லப்பர் பந்து @ விமர்சனம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிக்க, அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யான்,ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவதர்ஷினி, ஜென்சன் திவாகர், டி எஸ் கே நடிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்கி இருக்கும் படம். 

பெரம்பலூர் மாவட்ட கிராமம் ஒன்றில் ரப்பர் பந்து  மூலம் கிரிக்கெட் ஆடும் இரு அணிகள் . அதில் பெயிண்டராக இருக்கும் நபர் ஒருவர்( அட்டகத்தி தினேஷ்) அட்டகாசமான  பேட்ஸ்மேன். விஜயகாந்த் ரசிகரான அவர் ஆடும் போது விஜயகாந்தின் பொட்டு வச்ச தங்கக்குடம் பாட்டை ஸ்பீக்கரில் போட்டால் சிக்சர்களாக அடித்துக் குவித்து விடுவார். 

நடுநிலை சாதியைச்  சேர்ந்த அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்துப் பெண்ணை ( ஸ்வாசிகா) காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில் தன் தாயோடும் ( கீதா கைலாசம்) மகளோடும் (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) வாழ்ந்து வருகிறார் . 

ஆனால் அவர் வேலை வெட்டி குடும்பம் என்று பாராமல் கிரிக்கெட் கிரிக்கெட் என்று ஊர் சுற்றுவது  மனைவிக்குப் பிடிப்பதில்லை.

அதே போல பக்கத்து ஊரில் ஒரு கிரிக்கெட் அணி . தாழ்த்தப்பட்ட சாதி ஆட்கள் தங்களோடு சேர்ந்து விளையாடுவதை மற்ற சாதியினர் வெறுக்க, அதில் பிரச்சனைகள் . இருவரையும் சமமாக நினைக்கிறார் அங்குள்ள கிரிக்கெட் அணியை உருவாக்கிய நடுநிலை சாதி நபர் ( காளி வெங்கட்) அவருக்கு தனது சக சாதியினரின் சாதி வெறி பிடிக்கவில்லை. அந்த ஊர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறப்பான பவுலர் ஒருவன். (ஹரீஷ் கல்யான்)

பெயிண்டரின் மகளும் பவுலரும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு போட்டியில் பெயின்டரும் பவுலரும் எதிரெதிர் அணியில் ஆட, இரு தரப்பு ஆட்களும் கொம்பு சீவி விட வார்த்தைகள் தடித்து ஈகோ,  பகை உருவாகிறது . 

ஒரு விளையாட்டில் மோதலாகி இருவரும் அடித்துக் கொண்டு கட்டி உருள்கிறார்கள்.

விஷயம் பெண்களுக்குத் தெரியவர , பெயிண்டரின் மனைவி பெயிண்டரின் நடத்தைக்காக அவரைப் பிரிய , அவரது மகளுக்கும் பவுலருக்கும் இடையிலான காதல் முறிய, 

சாதிய ரீதியாக கிரிக்கெட் அணிகளில் தாழ்த்தப்பட்ட சமூக ஆட்டக்காரர்களின்  கை ஒடுங்க, நடந்தது என்ன என்பதே இந்த லப்பர் பந்து . 

தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகளை உரிமைகளை சொல்லும் படங்கள் இன்னும் வர வேண்டியது கட்டாயம்தான் அதில் மாற்றம் இல்லை. 

ஆனால் தமிழில் வரும் தாழ்த்தப்பட்ட படங்களில் வரும் மற்ற சாதியினர் எல்லாம் மோசமாக இருப்பார்கள். தலித்துகள் எல்லாம் நல்லவர்களாக இருப்பார்கள். தலித்துகளில் ஒரு சிலரைக் கூட கதைக்காக தேவைக்காக கெட்டவர்களாகக் காட்டிக் கொள்வார்கள் . 

