ஆவணப் பட இயக்குனரும் பெரியாரியவாதியுமான பிரபாவதியும் (ஜோதிகா) அவளது வருங்காலக் காதல் கணவனின் ( மாதவன் ) அம்மாவும்,
கணவனை இழந்தவருமான கோமாதா என்கிற கோமதியும் (ஊர்வசி) இப்போதே ஒரே வீட்டில் நெருங்கிய தோழிகளாக வாழ்கிறார்கள் . 
கத்தாரில் நட்சத்திர உணவு விடுதி ஒன்றில் சமையல் கலைஞனாக பணியாற்றும் மகனோடு ஒரு நிலையில் ,
மருமகள் போய் விடுவாள் என்ற எண்ணத்தில் இருக்கும் கோமாதாவின் மனதில் ஒரு பெரியகுறை உண்டு .
சிறுவயதில் கட்டுப்பாடு மிக்க கிறிஸ்தவப் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்த கோமாதாவுக்கு ராணி அமிர்தகுமாரி, சுப்புலட்சுமி என்று இரண்டு தோழிகள்.
ஒவ்வொருவரும் ஒரு வகையில் குடும்பத்தின் அன்பை இழந்த காரணத்தால் மூவரும் உயிருக்கு உயிரான தோழிகளாக பழகுகிறார்கள் .
பசு மாட்டுக்குப் பிரசவம் பார்க்கிறார்கள் . சிறு சிறு தவறுகள் செய்து சிஸ்டர் மேடத்திடம் சிக்குகிறார்கள் .
கமல் , ரஜினி ரசிகைகளாக மட்டுமே பிரிந்து கொள்ளும் இவர்கள் அவள் அப்படித்தான் படம் வெளியான தினத்தன்று –
சினிமா பார்க்கும் ஆசையில் ஹாஸ்டல் சுவர் ஏறிக் குதித்து தியேட்டருக்குப் போக , விஷயம் அறிந்து அங்கு வரும் சிஸ்டர் மேடத்திடம் மாட்டிக் கொள்கிறார்கள் .
அடுத்த நாள் ஒரு மழை நேரத்தில் சுப்புலக்ஷ்மியின் பெற்றோரும் ராணி அமிர்த குமாரியின் பெற்றோரும்,
தத்தம் மகளை லுக்கட்டாயமாக இழுத்துப் போய் விட, உயிர் நட்பு ஒரு நிகழ்வில் பிரிக்கப் படுகிறது .
அதன் பிறகு 38 வருடங்களாக தன் தோழிகளைப் பார்க்காத கோமாதாவுக்கு அது பெரிய குறை .

அதை உணரும் இன்றைய தோழியும் வருங்கால மருமகளுமான பிரபாவதி, தனது கலப்புத் திருமண சேவை, ஆணவக் கொலைகளை தடுக்கும் வேலை , பழங்குடி மக்கள் நலன்,
– இவற்றோடு தனது ஆவணப் பட வேலைகளுக்கும் இடையே கோமாதாவின் தோழிகளை முகநூல் மூலம் கண்டு பிடிக்கிறாள்.
வட இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு கட்சியின் லோக்கல் புள்ளியாக திகழும் கோதண்டராமனுக்கு (நாசர்),
மனைவியாக வாழும் ராணி அமிர்தகுமாரியை (பானுபிரியா ) முகநூல் மூலம் கண்டு பிடிக்கிறார்கள் .
கோதண்டராமனும் அவரது மூத்த மகன் கார்த்தியும் (பாவல்) பெண்களை மனிதராகவே மதிக்காத ஆணாதிக்கவாதிகள் . மிருக குணம் கொண்டவர்கள் .
இளையமகன் பாலாஜியும் (அம்புலி கோகுல்) மகளும் கொஞ்சம் பரவாயில்லை என்ற நிலை .
தமது கட்சியின் இன்னொரு அரசியல்வாதியை எதிர்த்து எப்படியாவது கவுன்சிலர் சீட்டை பிடித்து விட வேண்டும் என்பது கோதண்ட ராமன் மற்றும் கார்த்தியின் திட்டம் .
பிரிந்தவர் கூடிய நிலையில் போனில் கோமாதாவும் ராணியும் பேசி அழுது நெகிழ்ந்து மகிழ்கிறார்கள் .
தொடர்ந்த பிரபாவதியின் முகநூல் தேடலால் ஹைதராபாத்தில் சுப்புலட்சுமி (சரண்யா பொன்வண்ணன் ) இருப்பது தெரியவருகிறது .
காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள அம்மாவுக்கு பயந்து மறுத்து , சுப்புவைக் கல்யாணம் செய்து கொண்டு —

மன சாட்சியோ நேர்மையோ தனித்தன்மையோ இல்லாத –சுய நலம் மட்டுமே பார்த்து வாழ்கிற குடிகார கணவனுக்கு ( லிவிங்ஸ்டன்) வாக்கப்பட்டு,
கர்ப்பத்தில் முதல் குழந்தை பெண்ணாக உருவான காரணத்தால் வலுக்கட்டாயப்படுத்தி கர்ப்பம் கலைக்கப்பட்டு ,
அடுத்து குழந்தை பிறக்க முடியாத நிலையில் மலடி என்ற அவச் சொல் சுமந்து—
உடல்நிலை சீர்கெட்டு படுத்த படுக்கையாக இருக்கும் மாமியாரை,
கவனித்துக் கொண்டு வாழும் வாழ்க்கையில் வெறுமையாக இருக்கிறாள் சுப்புலட்சுமி .
ஜார்க்கண்டில் ஆவணப் பட வேலைக்காக தன் குழுவோடு செல்ல வேண்டிய பிரபாவதி அதற்கும் முன்பாக,
அதை விட முக்கிய வேலையாக கோமாதாவையும் சுப்புவையும் அழைத்துக் கொண்டு ராணியைப் பார்க்க போகிறாள்
பெண்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத ஆணாதிக்க மனோபாவமும் மிருக குணமும் கொண்ட ராணியின் வீட்டுக்குள் இவர்கள் நுழைகிறார்கள் .
தோழிகள் சந்திப்பு மகிழ்ச்சி நெகிழ்ச்சி !
அந்த நேரத்தில் ராணி இருக்கும் பகுதியின் கவுன்சிலர் தேர்தலில் அந்த பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட ,
வேண்டா வெறுப்பாக ராணியை நிறுத்துகிறது அந்தக் குடும்பம் . ஜெயித்தால் வீட்டில் சமையல் செய்து கொண்டு,
கணவன் நீட்டிய இடத்தில் கையெழுத்து மட்டுமே போடுகிற அதே இந்திய பெண் கவுன்சிலர் பதவி !
கோபம் கொண்ட சக அரசியல்வாதி , ராணி குடும்பத்தில் ராணி உட்பட யாரையாவது கொலை செய்யவும் தயங்கமாட்டான் என்பது நிலைமை.
ராணி அந்த வீட்டில் சம்பளம் வாங்காத வேலைக்காரியாக இருப்பதைக் காணும் பிரபாவதி,தோழிகள் மூவருக்கும் சந்தோஷமான பயண அனுபவம் தருவதற்காக ,
பழங்குடி மக்கள் வாழும் ஒரு அழகான அருவியை நோக்கி வட இந்தியா முழுக்க நீண்ட ஒரு கார் பயணத்தில் அழைத்துச் செல்கிறாள்.
கேட்டால் அனுமதி கிடைக்காது என்பதால் ராணி சொல்லாமல் வந்து விட, முதலில் சக அரசியல்வாதியை சந்தேகப்பட்டு ,
பிறகு அம்மாவின் பயணம் பற்றி அறியும் முரட்டு மகன் கார்த்திக் , கடும் கோபத்தோடு ஆயுதங்களுடன் கிளம்புகிறான் .
இங்கே தோழிகள் சந்தோஷ போதையில் கணவன் மற்றும் குடும்பத்தார் செய்த கொடுமைகளை குத்துச் சண்டைப் பொதியைக் குத்திப் பழிவாங்கி இலகுவாக ,
அங்கே கார்த்திக் மிலிட்டரி, பெண்கள் ஆயுதப்படை இவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகிறான் .
ஒரு நிலையில் அருவிப் பகுதியில் இவர்களை அவன் சந்திக்க,
அப்புறம் என்ன நடந்தது ? சுப்புவின் கணவன் மற்றும் மாமியார் நிலை என்ன ? திட்டமிட்டபடி அங்கு வருவதாக சொன்ன —
கோமாதாவின் மகனும் பிரபாவின் வருங்காலக் கணவனுமான சுரேந்தர் அங்கு வந்தானா ?
ஆம் எனில் நடந்தது என்ன? இல்லை எனில் நடந்தது என்ன என்பதே இந்த மகளிர் மட்டும் !
போற்றுதல்கள் இயக்குனர் பிரம்மா !
தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களின் குறிப்பாக கதாநாயகி போன்ற முக்கிய பெண் கதாபாத்திரங்கள் ,