பாலி ஜூனியர் பிக்சர்ஸ் , இந்தியன் மூவி மேக்கர்ஸ் சார்பில் நிவின் பாலி, பி எஸ் ஷாம்னாஸ், அஃப்ரிட் ஷைன் தயாரிப்பில் நிவின் பாலி , ஆசிஃப் அலி, லால், ஷான்வி வத்சன், சித்திக் நடிப்பில் எம் . முகுந்தன் கதைக்கு அஃப்ரிட் ஷைன் திரைக்கதை எழுதி இயக்கி மலையாளத்தில் வந்திருக்கும் படம் .
நாட்டில் உள்ள இளம் பெண்களை எல்லாம் அந்தப்புரத்துக்குக் கொண்டு போய் விடும் ஒரு மன்னனுக்கு (லால்) எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தீராத விக்கல் நோய் இருக்கிறது . மிக அழகான ஓர் இளம்பெண்ணின் கண்ணீர் ஒரு கிண்ணம் குடித்தால் விக்கல் தீர்ந்து விடும் என்று தெரிந்து விட , அதை வெளியில் நேரடியாக சொல்லாமல் அப்படி ஒரு பெண்ணை (ஷான்வி வத்சன்) தனது தளபதியிடம் (ஆசிஃப் அலி) சொல்லி கடத்தி வரச் சொல்கிறார் மன்னர் .
அந்தப் பெண்ணை ஒருதலையாகக் காதலிக்கும் பாடகன் ஒருவன் இருக்க, அவளுக்கும் தளபதிக்கும் காதல் வருகிறது .எனினும் தளபதி அந்தப் பெண்ணை மன்னனிடம் ஒப்படைக்க , அவள் தன்னை மன்னன் கெடுத்து விடுவான் என்று அஞ்சுகிறாள் .
பார்வைக்கும் பேச்சுக்கும் கடினமாக முரடாக இருக்கும் முடியாட்சிக் கால மனிதர்கள் நெஞ்சில் இருக்கும் ஈரம் இரக்கம் கூட இன்றைக்கு சட்டம் படிக்கிற நீதி வழங்குகிற – பார்ப்பதற்கு கண்ணியமாக – மென்மையாகத் தோன்றுகிற மனிதர்களிடத்தில் இல்லை என்பதையும் ,
தற்கால நீதிமன்ற நடைமுறைகள் எப்படி இரக்கமும் அறிவும் அற்றதாக உள்ளன என்பதையும் அட்டகாசமாக நையாண்டியும் சீரியசுமாய் சொல்லும் படம் .
இந்தப் படத்தில் மெயின் கதையில் இடம் பெறாத ஒரு சாமியார் கேரக்டரை எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார் நிவின் பாலி. நம்ம ஹீரோக்கள் அறிய வேண்டிய விஷயம். லால் அசத்தலான நடிப்பு. ஆசிப் அலி தோற்றப் பொருத்தத்தில் ஜொலிக்கிறார்.
ஜீவம்சமாக சில்லறைக் காசு கொடுக்கப்படும் டிராக் சிரிக்க வைக்கிறது என்றால் மல்லிகா சுகுமாரன் தனி ஆளாக சிரிக்க வைக்கிறார்
சந்துரு செல்வராஜின் ஒளிப்பதிவு , அனீஸ் நாடோடியின் கலை இயக்கம், இஷான் சாப்ராவின் இசை எல்லாம் மிக சிறப்பு
அடிப்பொலி படம்.