ஆனால் நடுநிலைச் சாதியினர் எல்லாம் கெட்டவர்கள்.. அயோக்கியர்கள்.. எந்திரன் படத்தில் ரெட் சிப் வைத்த சிட்டி உருவாக்கிய ஆயிரக்கணக்கான கெட்ட ரோபோக்கள் போலவே அவர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள் . 

அந்த அயோக்கியத்தனத்தின் மண்டையில் சம்மட்டி அடி கொடுத்து இருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர். 

தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணை காதலித்து மணந்த பெயிண்டர் ,  பெயிண்டரின் அம்மாவான மாமியார் உட்பட அனைவரும் அந்தப் பெண்ணைவீட்டின் தாயாக தலைவியாக  ராணியாகப் பார்ப்பது … 

தாழ்த்தப்பட்ட இளைஞர்களை விளையாட விடாமல் நாடு நிலைச் சாதி ஆட்கள் சிலர் தடுக்க, அதே தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்காக போராடி ரிஸ்க் எடுக்கும் நடுநிலைச் சாதி நபர் 

பெண் கிரிக்கெட்டரை தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவர்  கிண்டலாகப் பேச, “அவங்க நம்மள ஒடுக்குறது சாதித் திமிர்னா இப்ப நீ காட்டுறது ஆம்பளைத் திமிர் ” என்று கூறி அவரை பவுலர் கண்டிக்கும் காட்சி இவை இந்தப் படத்தின் மகுடங்கள் . 

நம்மில் நாலு பேரை அவர்கள் வெட்டினால் அவர்களில் நாற்பது பேரை நாம வெட்டுவோம். அதுதான் நீதி நியாயம் உரிமையை நிலைநாட்டும் விதம் என்ற ‘உணர்வு வஞ்சகத்துக்கு’ எதிராக, 

‘வெட்டுவது ஏன் தப்பு அதுல வெட்ட வருபவனுக்கும்  என்ன நஷ்டம் இருக்கு என்பதை அவனுக்கும்  புரிய வைத்து அவன் கையில் இருக்கும் கத்தியை அவனே கீழே போடும் சூழலை உருவாக்க வேண்டும்’ என்ற கருத்தியலை பலப்படுத்துவதற்காகவே இந்தப் படத்தின் இயக்குனருக்கு ஆளுயர மாலை 

வாழ்த்துக்கள் தமிழரசன் பச்சமுத்து 

அடுத்தபடியாக படத்தில் காமெடியும் சென்ட்டிமென்ட்டும் அப்படி அழகாகப் பின்னிப் பிணைந்து வருகிறது . முக்கியமாக காமெடி நிஜமான காமெடியாகவும் சென்ட்டிமெண்ட் நெகிழ வைக்கும் நிஜமான சென்டிமென்டடாகவும் இருக்கிறது .

படத்தில் பெண் கதாபாத்திரங்கள் உயர்வாகவும் சிறப்பாகவும் தனித்தன்மையோடும்  சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன. அந்த அழகே அழகு. 

என்னதான் வருங்கால மாப்பிள்ளை என்றாலும் கல்யாணம் ஆவதற்குள் தகவல் இல்லாமல் திடீரென்று அவன் வீட்டுக்குத் தனியாக வந்திருக்க, 

சட்டென்று அதிர்ந்து வெட்கப்பட்டு முந்தானையை எடுத்து முழு உடம்பை மூடிக் கொண்டு , “வாங்க மாப்பிளே.. செத்த கூடத்தில உட்காருங்கோ . தோ… காபி போட்டுண்டு வர்றேன் ” என்று பெயிண்டர் மனைவி வெட்கத்தோடு சொல்லவில்லை.

” என்னப்பா இது ? … இப்படி சொல்லாமக் கொள்ளாம வந்து நிக்கிற ? ” என்று முகத்துக்கு நேராக கேட்கிறாள். தக்காளி அவதான்டா தமிழச்சி. 

