ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிக்க, வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கியுள்ள படம்.
ஒரு கிராமத்து போஸ்ட்மேனுக்கு ( எம் எஸ் பாஸ்கர்) பிறந்த இரட்டைப் பிள்ளைகளில் ஒன்று பெண் ஒன்று ஆண். பெண் பிள்ளை (இவானா) இயல்பாக வளர, ஆண் பிள்ளை ( வெங்கட் செங்குட்டுவன்) உயரக் குறைபாடுள்ள நபராக இருக்கிறார் . அவருக்கு அப்பா போல போஸ்ட் மேன் ஆக ஆசை. ஆனால் பிள்ளை ஊராரின் கிண்டலுக்கு ஆளாக வேண்டி இருக்கும் என்பதால் அப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லை.
அதனால் என்னதான் திறமை , அறிவு இருந்தும் குள்ளன் என்று கிண்டல் செய்யப்படுகிறார் . அக்காவின் அளப்பரிய பாசம் மற்றும் ஆதரவு மட்டுமல்லாது, கல்லூரியில் படிக்கும் – எந்தக் குறைபாடும் இல்லாத – சக மாணவி ஒருத்தி ( ஆராத்யா) காதலிக்கவும் செய்கிறார்
இந்த இடத்தில்தான்…. ஒருவேளை நம்மையும் மீறி, படம் நன்றாக வந்து விடுமோ என்ற பயம் படக் குழுவுக்கு வந்திருக்க வேண்டும் .
திடீரென்று அக்கா கர்ப்பம் ஆன நிலையில் ஊரை விட்டே ஓடிப் போகிறாள் . ( கேரக்டர அசாசினேஷன் என்றால் என்ன என்று இந்தப் பட இயக்குநரிடம்தான் தெரிந்து கொள்ள வேண்டும்) அம்மா, அப்பா தற்கொலை செய்து கொள்கிறார்கள். . காதலி கண்டுகொள்ளவில்லை ( ஏன்? படம் எடுத்தவர்கள் விருப்பம் . வேறு என்ன?)
சில பல செயற்கையான சோகக் காட்சிகளுக்குப் பிறகு , சென்னை வரும் ஹீரோ, போலீசாக இருக்கும் காதலியை சந்திக்கிறார். ( விட்டுப் போனதுக்கு அந்தக் காதலி காரணம் சொல்வாள் பாருங்கள்.. அப்படியே கழுத்தைக் கடித்துக் குதறணும் போல இருக்கு)
அவள் உதவியால் அக்காவை கண்டு பிடிக்கிறார்.( அப்பா அம்மா இறந்தது தெரிந்தும் தம்பியைப் பார்க்க வராததற்கு … கழுத்தைக் கடித்துக் குதற இன்னொரு வாய்ப்பு !)
நகரில் பல பெண்கள் கொலை செய்யப்பட , அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணற, ஒரு போலீஸ் அதிகாரி நாயகனைக் கேவலப்படுத்த, அதையும் மீறி நாயகன் தன் திறமையால் கொலையாளியைக் கண்டு பிடிக்க , அட என்று பாராட்டலாம் என்று பார்த்தால் , மூத்திர வாடை வீசும் முட்டு சந்தில் நிறுத்தி அடிக்கிறார்கள்.
உயரம் குறைந்த அறிவும் திறமையும் கொண்ட சுயமரியாதை உள்ள நபர் … அவரது குடும்ப நிலை, பின்னடைவுகள்…. அவமானங்களை சந்தித்து எப்படி அந்த நபர் முன்னேறுகிறார் என்பது நல்ல கரு . கொஞ்சம் முயன்றாலும் நல்ல திரைக்கதை, தானே வரும் . அட, அபூர்வ சகோதரர்கள் செய்ய முடியாவிட்டாலும் ஒரு அறிவாளி சகோதரர் கதையை பண்ணி இருக்கலாம்.
ஆனால் இவர்கள் சேம் சைடு கோல் அடிக்கவே கிரவுண்டுக்குள் இறங்கியவர்கள் .
இதையும் மீறி படத்தில் பாராட்ட விஷயங்கள் உண்டு .
நிஜமாகவே உயரக் குறைபாடு உள்ள செங்குட்டுவன் சிறப்பாக உற்சாகமாக நடித்துள்ளார். நன்றாக ஆடுகிறார் . வாழ்த்துகள் .
கார்த்திக் ராஜாவின் இசையில் அந்தக் கல்லூரிக் கால காதல் பாடல் தேன் பாட்டில். பின்னணி இசையும் சில இடங்களில் பலே .
பிரேம்களில் கவனம் கவர்கிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளர் பர்வேஸும்.
ஆரம்பத்தில் சில காட்சிகளை வித்தியாசமாக தொடங்கும் விசயத்திலும் ஓவராக கட் ஷாட்டில் போகமால் முடிந்த வரை நடிகர்களை நீண்ட ஒரே ஷாட்டில் பேச வைத்து யதார்த்தப்படுத்தி இருப்பதற்காகவும் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன் பாராட்டு பெறுகிறார்.
