தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்டு இருக்கும விவாகரத்துப் பிரச்னை ஒரு பக்கம் இருந்தாலும் தனது படங்களைப் பற்றி இயல்பான உற்சாகத்துடன் பேசுகிறார் ஜெயம் ரவி.
வேல்ஸ் பிலிம் இன்டநேஷனால் தயாரிப்பில் வித்தியாசமான பேண்டசி படமான ஜீனி, ஸ்கிரீன் சீன் மீடியாவின் பிரதர் என்று இந்த வருடம் இறுதிக்குள் இரண்டு படங்கள் வர வாய்ப்பு இருக்கிறது. தியாகராஜன் குமார ராஜா கதை கேட்க வரச் சொல்லி இருக்கிறார். எனக்கு இன்னும் கூட பாரதி ராஜா டைரக்ஷனில் நடிக்க ஆசை இருக்கு ” என்கிறார் .
எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் பிரதர் படத்தின் கதாநாயகி பிரியங்கா மோகன் என்பதை விட முக்கிய விசயம் அதில் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிப்பவர் பூமிகா
“பூமிகாவை அக்காவாக பார்க்கச் சொல்வதெல்லாம் ரசிகர்களுக்கு செய்யும் துரோகமில்லையா/’ என்று கேட்டேன்.
” அப்படிப் பார்த்தால் எம் குமரன் படத்தில் நதியாவை அம்மாவாகக் காட்டியதே ரசிகர்களுக்கு செய்த துரோகம்தானே ” என்று சிரித்தவர் , “எப்படி எம் குமரன் படத்தில் நதியா அம்மாவாக வந்தது படத்துக்கு பலமாக அமைந்ததோ அப்படி இந்தப் படத்தில் பூமிகா எனக்கு அக்காவாக வருவது படத்துக்கு பலம் .
ஸ்கிரீன் சீன் நிறுவனம் எனக்கு மிக நெருக்கமான கம்பெனி. அவர்கள் தயாரிப்பில் படங்கள் பண்ணி இருக்கேன் . இப்போ பிரதர் பண்றேன். இன்னும் பண்ணுவேன் .
அவங்க நிறுவனத்துக்காக எம் ராஜேஷ் கதை சொல்ல வந்தபோது நான் அவரிடம் முழுக்க முழுக்க காமெடி வேணாம் சார் . கொஞ்சம் செண்டிமெண்ட் என்று கலந்து கதை சொல்லுங்க என்றேன் .அப்படி அவர் சொன்ன கதைதான் ஒரு அக்காவுக்கும் தம்பிக்குமான பாசம் . அதுதான் இந்தப் படம் .
எனக்கு அண்ணன் போலவே என் அக்கா ரொம்ப பாசமா இருப்பாங்க. அதனால சொன்ன உடனே எனக்கு கனெக்ட் அண்ட் கம்ஃபர்ட் ஆக இருந்தது .
சென்னையிலும் ஊட்டியிலும் படமாக்கி இருக்கோம் . “என்றார் .
“பொதுவாக எம் ராஜேஷிடம் எல்லோரும் முழுக்க முழுக்க காமெடி ஸ்கிரிப்ட் பண்ணிக்கிட்டு வாங்கன்னுதான் சொல்வாங்க . ஆனா நீங்க காமெடி வேணாம்ன்னு சொல்லி இருக்கீங்களே .. ஏன்?”என்றேன்
“ஆமா சார்… என்னைப் பொறுத்தவரை ஒரு படம் னா அந்தப் படத்தின் மூலம் எதாவது விஷயத்தை ஆடியன்ஸ் எடுத்துட்டுப் போகணும். வந்தோம் சிரிச்சோம் கிளம்புவோம் என்ற மாதிர்யான படங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு படம் மக்களுக்கு எதாவது சொல்லணும்.. செய்யணும்…
ராஜேஷுக்கு செண்டிமெண்ட்டும் நல்லா வரும். உண்மையில் ராஜேஷின் முதல் படமான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் காமெடி மட்டுமின்றி குடும்பப் பாசக் காட்சிகளும் நல்லா இருக்கும் . ஆனா காமெடியும் நல்லா இருந்ததால அவரை முழுக்க முழுக்க காமெடி டைரக்டரா ஆக்கிட்டோம் .
இதுல அந்த ராஜேஷைக் கொண்டு வர்றோம் . பட் அதே நேரம் பிரதர் படத்தில் காமெடியும் நல்லா இருக்கு.
ஜோடியாக பிரியங்கா மோகன் நடிச்சு இருக்காங்க, நட்டி சுப்பிரமணியம் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிச்சு இருக்கார் . சரண்யா பொன்வண்ணன் , சீதா, அச்யுத் குமார், யோகிபாபு, நடிச்சு இருக்காங்க . ராவ் ரமேஷ் இருக்கார். அவர் தெலுங்குன்னு நினைச்சா தமிழ் சுத்தமா பேசுவார். கேட்டா நான் சுத்தினது எல்லாம் சென்னைதான் சார் என்று சிரித்தார் .
