ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்க, மோகன்லால் , பிரபு, அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், முகேஷ் ,நெடுமுடி வேனு , அசோக் செல்வன், சித்திக், பாசில் , கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் பிரியதர்ஷன் எழுதி இயக்கி இருக்கும் படம் மரிக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம் . தமிழில் மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்.
மரைக்காயர் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானதே மரிக்கார் என்ற மலையாளச் சொல். குதிரை வணிகத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களுக்கு ராவுத்தர் என்ற பெயர் வந்தது போல மரக்கலம் கட்டி கடல் வணிகத்தில் ஈடுபட இஸ்லாமியர்களுக்கு மரைக்காயர் என்பது பெயர்
தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரையான இன்றைய கேரள மாநிலத்தில் நம்பூதிரிகள் வழிகாட்டுதலில் வந்த ராஜாக்கள் ஒரு பக்கம் . வணிகத்தால் செல்வச் செழிப்போடு வா மரைக்காயர்கள் ஒரு பக்கம் . இரு தரப்பிலும் மதத் துவேஷம் கருதும் ஆட்களும் உண்டு. தேவை மற்றும் நட்பு காரணமாக சேர்ந்து செயல்படுவோரும் உண்டு .
அந்த காலத்தில் போர்த்துக்கீசியர்கள் கடல் வழியே இன்றைய கேரளாவுக்குள் நுழைந்து வியாபாரம் , கொள்ளை , ஆக்கிரமிப்பு ஆகியவற்றை செய்ததும் உண்டு .
அப்படி வந்த போர்த்துகீசியர்களால் தனது தாயார் கதீஜும்மா (சுகாசினி) , அப்பா குட்டி அலி மரைக்காயர் (இயக்குனர் பாசில்) , காதலி ஆயிஷா (கல்யாணி பிரியதர்ஷன்) ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில்,
கடற்கொளையனாக மாறி, கடலில் வரும் வெள்ளைக்காரர்கள் கப்பலை எல்லாம் மட்டும் வீழ்த்தி , தனக்கு என்று ஒரு கூட்டத்தை உருவாக்கி, நல்லவனாக மார்க்கம் ஒழுகும் இஸ்லாமியனாக இருப்பவன் மம்மாலி என்கிற குஞ்ஞாலி மரைக்காயர் ( மோகன்லால்) .
அவனது சித்தப்பா பட்டு மரைக்காயர் (சித்திக்) , உதவியாள நண்பன் தங்குடு ( பிரபு)
மீண்டும் போர்த்துகீசியர்கள் போர் தொடுக்கும் நிலையில் சமூத்ரி ராஜா ( நெடுமுடி வேணு), “மரைக்காயரோடு இணைந்து செயல்படுவோம் மரைக்காயரின் உதவியும் நமக்கு தேவை “என்கிறார்.
அரசின் ராஜகுரு மாங்காட்டு அச்சன் ( ஹரீஷ் பெராடி) மற்றும் அவரது மூத்த மகனும் தளபதியுமான ஆனந்தன் ( அர்ஜுன்) ஆகியோர் அந்த யோசனையை வரவேற்கிறார்கள். ஆனால் ராஜகுருவின் இளைய மகனான கடற்படைத் தளபதி அச்சுதன் ( அசோக் செல்வன்) மற்றும் சிலர் எதிர்க்கின்றனர் .
மரைக்காயரின் நண்பனாக இருந்து அவனைக் கொல்ல முயன்ற ஒருவனை வெட்டி வீழ்த்துகிறான், கடலில் கரை ஒதுங்கிய சீனன் சின்னாளி என்கிற சியாங் சுவான் (ஜேய் ஜே ஜக்ரூட்).
அவனுக்கு மரைக்காயர் உதவி செய்ய அவன் மரைக்காயருக்கு மெய்க் காப்பாளனாக மாறுகிறான் . அதே நேரம் கொல்லப்பட்டவனின் மனைவி சுபைதாவுக்கும் ( மஞ்சு வாரியார்) குஞ்ஞாலி மரைக்காயர் உதவி செய்கிறான் .
அதுமட்டுமின்றி தன் தாய் தந்தை காதலியைக் கொன்ற போர்த்துகீசிய கடல்படைத் தலைவனான அல்போன்சோ டி நோரோன்ஹா வையும் (பால் ஹண்ட்லி தாமஸ்) கொன்று பழி தீர்க்கிறான் குஞ்ஞாலி.
ராஜாவுக்கு மிக வும் வேண்டிய ஆச்சாரமான குடும்பத்துப் பெண் ஒருத்தி ஆர்ச்சா ( கீர்த்தி சுரேஷ்) சியாங் சுவான் மீது காதல் கொள்கிறாள் .
