ஹிப் ஹாப் தமிழா என்டர்டைன்மென்ட் சார்பில் ஹிப் ஹாப் ஆதி தானே தயாரித்து கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதிஇசை அமைத்து இயக்கி நாயகனாக நடிக்க,நாசர், நட்டி நட்ராஜ் அனகா ,அழகம்பெருமாள், ஹரீஷ் உத்தமன், முனீஸ்காந்த், சிங்கம்புலி , கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமாரவேல், தலைவாசல் விஜய், ஆகியோர் நடித்திருக்கும் படம்.
ஓரளவுக்கு நேர்மையான முதல்வரின் ( நாசர்) நம்பிக்கையான மைத்துனர் (நட்டி) , முதல்வருக்கு தெரியாமல் பல பெரும் ஊழல்கள் செய்கிறார் .
எந்தத் திட்டம் என்றாலும் அதில் செய்யும் ஊழலில் கால் பங்கு மத்திய அமைச்சருக்கு (தலைவாசல் விஜய்) , கால் பங்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு (இளங்கோ குமாரவேல் ) , பாதி தானக்கு என்று மைத்துனன் செயல்படுவதால் பிரச்னை இல்லாமல் போகிறது
பைத்தியக்காரத்தனமாக நடிக்கும் ரிஷிகாந்த் (சாரா) என்ற நடிகருக்கு பெரும் ரசிக ஆதரவு இருக்க, அவரை வைத்து தொடர்ந்து படங்கள் செய்து அதிலும் பணம் சம்பாதித்துக் கொண்டு அவரது ரசிகர்களையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார் மைத்துனர்.
இன உணர்வு என்ற பெயரில் மேடையில் நாடகமாக நடித்துப் பேசி ஒரு உணர்ச்சிவசப்படும் கூட்டதத்தை வைத்துள்ளார் புலிப்பாண்டி ( அழகம்பெருமாள்)
ஒரு நிலையில் முதல்வர் தன் மகளை (அனகா) அரசியலுக்குக் கொண்டு வர விரும்ப, ஆரம்பத்தில் அதிர்ந்தாலும் அந்த மகளையும் கைப்பாவையாக வைத்துக் கொள்ளலாம் என்று நம்புகிறார் மைத்துனர் .
ஆனால் முதல்வரின் மகள் காதலிக்கும் சமூக அக்கறை கொண்ட இளைஞன் (ஹிப் ஹாப் ஆதி) மூலம் மைத்துனரின் நினைப்பில் மண் விழுகிறது
முதல்வர் தனது மகளை கல்வி அமைச்சராக்க, அதன் மூலம் நல்ல திட்டங்களைக் கொண்டு வர காதலன் விரும்ப , காதலனைத் தீர்த்துக் கட்டத் திட்டம் போடுகிறார் ஊழல் மைத்துனன்.
இந்த நிலையில் ரஷ்யா சீனா இரண்டும் சேர்ந்து அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கு எதிராக ஒரு ரிபப்ளிக் படை என்ற படையை அமைக்கின்றன. ரிபப்ளிக் படை இந்தியாவை எதிரியாகப் பார்க்கிறது. ரிபப்ளிக் படையில் இலங்கையும் சேர்கிறது .
அந்தப் படை இந்தியா மீது படையெடுத்து டெல்லியை துவம்சம் செய்து சென்னை மீதும் குண்டுகள் வீசுகிறது. எல்லோரையும் கைது செய்து அடைத்து வைக்கிறது.
லஞ்ச ஊழல் அதிகார துஷ்பிரயோகம் மூலம் சம்பாதித்த பணமும் நகையும் பயனின்றி போய் ஒருவேளை சோற்றுக்கு அல்லாட வேண்டி இருக்கிறது . அதுவரை அரசியலுக்காக அடித்துக் கொண்டு இருந்தவர்கள் விடுதலைக்காக ஒன்று சேர்கின்றனர் .கெட்ட குணங்கள் மாறுகிறது .
முதலமைச்சர் மகளின் காதலன் என்ன செய்து எல்லாவற்றையும் சரி செய்தான் என்பதே படம் .
வித்தியாசமான கதைதான் . ஹிப் ஹாப் ஆதிக்கு இணையான கேரக்டர் நட்டிக்கு. சொல்லப் போனால் அதிகம் என்றே கூட சொல்லலாம்.
லொகேஷன் போர்க்களக் காட்சிகள் சி ஜி என்று பொருட்செலவில் தயாரித்து இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி . வழக்கமான ஹீரோயிசம் .
அருண்ராஜாவின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது.
பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் வெள்ளையன் நம்மை அடிமைப்படுத்தியபோது , பிரச்னைகளை மறந்து ஒன்றுபட்டு களமாடி விடுதலை பெற்றோம் .
இப்போது அதன் அருமை தெரியாததால், லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் , சாதி மத மொழி இனத் துவேஷம், வன்மம் மற்றும் வெறுப்புணர்ச்சி என்று அடித்துக் கொள்கிறோம் .
இன்னொரு முறை நாம் வேறு நாட்டிடம் அடிமையானால்தான் மறுபடியும் ஒன்றுபடுவோமா? அதற்குப் பதில் சுதந்திரமாக வாழும்போதே ஒற்றுமையாக அன்போடு நட்போடு, சாதி மத , இன மொழி நல்லிணக்கத்தோடு, அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தி நேர்மையாக வாழக் கூடாதா என்ற அற்புதமான கேள்வியைக் கேட்க வரும் படம் .
கேட்டார்களா? இல்லை
எவ்வளவு சிறப்பான கதை
ஆனால் இதற்கு சற்றும் பக்குவமோ, பொருத்தமோ , சிறப்போ, மேட்டிமையோ, அக்கறையோ, ஆழ அழுத்தமோ இல்லாத பக்குவமற்ற அரைவேக்காடு திரைக்கதை அமைத்து சொதப்பி இருக்கிறார்கள் .
இணைப்பு இல்லாமல் துண்டு துண்டாக சிதறும் காட்சிகள், தேவையற்ற அல்லது நீளமான, ஈர்க்காத விஷுவல்கள் , இஷ்டத்துக்கு ஓடும் திரைக்கதை, அழுத்தம் இல்லாத வசனங்கள் என்று இட்லி உப்புமாவையும் கொத்து பரோட்டாவையும் அடுப்பு நெருப்பில் கொட்டி கரிய விட்டு தட்டில் கொட்டி ஊட்டி விடுவது போல இருக்கிறது படம் . (ஒருவேளை அது கூட சுவையாக இருக்க வாய்ப்பு உண்டு)
ஆறடி அகலம் பத்தடி உயரத்துக்கு அட்டகாசமான அண்டா ஒன்று செய்து அதில் அரை சொம்பு மட்டும் தண்ணீர் ஊற்றி ,”குதிச்சு குதிச்சு குளிச்சு நீச்சல் அடிங்க ” என்று சொன்னால் எப்படி இருக்கும்?
அப்படி இருக்கிறது படம்.
ரஜினி சீமான் ஆகியோரை கலாய்க்கும் காட்சிகளால் படத்துக்கு கொஞ்சம் கவனம் கிடைக்கலாம் .
இதுதான் கிளைமாக்ஸ் என்றால் படத்துக்கு இந்த பெயரே தப்பு . மூன்றாம் உலகப் போர் என்பதே பொருத்தம்
மொத்தத்தில் கடைசி உலகப் போர்…. அக்கப் போர்