சித் ஸ்ரீராம் மாதிரி பெரிய பாடகரா ஆக நினைக்கும் கேரக்டரில் வி டி வி கணேஷ் நடிச்சு இருக்கார் . அவருக்கே உரிய காட்சிகளும் உண்டு ” என்ற ஜெயம் ரவியிடம்
“ஆக, சித் ஸ்ரீராமாகக ஆக நினைத்து சித்திரவதை ஸ்ரீராம் ஆவதுதான் அவர் கேரக்டரா ?” என்றேன்
“அட, நல்லா இருக்கே சார்.. தெரிஞ்சிருந்தா படத்துல யூஸ் பண்ணி இருப்பேனே ..” என்றார் .
“பரவால்ல சார் டப்பிங் ல போட்டுடுங்க ” என்று சொல்லி விட்டு , “பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு வேறு எதாவது வரலாற்று நாயகர்கள் கேரக்டரில் நடிக்கணும் னு ஆசை வந்திருக்கா? யார் கேரக்டரில்? ” என்றேன்
“ஆசை இருக்கு. ஆனா யார் கேரக்டர் ன்னு நாம எப்படி சொல்ல முடியும்? என்னை ராஜராஜ சோழனா நடிக்க வைக்கணும்ன்னு மணிரத்னம் சாருக்கு தோணிச்சு . அது நடந்தது . அது வரை ராஜராஜ சோழனா நாம நடிப்போம்ன்னு நான் யோசிச்சு பாக்கவே இல்லை .
நமக்கு ஒப்பனை பண்றவங்க , ‘ மராட்டிய சிவாஜியா நடிக்க உங்க முகம் பொருத்தமா இருக்கும்’ ன்னு சொல்வாங்க . நாளைக்கு யாரவது ஒரு டைரக்டருக்கு அது தோணினாதான் அது நடக்கும் . அதனால எனக்கு ஆசை இருக்கு. யாராக நடிப்பது என்பது படைப்பாளிகள் கையில் “என்றார்
இந்தக் கட்டுரையின் முதல் வாக்கியத்தில் சொன்ன விசயத்துக்குப் பேச்சு வந்தது .
” நான் விவாகரத்து செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு என்னைக் கொண்டு வந்து விட்டார்கள். நம்ப மாட்டீர்கள். நான் போட்டிருந்த சட்டை பேன்ட் மட்டுமே என்னுடையதாக இருந்தது . ஒரு செக்கில் கூட நான் கையெழுத்துப் போட முடியாது . எதுவுமே இல்லை என்ற நிலைமையில் நின்றேன்.
விவாகரத்து மட்டுமே எனக்காக தீர்வாக இருந்தது .
இரண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசியும் வேறு வழி இல்லாமல் போனது .
ஒரு நிலையில் சட்டப்படி போய் விடுவதுதான் நல்லது என்று தோன்றியது . அப்படியே செய்தேன்.
என் குழந்தைகளை காட்ட மறுத்தார்கள். நான் சட்ட ரீதியாக, பார்க்க அனுமதி வாங்கி இருக்கிறேன்
கோர்ட்டில் இருப்பதால் கண்ணியம் கருதி பேச வேண்டாம் என்று நினைத்தேன் . ஆனால் அவர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எனவே நானும் இப்போது பேச வேண்டி இருக்கிறது.
அவர்கள் பேசுவதைப் பார்த்தாலே சுமூகமாகப் போக விரும்புகிற மாதிரி தெரியவில்லை என்பது எல்லோருக்கும் புரிகிறது .
பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ்சையும் என்னையும் தவறாக சொல்கிறார்கள். அவர் பல உயிர்களை காப்ப்ற்றியவர் . அவரும் நானும் சேர்ந்து ஒரு ஆன்மீக மையம் ஆரம்பிக்கப் போகிறோம் .
நான் கோவாவில் வீடு வாங்கினேன் . காரில் பெண்களோடு சுற்றுகிறேன் என்கிறார்கள் .
கார் அவர்கள் பெயரில் இருக்கிறது . ஆனால் என் காசில் வாங்கியது . எனவே கார் என்னிடம் இருக்கிறது .
கார் தொடர்பாக அவர்கள் போனுக்கு வரும் மெசேஜ்களை வைத்துக் கொண்டு என் மேல் கண்டதையும் சொல்கிறார்கள்.
என் காரில் நான் எனக்கு வேண்டியவர்களோடு பயணிப்பது தவறா?” என்கிறார், ஜெயம் ரவி .