அச்சுதன் ஆசைப்பட்ட பெண் அவள் என்பதால், அவனுக்கு சியாங் சுவான் மீது வரும் கோவம், ஒரு நிலையில் – தன்னிடம் இருந்து பிடுங்கி கடற்படைத் தளபதி பதவி கொடுக்கப்பட்ட- குஞ்ஞாலி மரைக்காயர் மேல் திரும்புகிறது .
ராஜாவுக்கு உடல் நிலை சரிய்ல்லாமல் போக, அவரது மருமகன் ராஜாவாகிறான்.
மதத்துவேசம் கொண்ட அரசு அமைகிறது .அந்த அரசு மரைக்காயரை வீழ்த்த போர்த்துகீசியர்களின் உதவியையே நாட, அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்தப் படம்.
பதினாறாம் நூற்றாண்டில் கேரளாவில் கொல்லம் பகுதியில் இருந்தததாக சொல்லப்படும் குஞ்ஞாலி மரைக்காயர் பற்றிய சில தகவல்களின் அடிப்படையில் புனைவுகளைச் சேர்த்து வந்திருக்கும் படம்.
சிவகங்கை சீமை, வீரபாண்டியக் கட்டபொம்மனில் இருந்து மலையூர் மம்பட்டியான் வரை பல படங்களை நினைவு கூறும் காட்சிகள் , ஷாட்கள் படத்தில் இருக்கின்றன .
ஆனால் மற்ற விஷயங்கள் அருமை
படத்தில் நம்மை முதலில் அசத்துவது சிரில் குருவில்லாவின் பிரம்மிக்க வைக்கும் கலை இயக்கம் . சந்தேகமே பட முடியாத அளவுக்கு நம்மை அந்தக் காலகட்டத்துக்குக் கொண்டு போய் நிறுத்துகிறார் . என்னா ஒரு உழைப்புடா சாமி.
இரண்டாவது அற்புதம் திருநாவுகரசுவின் ஒளிப்பதிவு . பதினாறாம் நூற்றாண்டை நாம் உணரும் அளவுக்கு சிறப்பான ஒளிப்பதிவு .
மூன்றாவது அற்புதம் மோகன்லால் . பாத்திரத்துக்குள் உருகி கரைந்து போயிருக்கிறார். இளவயது குஞ்ஞாலியாக மோகன்லாலில் மகன் பிரணவ் மிக நன்றாக நடித்துள்ளார் .
அனைத்துத் தொழில் நுட்பங்களையும் ஒன்றிணைத்து ஆளுமை செய்து அதோடு தரமான ஃபிரேமிங் வைத்து இயக்கி மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன்
தியாகராஜன் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த காஜூ நேடா இருவரும் சண்டைக் காட்சிகள் பிரம்மிப்பு
கடல் சம்மந்தமான நிஜ மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் வெகு நேர்த்தி . இயக்குனர் பிரியதர்ஷனின் மகனான சித்தார்த் பிரியதர்ஷனின் சிறப்பான பணி அது .
சாபு சிரிலின் தயாரிப்பு வடிவமைப்பும் தரமும் அருமை . ஐயப்பன் நாயரின் படத் தொகுப்பு சிறப்பு .
பிரியதர்ஷனும் அனி ஐ வி சசியும் மலையாளத்தில் எழுதிய வசனங்களுக்குப் பொருத்தமான வசனங்களை முடிந்தவரை உதட்டசைவுக்கு ஒத்திசைவாகவும் சிறப்பாகவும் தமிழில் எழுதி இருக்கிறார் ஆர் பி பாலா.
பாடல்கள் பின்னணி இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
இன்னும் கொஞ்சம் திரைகதையில் கவனம் செலுத்தி இருக்கலாம் பிரியதர்ஷனும் அனியும். அதுவும் படத்தின் முக்கியத் திருப்பமான சியான் சுவான்- ஆனந்தன்- மரைக்காயர் சண்டைக் காட்சிக்கான காரணங்களும் சாட் சடார் திருப்பங்களும் அக்மார்க பக்கா செயற்கை நாடக சினிமாத்தனம் .
எல்லாம் முடிந்த பிறகு “எங்க சொல்ல விட்ட?” என்று கேட்பதற்குப் பதில் வாட்கள் வீசப்பட்டுக் கொண்டிருக்கும்போதே சத்தமா சொல்ல வேண்டியதுதானே பட்டு மரைக்காயரே.
அர்ஜுன் , அசோக் செல்வன் ஆகியோருக்கு அழுத்தமான கேரக்டர்கள் கொடுத்திருக்கிறார்கள் .
ஆனால் பிரபுவை சரியாக பயன்படுத்தவில்லை
படம் உணர்வு ரீதியாக இன்னும் ஆழமாக மனதைத் தொட்டிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை .
ஆனாலும் படம் விழிகளை விரிய வைத்து பிரம்மிக்க வைக்கிறது !