ஏ கே ஃபிலிம் பேக்டரி சார்பில் அருண் குமார் தனசேகரன் தயாரிக்க, சுரேஷ் ரவி, ஆஷா வெங்கடேசன், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கோதண்டம் நடிப்பில் பெருமாள் வரதன் இயக்கி இருக்கும் படம்.
நந்திவர்மன் என்ற பல்லவ அரசனுக்கும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டத் தலைவனுக்கும் ஒரு கோவிலுக்குள் நடந்த சண்டையில் இருவரும் செத்துப் போக, மரகதம் நவரத்தினம் எல்லாம் இருக்கிற அந்த சிவன் கோவிலும் கால வெள்ளத்தில் பூமிக்குள் புதைகிறது.
இப்போதும் அந்தப் பகுதிக்கு பக்கத்து கிராம மக்கள் உட்பட யார் போனாலும் அவர்கள் அமானுஷ்ய சக்திகளால் செத்துப் போய்விடுவதாகக் கூறப்படும் நிலையில், தொல்பொருள் ஆராய்ச்சித் துறை தோண்டி எடுக்க வருகிறது .
நடந்தது என்ன என்பதே படம் .
நந்தி வர்மன் என்ற பல்லவ மன்னனின் பெயரில் எழுதப்படும் கற்பனைக் கதை என்று அவர்களே கூறி விட்டுத்தான் படத்தை ஆரம்பிக்கிறார்கள் . இதற்கு நந்தி வர்மன் எதுக்கு ? இதற்குப் பதில் நந்திவர்மன் வரலாற்றில் இருந்தே ஒரு நல்ல கதை குறைந்த செலவில் செய்து இருக்கலாம் . ஆனால் அதற்கு எல்லாம் படிக்கணும் .
உண்மையில் பல்லவர்கள் தமிழர்களே அல்ல. . நீண்ட நெடிய வரலாறு கொண்ட அந்தப் பகுதி வாழ் தமிழ்க் குடியை தமிழ் நாட்டுக்கு வெளியே இருந்து வந்து ஆண்டவர்கள். அவர்கள் ஆட்சியில் பாலியும் சமஸ்கிருதமுமே ஆட்சி மொழிகள்.
பிராமணர்கள் உழைத்துப் பிழைக்கத் தேவை இல்லை என்ற நிலை உருவானதும் தேவரடியார் முறை தமிழ் மண்ணுக்கு அறிமுகமானதும் அவர்கள் காலத்தில்தான். அங்கு வாழ்ந்த தமிழ்க் குடிகளை அடிமைப்படுத்த பசலைக் கீரை வளர்க்க வரி போட்டது பல்லவ அரசு .
ஷர்மன் என்பது படிப்பு சொல்லித்தரும் ஆரியர்களையும் வர்மன் என்பது காவல் செய்யும் ஆரியர்களையும் குறிக்கும் பெயர் . பல்லவ மன்னர்களின் பெயர்கள் எல்லாம் வர்மன் என்ற பெயரிலேயே முடியும் .
இந்த வர்மன்களுக்கே சத்திரியர் என்ற பெயர் இருந்தது . பின்னாளில் அதை ஆரியர்கள் ஒரு பழம்பெரும் தமிழ்க் குடிகளின் தலையிலும் சுமத்தினார்கள். இதுதான் வரலாறு.
குடவரைக் கோவில்கள் என்ற சிற்பக் கலை நுட்பத்தில் அப்போது அங்கே இருந்த ஏழு முருகன் கோவில்கள், கடல் மட்டம் உயர்ந்ததால் கடலுக்குள் போக, அதில் எஞ்சி இருந்த ஒரு குடைவரைக் கோவிலைப் பார்த்து அதன் பாணியில் வடமொழி மற்றும் மகாபாரதத்தின் பெருமை சொல்லும் அர்ஜுன தபசு போன்ற புதிய கற்கோவிலை எழுப்பி தமிழர்களின் வரலாற்றை மறைத்தவர்கள் . (இதற்கு நந்தி வர்மன் மட்டுமே விதி விலக்கு. )
பல்லவர்களும் தமிழர்களே என்பதும் பின்னால் கட்டுக்கதையாக சொருகப்பட்ட, இப்போதும் அறிவார்ந்த வரலாற்று அறிஞர்கள் ஒத்துக் கொள்ளாத ஒரு பலவீனமான வாதமாகவே இருக்கிறது
தமிழ் நாட்டின் பல கலைச் செல்வங்களை கண்டு கொள்ளாத ஒன்றிய அரசு, அப்போது முதலே மாமல்லபுரத்தை மகாபலிபுரம் ஆக்கி அதற்கு ஒரு புராண கட்டுக் கதையைக் கட்டி, பரப்பி நம்ப வைத்து மகாபலிபுரத்தை மட்டும் பொன் போல பராமரிப்பதும் அதனால்தான்.
ஆனால் இது புரியாமல் அந்தப் பகுதியில் இப்போதும் வாழும் தமிழ்க் குடிகள் தங்களை பல்லவ வம்சம் என்று சொல்லிக் கொள்வதன் மூலம் உணர்வு வழியாக வடக்குக்கு அடிமையாகிக் கொண்டு இருக்கிறார்கள் . எளிய மக்களுக்கு அது புரியாவிட்டாலும் படைப்பாளிகளுக்கு தெளிவு இருக்க வேண்டும் .
அது இல்லாமல் முருகனின் வரலாற்றை அழித்து சமஸ்கிருதத்தையும் வட இந்தியக் கலாசாரத்தையும் தூக்கிப் பிடித்த பல்லவர்கள் ஆட்சியில் ( இன்னும் சில விசயங்கள் எல்லாம் சொன்னால் ஆடிப் போவீர்கள். எனவே வேண்டாம்) தமிழும் ஆன்மீகமும் வளர்ந்ததாக எல்லாம் படத்தில் சொல்வது அபத்தத்தின் உச்சம்
சரி அது போகட்டும்… மற்ற விசயங்களைப் பார்ப்போம் என்றால் …
எப்போதோ ஹாலிவுட் மென்று தின்று துப்பிய லேசர் வாளை, ஏதோ கைப்பிடி மட்டுமே தெரியும் மந்திர வாள் என்று சொல்கிறார்கள் .
படத்தில் எல்லோரும் கொடுத்த வசனத்தை ஒப்பித்து விட்டுப் போகிறார்கள்.
சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் அந்த மண்ணின் மைந்தர்களான பல எளிய கிராமத்து மக்களின் முகங்களும் அவர்களின் மொழியும் மனதைக் கொள்ளை கொள்கின்றன.
தொல்பொருள் ஆராய்ச்சி நடக்கும் இடத்துக்கான கலை இயக்கம் சிறப்பாக இருக்கிறது.