ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உடன் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் படம்.
தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் சிலர் ஆதிக்க சாதியினர் பயன்படுத்தும் கிணற்றில் குளிக்க, ஆதிக்க சாதிக் கிழவர்கள் சிலர் அந்தச் சிறுவர்களை கிணற்றுக்குள் வைத்துக் கல்லால் அடித்தே கொல்கிறார்கள் .
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஒரு சிறுவன் , திமுக போன்ற ஒரு அரசியல் கட்சியில் இருக்கும் தன் தந்தை (வடிவேலு), குற்றவாளிகளைத் தண்டித்து இறந்த தன் நண்பர்களின் மரணத்துக்கு நீதி பெற்றுத் தருவார் என்று காத்திருக்க , கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அவரைச் செயல்பட விடாமல் செய்து விடுகிறார், கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஆதிக்க சாதிப் பிரமுகர் ( அழகம்பெருமாள் ).
அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன் கோபம் கொண்டு தனது தந்தையிடம் பேசுவதையே நிறுத்தி விடுகிறான் . பதினைந்து வருட இடைவெளியில் தந்தை அரசியலில் வளர்ந்து அந்த தனித் தொகுதியில் எம் எல் ஏ ஆகி விடுகிறார். எனினும் அதிகாரம் என்பது அங்கே தொடர்ந்து ஆதிக்க சாதிப் பிரமுகர்களிடமே இருக்கிறது.
சிறுவன் வளர்ந்து இளைஞனாகி (உதயநிதி) அடிமுறை எனும் தற்காப்புக் கலையைக் கற்றுத் தரும் பள்ளி நடத்துவதோடு பன்றி வளர்ப்பிலும் ஆர்வத்தோடு இருக்கிறான்.
ஆதிக்க சாதியில் பிறந்தாலும் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசக் கல்வி தரும் கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் பெண்ணுக்கும் ( கீத்தி சுரேஷ்) அவனுக்கும் காதல் .
அதே போல முந்தைய தலைமுறை ஆதிக்க சாதி அரசியல்வாதி இறந்து அவரது மகன் ( பகத் பாசில்) கட்சியில் சக்தியோடு மாவட்டச் செயலாளராக இருக்கிறான். அப்பனை விட மோசமாக இருக்கிறான்.
அவனது அண்ணன் ( சுனில்) நடத்தும் கல்வி நிலையத்துக்கு , நாயகி, நாயகனின் இடத்தில் நடத்தும் இலவச கல்வி நிலையத்தால் நஷ்டம் வர, அதை ஆதிக்க சாதி அண்ணன் அடித்து உடைக்க, நாயகிக்காக நாயகன் களம் இறங்கி ஆதிக்க சாதி நபரின் கல்வி நிலையத்தை அடித்து நொறுக்குகிறான் .
சம்பவம் செய்தது நமது கட்சி எம் எல் ஏ வின் மகன்தான் என்பது மாவட்டச் செயலாளருக்குத் தெரிய வர, பேச்சு வார்த்தைக்கு எம் எல் ஏ வையும் நாயகனையும் அழைக்கிறார்கள்.
இருவரும் போகின்றனர்.
தன் வீட்டுக்கு யார் வந்தாலும் உட்கார வைத்துப் பேசும் பழக்கம் உள்ள தன் தந்தை அங்கே வயதில் மிக இளைய மாவட்டச் செயலாளர் முன் நின்று கொண்டு பேசுவதைப் பார்க்கிறான் நாயகன் . எல்லோரும் நாயகனை உட்காரச் சொல்கிறார்கள். ஆனால் அவனது அப்பாவை உட்காரச் சொல்லவில்லை . மகன் அப்பாவை உட்காரச் சொல்ல, ‘ அவர் உட்கார மாட்டார் அது அவரது பழக்கம் இல்லை’ என்று மாவட்டச் செயலாளர் மறுக்க, பேச்சு வளர்ந்து அடிதடியாகி கொலை முயற்சி வரை போகிறது .
விஷயம் தெரிந்த மாநில முதல்வர், எம் எல் ஏ பக்கம் நின்று மாவட்டச் செயலாளரைக் கண்டிக்கிறார். கட்சி மாறுகிறான் மாவட்டச் செயலாளர். ‘எம் எல் ஏவாக இருக்கும் நாயகனின் தந்தையையும் நாயகனையும் வரும் தேர்தலில் தோற்கடித்து அப்புறம் கொல்வேன்’ என அவன் சபதம் போட, நடந்தது என்ன என்பதே இந்த மாமன்னன்.
டைட்டிலிலேயே துவங்குகிறது ஏ ஆர் ரகுமானின் இசை அரசாங்கம் . பின்னணி இசை சிறப்பு .
வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் , உதயநிதி ஸ்டாலின் என்ற வரிசையில் தனது பெயரைப் போட்டுக் கொள்கிறார் உதயநிதி ஸ்டாலின் .
