கிரசன்ட் சினி கிரியேசன்ஸ் சார்பில் சபி தயாரிக்க, இளைய திலகம் பிரபு, வெற்றி, கிருஷ்ண ப்ரியா, மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார் , கோமல்குமார் நடிப்பில் மகா கந்தன் இயக்கி இருக்கும் படம்.
1990களின் ராமநாதபுரம் சீமை .
சிறுவயது முதல் தன் மகன் பட்டமுத்துவையும் (வெற்றி) மகளையும் தாயாகவும் இருந்து வளர்த்து வரும் செல்லையா (இளைய திலகம்பிரபு)
வெளிநாடுகளில் வேலைசெய்யும் ஆட்கள் அந்தப் பணத்தை நேரடியாக அனுப்பினால் அரசுக்கு வட்டி கட்ட வேண்டி வரும் என்பதால் ஹவாலா மூலம் அனுப்ப , அப்படி வரும் பணத்தை , ஒரு பாழடைந்த கட்டிடத்துக்குள் மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்து கொட்டி அவற்றை உரிய ஆட்களிடம் ஒப்படைத்து அதன் மூலமே பெரும்பணம் சம்பாதித்து வரும் தாதா ஒருவன் . (கோமல் குமார்) .
அப்படி பணத்தை நோட்டாக வாங்கி , பணத்துக்கு உரிய ஆளிடம் கொடுத்து வரும் ‘போஸ்ட் மேன்’ போன்ற நபர்களுக்கும் நல்ல பணம் கூலியாகக் கிடைக்கும் . கொஞ்சம் ரிஸ்க் என்றாலும் உழைத்துப் பிழைப்பதை விட சுலபமாக சம்பாதிக்கும் வேலை அது.
மேற்படி தாதாவை வீழ்த்தி விட்டு அந்த இடத்துக்கு வர முயலும் ஓர் நபர் ( ஆர் வி உதயகுமார்)
பணத்தை பிரித்துக் கொடுக்கும் தாதாவின் நம்பிக்கைக்கு உரிய நபர் ஒருவன் (லிவிங்ஸ்டன்)
பட்டமுத்துவுகும் பக்கத்து ஊர்ப் பெண்ணுக்கும் (கிருஷ்ணபிரியா) காதல்
வறுமை காரணமாக ஒரு நிலையில் பட்ட முத்து தாதாவிடம் வேலைக்குப் போக , அவன் நம்பிக்கைக்கும் பாத்திரமாக , ஒருமுறை பட்ட முத்து கொண்டு போகும் பணம் திருடப்படுகிறது. முன் நிபந்தனைப்படி அந்தப் பணத்துக்காக செல்லையாவின் ஒரே சொத்தான வீட்டின் பத்திரம் தாதா வசம் போய்விடுகிறது.
செல்லையாவும் வேலை தேட வேண்டிய சூழல் .
ஒரு நாளும் அப்பாவும் மகனும் பிரிந்து இருந்ததே இல்லை என்ற சூழலில் அப்பாவின் நிலைமை பார்த்து, பட்டமுத்து தன் நண்பன் குமரேசனுடன் குவைத் போய் பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறான் .
இந்த நிலையில்தான் பட்டமுத்துவின் பணம் திருடப்பட்டதன் பின்னால் உள்ள சதி, அவன் மட்டுமின்றி கூலி போஸ்ட்மேன் வேலை செய்பவர்களில் சொந்த வீடு இருப்பவர்களிடம் மட்டும் இப்படி பணம் திருடப்பட்டு இருப்பது தெரிய வர, செல்லையாவும் பட்டமுத்துவும் உண்மையை நெருங்க நடந்தது என்ன என்பதே ஒரு நெகிழ்வான கிளைமாக்சோடு சொல்லி முடிகிறது ராஜபுத்திரன்.
காட்சிக்கான ஷாட்கள், காட்சி நிகழும் நிலவியல் இவற்றில் குழந்தைத்தனமான தவறுகள் இருந்தாலும், அந்த ஆரம்பக் காட்சி கவனிக்க வைக்கிறது .
தொண்ணூறுகளின் ராமநாதபுரம் , மணல் வெளிகள், பனை மரக் காடு, கருவேல மரக் கூட்டங்கள் , சிவப்பான அந்த தேரிக்காட்டு மணல்வெளி யாவும் ரம்மியம் . அழகு .
பிரபு மட்டும் இல்லாவிட்டால் இந்தக் கதைக்கு இந்தப் பேரே வைத்திருக்க முடியாது . தனக்கே உரிய பாணியிலான பண்பட்ட நடிப்பால் மிளிர்கிறார் இளையதிலகம் பிரபு. நிறைய படம் பண்ணுங்க பாஸ் . உங்க இடம் அப்படியே இருக்கு.
