பினாக்கிள் ஃ பிலிம்ஸ் ஸ்டுடியோ சார்பில் கே. அசோக்குமார், பி. ராமன், ஜி.சந்திரசேகரன், எம் பி கார்த்திக் ஆகியோர் தயாரிக்க, அஞ்சன் வேல ராமமூர்த்தி, ஆனந்த் சாமி, அஸ்மிதா, அமுதவாணன் நடிப்பில் பாலாவிடம் உதவியாளராக இருந்த நந்தன் சுப்பராயன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் மயூரன் .
கிராமத்தில் இருந்து சிதம்பரம் நகரத்துக்கு கல்லூரிப் படிப்புக்கு வரும் ஓர் இளைஞனுக்கு அநீதியை தட்டிக் கேட்கும் குணம் உள்ள சேகு ( சேகுவராவின் சுருக்கம்) என்ற சக மாணவன் ( அஞ்சன்) நண்பன் ஆகிறான் . சேகுவுக்கும் ஸ்வேதா (அஸ்மிதா) என்ற பெண்ணுக்கும் காதல் .

கல்லூரி விடுதியில் இருக்கும் வடக்கத்தி மாணவன் ஒருவன் போதைப் பொருள் கடத்துகிறான் . ஜான் என்ற தாதா ( ஆனந்த்சாமி) இதில் தலைமை ஏற்கிறான் . ஒரு நிலையில் இருவருக்கும் பகை வர, ஜானை மீறி தனியாக கடத்தலில் ஈடுபடுகிறான் வடக்கத்தி மாணவன்.
ஜானின் தலைவனும் பண , ஆள் , அதிகார பலம் கொண்டவருமான பெரியவர் ( வேல ராமமூர்த்தி ) ஒரு மாபெரும் தாதா .
பணத் தேவைக்காக கிராமத்து இளைஞன் வடக்கத்தி மாணவனுக்காக போதைப் பொருள் கடத்த ஒத்துக் கொள்ள , ஜானின் ஆட்கள் அவனை துரத்த , அதனால் ஒரு விபரீதம் ஏற்பட,

நண்பனுக்காக சேகுகளம் இறங்க , சேகுவும் ஜானுக்கும் ஏற்படும் மோதல் ஒரு நிலையில் சேகுவை பெரியவரின் நேரடி கோபத்துக்கு ஆளாக்குகிறது .
பிறகு நடந்தது என்ன என்பதே இந்த மயூரன்.
வேல ராமமூர்த்தியை நம்பி எடுக்கப்பட்ட படம் . அதற்கு ஏற்ப உறுமுகிறார் செருமுகிறார் . முறைக்கிறார் . விடைக்கிறார். கிளைமாக்ஸ் நெருக்கத்தில் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறார் .
அஞ்சுவதா அஞ்சாமல் நிற்பதா என்று பதறும் பாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார் அஞ்சன் .

ஆரம்பத்தில் மிக சாதரணமாகவும் போகப் போக ஏற்றுக் கொள்ள வைக்கிற முகமாகவும் இருக்கிறார் ஸ்வேதா . எளிமையான யதார்த்தம் .
நண்பன் விஜயாக வரும் அமுதவாணன் சிரிக்க வைக்க முயல்கிறார் . ஆனந்த சாமி ஒகே . மற்ற சில முகங்களும் நடிப்பைப் பற்றி கவலைப் படாமல் இயல்பாக வளைய வருகின்றன
பரமேஸ்வரின் ஒளிப்பதிவு ஒகே ரகம் .
இரண்டாம் பகுதியில் கொஞ்சம் அக்கறையாக பயணிக்கும் படம் கிளைமாக்ஸ் ஏரியாவில் பரபரப்பை உண்டாக்குகிறது .
இன்னும் சிறப்பான கிளைமாக்சுக்கு முயன்று இருக்கலாம் . இன்னும் கொஞ்சம் லாஜிக் பார்த்து இருக்கலாம் .
மயூரன் … சினிமாத்தன வியூகன்