அதுவும் பெயிண்டர் தன் மனைவியின் தோளில் சாய்ந்து அழு காட்சி எல்லாம் வேற லெவல் ( இதுவரை பெண் அப்படி ஆண் தோளில் சாய்ந்து உடைந்து அழுவதைதான் தமிழ் சினிமா காட்டி இருக்கிறது) 

நியாயமான காரணத்துக்காக கோவித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய் விட்ட தாழ்த்தப்பட்ட சமூக மருமகளின் வீட்டுக்கு போய், ” பசிக்குது ஆத்தா ஒரு வாய் சோறு போடு ” என்று ஆண்ட சாதி மாமியார் கேட்கும் காட்சி இருக்கிறதே .. இந்தப் படத்தின் சிகரம் அது .

ஒரே நேரத்தில் சாதிய ஏற்றத் தாழ்வு மாமியார் மருமகள் முறைப்புகள் இரண்டையும் ஒரே காட்சியில் அடித்துப் பவுடராக்கித் தூவி இருக்கிறார்  இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து 

ஒரு தலித்தியப் படத்தில் தலித்திய ஆதரவுக் காட்சிகளை எப்படி வைக்க வேண்டும் என்பதை ரஞ்சித்தும் மாறி செல்வராஜும் தமிழரசன் பச்சமுத்துவிடம் கற்றுக் கொள்ள வேண்டும்  

அதே போல படத்தில் வரும் பெண்கள் எல்லாமே அழகாக இருக்கிறார்கள் . அதிலும் பெயிண்டரின் மனைவியாகவும் நாயகியின் அம்மாவாகவும் வரும் ஸ்வாசிகா .. முகம்,  தோற்றம் , உடல்வாகு , படத்தில் வரும் கெட்டப், நடிப்பு .. எல்லாவற்றிலும் கொள்ளை அழகு. பேரழகு. ரசிச்சுத் தீரல. 

முக்கியமாக ஆண்ட சாதி பெயிண்டரை விட அவரது மனைவியான இந்த தாழ்த்தப்பட்ட பெண் உயரமாக இருப்பார். உண்மை காதல் சாதி மதம் மட்டுமல்ல உயரப் பொருத்தம் கூடப் பார்க்காது என்பதை சொல்லி இருக்கும் விதமும் இயக்குனரைக் கொண்டாட வைக்கிறது . ஒரு கேரக்டரை இப்படித்தான் கதைக்குப் பொருத்தமாக வடிவமைக்க வேண்டும். அபாரம். 

கதாநாயகி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கம்பீரத்தின் புன்னகையோடு சிறப்பாக இருக்கிறார் நடிக்கிறார். 

ஒரு காலத்தில் பவுலரால் காதலிக்கப் பட்டு இப்போது சகோதரி முறையாகி விட்ட அந்தப் பெண் கூட பெக்கூலியர் அழகு . 

யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்பதால் கீதா கைலாசம், தேவதர்ஷினி ஆகியோரையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்வோம் 

அட்டகத்தி தினேஷ் ,  ஹரீஷ் கல்யாண் இருவரின் கெட்டப் மற்றும் நடிப்பும் அருமை .  இருவருமே நடிப்பில் சம்பவம் செய்திருக்கிறார்கள்.

பால சரவணன்,  ஜென்சன் திவாகர் வார்த்தை பந்துகளில் அமைதியின் ஸ்டம்புகளை எகிற வைக்கிறார்கள். 

அந்த டிபன் பாக்ஸ் டிராவல் அற்புதமான கருத்தியல் மற்றும்  டைரக்ஷன் உத்தி.

வெற்றி என்பது தனி மனிதர்களுக்கானது அல்ல, தனது சமூகத்துக்கானது என்று சொல்லும் கடைசிக் காட்சியில் சிகரமாக உயர்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. 

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்,எடிட்டர் மதன், கலை இயக்குனர் வீரமணி கணேசன் ஆகியோரும் சிக்சர்கள் அடித்து இருக்கிறார்கள். 