குள்ளமாக ஒல்லியாக ஆனால் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்களை கிராமப் புறத்தில் பொந்து, கெடேரி என்று அழைப்பார்கள் . அப்படி ஒரு கெடேரி பாத்திரத்தில் அசத்தி இருக்கிறார் கிருஷ்ணபிரியா . எக்ஸ்பிரஷன் உடல் மொழிகள் யாவும் ஒகே .
ராமநாதபுரம் , ராயபுரம், ரஷ்யா , செவ்வாய் கிரகம் எங்கு போனாலும் வெற்றி ஒரு மாதிரித்தான் நடிப்பார் . ஆனால் இதில் தோற்றப் பொருத்தம் கேரக்டருக்கு உதவுகிறது .
அதீத செயற்கை மற்றும் மசாலா நடிப்பில் நெடி ஏற்றுகிறார் கோமல் குமார் . லிவிங்ஸ்டன் , ஆர் வி உதயகுமார் எல்லாம் ஃபேன்சி டிரஸ் காம்பெட்டிஷன் கணக்காக இருக்கிறார்கள் .
சொல்லப் போனால் கதை ஒன்றும் மோசமில்லை. திரைக்கதை திறமை கொண்ட ஒரு நபரிடம்இது போயிருந்தால், இந்தக் கதைக்கான இன்னும் கொஞ்சம் தரவுகளை சேர்த்து ஒழுங்காக எழுதி பொருத்தமான பிலிம் மேக்கிங் தெரிந்த நபரிடம் இந்தக் கதையைக் கொடுத்து இருந்தால் , ஒரு அட்டகாசமான வெற்றிப் படமாக இது வந்திருக்கும் .
ஆனால் இங்கே ?
ஒன்றுக்கும் பலன் இல்லாத அதி நாடகத்தனமான காட்சிகளை ஊற்றி நிரப்பிக் கொண்டே வருகிறார்கள் . படத்தில் இருக்கும் ஐம்பது சதவீதம் காட்சிகளை வெட்டி தூர எரிந்தால் கூட இந்தக் கதை புரியும் என்ற அளவுக்கு தேவையற்ற காட்சிகள்
புளித்த மாவில் இட்லி சுட்டு அந்த இட்லியைப் புளிக்க வைத்து அதைக் கரைத்து மாவாக்கி மறுபடியும் புளிக்க வைத்து அந்த மாவில் தோசை ஊற்றி அதைப் புளிக்க வைத்து , இப்படி வரிசையாக , அப்பம், ஆப்பம், ஆடை அவியல் , இடியாப்பம் எல்லாம் சுட்டு கடைசியாகக் கரைத்த மாவை புளிக்க வைத்து மோந்து பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புளிப்பான காட்சிகள் வசனங்கள் .
பின்னணி இசை என்றால் என்ன என்றே தெரியாமல் என்னத்தையோ வாசித்துத் தள்ளி இருந்தாலும் (தாதா வரும்போது எல்லாம் எதுக்கு பேய்ப்பட மியூசிக் போடுகிறார் என்றே தெரியல) , பாடல் இசையில் பாராட்டுப் பெறுகிறார் நவ்ஃபல் ராஜா
ராக்கி ராகேஷின் சண்டைக் காட்சிகள் சிறப்பு.
கிரிக்கெட் போட்டிகளில் ஒரு நிலையில் இனிமே இந்தியா எங்க ஜெயிக்கப் போவுது என்று எண்ணி , ‘சரி பிழைப்பைப் பார்க்கலாம்’ என்று ரசிகர்கள் நினைக்கும்போது, திடீர் என்று ஒரு மேட்ச்சில் ஜெயித்து , மறுபடியும் நமக்கு நம்பிக்கையை ஊட்டி மேட்ச் பாக்க வைத்து பைனலில் கேவலமாகத் தோற்பார்களே…. அப்படி,
எல்லாம் முடிஞ்சிருச்சி என்று நினைக்கும் போது அட என்று ஆச்சர்யத்துடன் நெகிழும்படி ஒரு கிளைமாக்ஸ் சொல்கிறார்கள் .
இன்னும் கோவம்தான் வருது .
அந்த கிளைமாக்ஸ் க்கு ஏற்ற பொருத்தமாக ஒரு திரைக்கதையை ஆரம்பம் முதலே எழுதி எடுத்து இருந்தால் கூட இந்த ராஜ புத்திரன் ராஜா ஆகி இருப்பானே .. என்ற கோபம்
இது போன்ற கதைகளை பீரியட் பிலிம் ஆக சொல்லும்போது , அதை இன்றைய நிலையோடு கனெக்ட் செய்ய வேண்டும் . அப்போதுதான் ஒட்டு மொத்த படத்துக்கும் உயிர் கிடைக்கும் . இல்லன்னா படம் முடியும் போது , ” சரி, இப்ப அதுக்கு என்ன?” என்ற கேள்வியே வரும்
மொத்தத்தில் ராஜ புத்திரன்…. சிப்பாய் கூட இல்லை.