குளிக்க வந்த சிறுவர்களை கல்லால் அடித்துக் கொல்லும் காட்சி பதைபதைக்க வைக்கிறது என்றால், அடுத்து அந்த பெரிய நீர்க் கிணற்றைத் தூர்ப்பது சாதி ஆணவத்தின் கோர முகத்தைக் காட்டுகிறது . சாதி வெறியை ஒரு வெறியோடு காட்டி இருக்கிறார்கள் படத்தில் .
உன்னை சாதியால் தாழ்த்துபவனை அடித்து நொறுக்கு. சொல்லப் போனால் முதல் அடி உனது அடியாக இருக்க வேண்டும் என்பது பல காட்சிகளில் உணர்த்தப்படுகிறது
சும்மா சொல்லக் கூடாது ….. அப்பாவை உட்கார வைக்க மகன் முயல அது சண்டையாக வெடிக்கும் காட்சி உண்மையாகவே திரையில் தீப்பிடிக்கிறது . அந்த உயிர்க் காட்சியை அருமையாக எடுத்து எடுக்கிறார் மாரி செல்வராஜ். நாம பார்ப்பது படம் என்ற உணர்வே அங்கு வரவில்லை. களத்தில் ஒருவராக நம்மையும் நிற்க வைத்து விடுகிறார் இயக்குனர்
தான் ஒரு சிறப்பான feeler என்பதை பல காட்சிகளில் நிரூபிக்கிறார் மாரி செல்வராஜ்.
தன் சாதி சங்கத்தைக் கண்டு கொள்ளாத வில்லனை காலில் விழ வைத்து மன்னிப்புக் கேட்கச் சொல்லும் காட்சியில், சாதி வெறி என்பது எப்படி வில்லனுக்கு எல்லாம் வில்லத்தனமானது என்று காட்டும் விதம் அபாரமானது
கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார் உதயநிதி . முக்கிய வசனங்களை அவர் பேசும் விதம் கச்சிதம். சபாஷ்
டைட்டில் ரோல் வடிவேலுவுக்கு . வடிவேலு முகபாவனைகளுக்கோ குரலுக்கோ வேலை இல்லாமல் கதைப்படி சரியான காட்சிகளில் அவரை இந்தக் கதாபாத்திரத்தில் முழுமையாக ஏற்க முடிகிறது . உதாரணமாக அவர் கையில் கத்தியோடும் துப்பாக்கியோடும் வரும் காட்சி.
மருந்துக்குக் கூட குறை சொல்ல முடியாமல் அட்டகாசமாக நடித்து இருக்கிறார் ஃபகத் பாசில் . இல்லா விட்டால் அப்படி ஓர் உருவத்தை வைத்துக் கொண்டு இப்படி ஒரு கேரக்டருக்கு நியாயம் செய்ய முடியுமா? அசத்தல் ஃபகத்.
படித்து விட்டு கோட் போடு என்று சொன்னார் அம்பேத்கார் . எதற்கு ? ‘உன் கோமணம்தான் உன்னை கேவலப்படுத்தும் முதல் ஆயுதம்’ என்பதால்தான் . அப்படி இருக்க, ‘நான் படித்து வக்கீல் ஆனாலும் கோவணம் மட்டும் கட்டிக் கொண்டுதான் கோர்ட்டுக்குப் போவேன்’ என்பது என்ன மாதிரியான சிந்தனை ?
அதே போலத்தான் இந்தப் படத்தில் நாயகன் பன்றி வளர்ப்பதும் பன்றி தொடர்பான அவ்வளவு காட்சிகளும்! மிக முக்கியமான சூழல்களில் கூட யாரவது பன்றியைத் தடவிக் கொண்டு இருப்பதும் எதற்கு? பன்றி வளர்க்கப்படுவது எதற்கு? கறிக்குதானே? நாயகன் பன்றி வளர்த்து அதை என்ன செய்கிறார்?
அவமானம் என்று சொல்லப்படும் விசயத்தையே தனக்கு உரியது என்று குறியீடாக வெளிப்படுத்தி மார்தட்டுவது தவறில்லை . அது ஒடுக்கப்பட ஒவ்வொருவருக்குமான உரிமை .
ஆனால்அந்தக் குறியீடு அளவுக்கு மீறிப் போனால் என்ன ஆகும் என்பதற்கு படத்தில் பன்றிகள் காட்டப்படும் விதம் உதாரணம்.
பழசுதான் என்றாலும் பன்றிக்குப் பதில் அங்கு பறையும் பைந்தமிழ்ப் பாடல்களும் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? நினைத்தாலே சிலிர்கிறது
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது செய்த ஒரு சம்பவம்தான் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் . அதைப் பயன்படுத்த அனுமதித்ததற்காக உதயநிதியைப் பாராட்டலாம்
சமூக நீதி அடையாளம் கொண்ட கட்சிகளிலும் கூட சாதி வெறி எப்படி இருக்கிறது என்பதை சொன்ன வகையிலும்,, அது போன்ற சமயங்களில் கட்சித் தலைமைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பொட்டில் அடித்தாற்போல சொன்னதற்காகவும்..
மாமன்னன் பாராட்டப்பட வேண்டியவன் . அந்த வகையில் இந்தப் படம் அவசியமான ஒன்று.