சின்னச சின்னதாக அடுத்தடுத்து அணிவகுக்கும் காட்சிகளை சிறப்பாக தொகுத்து இருக்கிறார் எடிட்டர் விநாயக மூர்த்தி  தென்னரசு 

இப்படி எல்லாம் செதுக்கியவர்கள் படத்தின் முக்கியமான திருப்பத்துக்கான கதாபாத்திரங்களின் குணாதிசய வடிவமைப்பில் சொதப்பி இருக்கிறார்கள் . 

மகளுக்காக உருகி உருகி வாழும் அப்பா… அந்த பெண்ணை துரத்தி துரத்தி காதலிக்கும் இளைஞன் … 

ஓரிரு காட்சிகளில் உருவான  காதல்… அதற்குள் யாரென்றே தெரியாமல் வருங்கால மாமனார் மருமகன் இடையே பிரச்னை என்று இருந்தால் பரவாயில்லை 

ஆனால் காதலனும் காதலியும் மாண்டேஜ் பாட்டில் பஸ் , பகல் , இரவு , கடை வீதி கல்யாண வீடு , ஹோட்டல் என்று சலிக்க சலிக்கக் காதலிக்கிறார்கள். அந்தக் காதலியின் அப்பா யார் என்பது காதலனுக்கு தெரியாமலேவா இருக்கும் ?  அவர்கள் என்ன உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் டோக்கியோவிலா வசிக்கிறார்கள் ? ஏம்ப்பா அவங்க வசிக்கிறது எங்க பெரம்பலூர்ல ப்பா. 

சரி அது கூட போகட்டும் ..

கிரிக்கெட் விளையாட்டில் பெயிண்டருக்கும் பவுலருக்கும் பிரச்னை ஆகி விட்டது . சரி சகஜம் . 
ஆனால் வீட்டுக்குப் பெண் கேட்டு வந்து விட்ட நிலையில்  அவன்தான் மாப்பிள்ளை என்று அவருக்கும் தெரிந்த பிறகு , அவர்தான் மாமனார் என்று அவனுக்கும் தெரிந்த பிறகு, 

ஒரு ஒன்றரை அணா ரப்பர் பந்து விளையாட்டுக்காக இப்படியா இருவரும் அடித்துக் கொண்டும் கடித்துக் கொண்டும் உதைத்துக் கொண்டும் கட்டிப் புரண்டு சண்டை போடுவார்கள்?

கேட்டால் இவர்தான் உலகத்திலேயே பாசமான அப்பாவாம். அவன் தான் உலகத்திலேயே நல்ல வெல்லம்  போட்ட மருமகனாம் . )  

அப்புறம் என்ன மண்ணாங்கட்டி மகள் பாசம்? உப்புக் கட்டி உண்மைக் காதல்?

கேரக்டர்ஸ் அசாசினேசன். 

இப்படி முக்கியமான இடத்தில் கோட்டை விட்டதால் , படத்தில் வரும் பல சிறப்பான காட்சிகள் கூட பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் பாசாங்காகப் போய் விட்டது . 

அண்மையில் வந்த புளூ ஸ்டார் படம் உட்பட பலமுறை பல விதங்களில் அண்மைக்காலமாக பலமுறை பார்த்த படங்களின் கதை என்பதும் ஒரு குறை. 

அப்படிப்பட்ட கதை கொண்ட படத்துக்கு இந்த நீளமும் அதிகமே. 

இந்த குறைகள் இல்லாமல் இருந்திருந்தால் ஒரிஜினல் இன்டர்நேஷனல் கூக்கபர்ரா பந்து அளவுக்கு தரமாக வந்திருக்கும் இந்த லப்பர் பந்து 

மகுடம் சூடும் கலைஞர்கள் :

***************************************

தமிழரசன் பச்சமுத்து, ஸ்வாசிகா,

தினேஷ்,  ஹரீஷ் கல்யாண் 

விநாயகமூர்த்தி தென்னரசு 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *