்கு அங்கே செத்துப் போன ஒரு பெண்ணின் பேய் பிடிக்க , பேய் பிடித்த ரம்யாவிடம் காதலன் விஷ்வா, விஷ்வாவின் நண்பன் கட்டளை (ஜீவா), பங்களா வேலைக்காரன் ஒய்ட்டு (முனீஸ் ராஜா) ஆகியோர் மாட்டிக் கொண்டு சின்னா பின்னப்பட, அவர்களை தொடர்ந்து முறைமாமன் சிங்கதுரை அவனது அல்லக் கைகள், அதன் பிறகு பெண் கடத்தல் வழக்கில் பெண்ணை தேடி வந்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் படும் பாடுதான் ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட் .
அதற்கு எதற்கு படத்துக்கு இப்படி ஒரு பெயர் என்கிறீர்களா? அதற்கு விடை ரம்யாவைப் பிடித்து ஆட்டிப் படைக்கும் பெண் பேயின் ஃபிளாஷ்பேக்கில் இருக்கிறது . பெண்களின் டிவி சீரியல் மோகம் ஆண்களின் கிரிக்கெட் பார்க்கும் மோகம் எப்படி விபரீத முடிவுகளை தரலாம் என்று அந்த ஃபிளாஷ்பேக்கில் ஒரு யதார்த்தமான விஷயத்தை கருத்து ரீதியாக சீரியசாகவும் படைப்பு ரீதியாக காமெடியாகவும் சொல்லி கவனம் கவர்கிறார் இயக்குனர் வீரா .
நாயகன் வினய் பரவாயில்லை ரகம். நாயகி ஹாசிகாவை பொறுத்தவரை காதல் காட்சிகளில் சோபிக்கவில்லை . மூன்று பேர் நிற்கும் காட்சிகளில் எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார் . ஆனால் பேயாக வரும் காட்சிகளில் மேக்கப் மற்றும் காற்றின் உதவியோடு கலக்குகிறார் .
உமேஷின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது . கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவில் சேசிங் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மிக காம்பாக்டாக ஒரு படத்தை முடிந்தவரை எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் .
திகில் மற்றும் காமெடி இரண்டையும் கலக்கும் லேட்டஸ்ட் டிரெண்டில் படம் எடுக்கப்பட்டு இருந்தாலும் காமெடி கம்மி . திகில்தான் கொஞ்சம் தூக்கல் .
பேயாக இருக்கும் பெண் செத்துப் போனதற்கு இயக்குனர் சொல்லும் பிளாஷ்பேக் காரணம், படத்துக்கு பலம் சேர்க்கிறது .
மொத்தத்தில் 1 பந்து நாலு ரன் i விக்கெட் …….
மெதுவாக ஓடும் பந்து தடுப்பார் இன்றி மெதுவாக உருண்டு பவுன்டரி லைனை தொட்டதால் மூன்று ரன்கள் தேவைப்பட்ட இடத்தில் நான்கு ரன்கள் கிடைக்க , அணிக்கு வெற்றி !