இயக்குனர் செல்வராகவனின் எழுத்தில் அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி இருக்கும் படம் ‘மாலை நேரத்து மயக்கம்’
இந்த மயக்கம் மயங்கச் செய்கிறதா ? இல்லை மயங்கி விழ வைக்கிறதா? பார்க்கலாம் .
சின்ன வயசில் ஒரு பாய் ஃபிரண்ட் , அப்புறம் இரண்டு பாய் ஃபிரண்ட்கள் , பிறகு ஒரு காதல்; அதில் தோல்வி…..
– என்ற நிலையில் இருக்கும் ஒரு பெண் (வாமிகா ) , கேன்சரோடு (மிக அழகாகப் ) போராடும் அம்மாவின் (கல்யாணி நடராஜன்) ஆசைக்காக , திருமணத்துக்கு ஒத்துக் கொள்கிறாள்.
மாப்பிள்ளையாக வருபவன் (கோலா பாலகிருஷ்ணா) அதுவரை ஒரு கேர்ள் ஃபிரண்ட் கூட இல்லாத, பெண்ணுலகம் அறியாத — அப்பாவால் வளர்க்கப்பட்ட — செயல் ஒழுங்கு இல்லாத பையன் . திருமணம் நடந்த அன்று இரவே முதல் இரவுக்காகக் காத்து இருப்பவன் . ஆனால் கைகுலுக்கக் கூட அவனை தொட விரும்பவில்லை அவள். ஆரம்பத்திலேயே ஏக விரிசல் .
இந்த நிலையில் மனைவியின் பாய் ஃபிரண்ட்கள் பற்றி அவனுக்கு தெரிய வரும்போது பாய் ஃபிரண்ட் என்ற வார்த்தைக்கு நீங்கள் என்ன அர்த்தம் எடுத்துக் கொள்கிறீர்களோ அதே அர்த்தத்தை அவனும் எடுத்துக் கொள்கிறான் . அவர்கள் தன் மனைவியை கட்டிப் பிடிப்பதும் முத்தம் என்ற பெயரில் கழுத்து முகர்வதும் அவனை கொந்தளிக்க வைக்கிறது .
மனைவியை சந்தேகப்பட்டு ஒரு பேனாக் கத்திக் கொலை முயற்சி வரை போய் , பிறகு மனைவியின் பாய் ஃபிரண்ட்கள் மூலம் அவள் யாரோடும் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை என்று உணர்ந்து , மிகக் கஷ்டப்பட்டு அவளை இம்ப்ரெஸ் செய்து ஒரு புன்னகையை வரவைக்கும் அளவுக்கு ஜெயிக்கிறான் கணவன் .
அவளை புறக்கணித்து விட்டுப் போன முன்னால் காதலனை மீண்டும் அவள் சந்திக்கிறாள். மீண்டும் இணையும் ஆசையை அவன் தெரிவிக்கிறான் . அவளால் ஏற்கவும் முடியவில்லை . ஆனால் முடியாது என்று சொல்லவும் இல்லை .
இந்த நிலையில் மனைவியை இம்ப்ரெஸ் செய்யும் கணவன் அதன் அடுத்த கட்டமாக நண்பனின் யோசனைப்படி, அவளுக்கு பிடித்த ஒயின் வாங்கிக் கொடுத்து , இருவரும் வீட்டில் சரக்கு அடித்து விட்டு டான்ஸ் ஆட , ஒரு நிலையில் இவன் காமம் தலைக்கேறி அணுக , அவள் மறுக்க , கட்டில் அறையில் முதல் உறவாக மனைவியை பாலியல் வன்முறை செய்து விடுகிறான் .
எரிமலையாகிறாள் அவள். பிரசனை பெரிதாகிக் கொதிக்கிறது . கணவனின் அப்பாவை கடுமையான கெட்டவார்த்தையால் திட்டுகிறாள் . நாயகனின் விருப்பமின்மையையும் மீறி விவாகரத்தாகிறது . அவளது தனிமை , முன்னாள் காதலனின் வலை, இவற்றுக்கு இடையில் கணவன் மனைவியாக வாழ்ந்த அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது ? என்பதே இந்த மாலை நேரத்து மயக்கம் .
சிம்பிள்… மௌனராகம் படத்தின், அதிகாரமான , அதி…. காரமான மசாலா கலந்த நான் வெஜ் வெர்ஷன் இந்தப் படம்
ஓர் இயக்குனராக சிறப்பாக ஜெயித்திருக்கிறார் கீதாஞ்சலி செல்வரகாவன் . படமாக்கல் , நடிக நடிகையர் தேர்வு, அவர்களிடம் சரியான வேலையைப் பொருத்தமாக வாங்குவது , காட்சிகளை ஷார்ப்பாக முடித்து அல்லது நிறுத்தி , அடுத்த காட்சியோடு அழகாக இணைக்கும் பாஸ்ட் கட்டிங் உத்திகள், ஷாட்களின் கால அளவு குறித்த தெளிவு , மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களை பயன்படுத்தும் திறமை , எழுத்தின் உணர்வை திரையில் கடத்துவது எல்லாம் மிக சிறப்பு . வாழ்த்துகள் கீதா .
செல்வராகவனின் திரைக்கதையை விடுங்கள் .அவரது சொந்தக் கதை சோகக் கதை அவரது எல்லா சமூகப் படங்களின் திரைக்கதையிலும் எதிரொலிக்கும் .
ஆனால் இந்தப் படத்தில் வசனங்கள் …. அல்ல அல்ல, உரையாடல்கள் மிக மிக மிக அருமை. சோகம் , கோபம் , நவீனம் , கவிதை உணர்வு, நேரடி நகைச்சுவை , சில நொடிகள் கழித்து, புரிந்து சிரிக்கும் அறிவார்ந்த நகைச்சுவை, கிண்டல் , நக்கல் , அதீதம் எல்லாம் இருக்கிறது அவரது உரையாடல்களில் . படத்தின் best piece வசனம்தான் .
ஹோட்டலில் ரெஸ்டாரண்டில் நாயகனின் எதிரில் வந்து உட்காரும் அறிமுகமில்லாத பெண், அவனிடம் ”ஏதாவது சொல்றா…” என்று கேட்டதும், அவன் ”மை நேம் ஈஸ் பிரபு ” என்று சொல்ல, அவனைக் கேவலமாகப் பார்த்து விட்டு அந்தப் பெண் எழுந்து செல்லும் காட்சி ,(புரியுதா?) திரைக்கதையும் உரையாடலும் எப்படி இணைந்து குழையவேண்டும் என்பதற்கு உதாரணம் .
புருஷனும் பொண்டாட்டியும் வீட்டுக்குள் சேர்ந்து குடித்து விட்டு ஆடுவதாக காட்சி வைத்திருக்கும் இந்தப் படத்திலேயே கிண்டல் செய்யப்படும் அளவுக்கு…… தமிழ்நாட்டை டாஸ்மாக் சீரழிக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்
ஸ்ரீதரின் ஒளிப்பதிவு அழகாக கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருப்பது மட்டுமின்றி , காட்சியின் மூட் மற்றும் நடிகர்களின் முகபாவங்களை சேதாரமில்லாமல் சேர்ப்பதில் அசத்துகிறது .
நாயகனும் நாயகியும் இணைந்து நடனம் ஆடும் பாடலின் இசை அர்த்தமுள்ளது . பின்னணி இசையிலும் அம்ரித் சிறப்பாக பங்காற்றி இருக்கிறார் . ரூகேஷின் படத்தத் தொகுப்பும் சிறப்பு.
நாயகியாக நடித்து இருக்கும் வாமிகா , தமிழ் சினிமாவுக்கு மிக சிறந்த வரவு. ஆள் மட்டுமல்ல நடிப்பும் வெகு அழகு.
கோலா பாலகிருஷ்ணா கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கிறார் . ஆர்வமாக நடிக்கிறார். குரலாலும் உச்சரிப்பாலும் ஏ எம் ரத்தினத்தின் மகன் ரவி கிருஷ்ணாவை நினைவூட்டுகிறார் .
”ஏம்மா .. அவர் உன்கிட்ட செக்ஸ்ல வேற மாதிரி ஏதாவது எதிர்பார்த்தாரா ?” என்பது போன்ற கேள்விகளைக் கூட , ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு மகளிடம் கேட்கும் விதத்தில், கவர்கிறார் கல்யாணி நடராஜன். புற்று நோயாளி என்பதற்காக இவரை மேக்கப்பில் சின்னாபின்னப் படுத்தாமல் இயல்பாக உலவ விடுவது இயக்க நேர்த்தி .
கணவனாகவே இருந்தாலும் மனைவியை அவள் விருப்பம் இல்லாமல் வன்புணர்ச்சி செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்பதை சொல்லும் வகையில் சும்மா தகதகக்கிறார் இயக்குனர் . ஹெய்ல் கீதாஞ்சலி .
ஆனால் பெற்றோரின் விருப்பத்துக்காக ஒருவனை திருமணம் செய்து கொண்டு அவனை நாறடிப்பதும் அவனது குறைகளை அருவருப்புப் பார்வை பார்ப்பதும் என்ன நியாயம் ?
அவளது குணாதிசயமே அதுதான் என்றால் , ஒரு நிலையில் படம் பாதி ஓடிவிட்டதே என்பதற்காக திடீரென்று அவள் மனம் மாறுவது எப்படி? எதனால்? ஏன் ?எதற்கு ?
மவுன ராகம் படத்தின் மிகப் பெரிய அழகே அதில் கார்த்திக் கதாபாத்திரமும் மிக நல்லவன் என்பதுதான். அதனால்தான் அந்தப் படத்தில் ரேவதி கதாபாத்தித்தின் ஒதுங்குதலை ஆணாதிக்க நபர்களும் ஏற்றுக் கொண்டார்கள் .
ஆனால் தவறானவனை நம்பி ஏமாந்து மீண்டும் அவனால் சலனப்பட்டு அவன் கூட பயணப்பட்டு , அப்போதும் நாயகன்தான் கடைசியில் குத்திக் கொண்டு சாக வேண்டும் என்பதில் உள்ள நியாயத்தை பெண்ணாதிக்கவாதிகள் கூட ஏற்கம்மாட்டர்கள் . இதுதான் கிளைமாக்சை பலவீனப் படுத்தி விட்டது .
இருவருக்கும் இன்னும் கொஞ்சம் மன ரீதியாக நல்ல புரிதல் வந்தது என்பதை இன்னும் வலுவாக சொல்லி, ஆனால் அவள் மனதை உணராமல் அவன் அவளை பலாத்காரம் செய்தான் என்ற ரீதியில் திரைக்கதை இருந்தால் அவளுக்கான பாதிப்பும் நியாயமும் இன்னும் சிறப்பாக உணரப்பட்டிருக்கலாம் . அது ஒரு பெரிய குறையாகப் போய்விட்டது.
அந்த பார்ட்டி ஏற்பாடும் கூட நண்பன் சொன்னதாக வலிந்து வரும் காட்சியாக இல்லாமல் இயல்பாக அவர்களுக்குள் நிகழ்வதாக இருந்திருந்தால் அந்த பாலியல் வன்கொடுமை காட்சி இன்னும் பெரிய அதிர்வை ஏற்படுத்தி இருக்கும்.
ஒரு சின்ன விசயத்துக்குள் நுணுக்கி நுணுக்கி திரைக்கதை அமைப்பது நல்ல விசயம்தான். ஆனால் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் ஏரியாவுக்கு வேறு எதோ ஒன்று தேவைப்படுகிறது . படத்தில் அது இல்லை . அது ஒரு பின்னடைவு .
நவீனம், ஃபேஷன் போன்றவற்றின் பெயரில் கணவனும் மனைவியும் வீட்டில் குடித்து விட்டு ஆடுவதையும், முக்கிய உறவுகளை கெட்ட வார்த்தையால் திட்டுவதையும் காட்சியில் வைப்பது வேண்டாத விஷயமாகவே இருக்கிறது. இன்றைய தலைமுறையின் பக்குவமின்மையை கண்டிக்கும் விதமாக இல்லாமல் அவற்றை ரம்மியப்படுத்திக் காட்டுவது ரொம்ப ஆபத்தானது .
காரணம் ?
செல்வராகவனுக்கு சிறு வயதில் அவரது சூழலில் அமைந்த அனுபவ அப்சர்வேஷன் காரணமாக, அவர் படத்தில் வரும் நாயகிகள் எல்லோரும் சென்னையில் வாழ்கிற – மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழ்கிற — வடக்கத்திப் பெண்களின் அக்மார்க் ஜெராக்ஸாகவே இருக்கிறார்கள் .
அந்த ஜெராக்ஸ் காப்பியையே அவர் மீண்டும் மீண்டும் பிரதி எடுப்பதன் மூலம் இங்குள்ள பெண்கள் பலருக்கும், அந்த வாழ்க்கை முறைதான் இயல்பு என்பது போல ஒரு பிரம்மையை ஏற்படுத்துகிறார். அதன் காரணமாக ‘ இதுதான் உண்மையான இயல்போ ? நாம்தான் பேக்காக இருக்கிறோமோ ..’ என்ற உணர்வை இங்குள்ள பெண்களுக்கு ஏற்படுத்தும் விபரீதத்தை செய்கிறார் .
அந்த பிரம்மையை உணமையாக்கும் நிலைக்கு பெண்களை தள்ளுகிறார் . இது ரொம்ப தவறானது . அவர் திறமையான படைப்பாளி என்பதாலேயே ஏற்படும் விபரீதம் இது
எனவே, இனியாவது செல்வராகவன் இந்த விசயத்தில் மாறவேண்டும்.
மலை நேரத்து மயக்கம் … ஆரம்பிக்கும்போது குஷி , ருசி …. அடுத்தநாள் காலை தலைவலி