சின்னத் தம்பி படத்தில் , ஆறு மணிக்கு மேல் பார்வைக் குறைபாடு ஏற்படும் தன் மாலைக் கண் நோயை மறைத்து, அனுஷாவைக் கல்யாணம் செய்து கொண்டு சிரமப்பட்டு, நகைச்சுவை ரகளை செய்வாரே கவுண்டமணி ..?
அதே குறைபாடு கதாநாயகனுக்கு இருந்தால்… ? அதுதான் சிக்சர் . ( உண்மையில் சின்னத் தம்பிக்கும் முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கே ஆர் விஜயா நடித்த தவப்புதல்வன் படமே அந்தக் கதைதான் . அதில் சிவாஜிக்கு மாலைக்கண் நோய் . அதற்கு முன்பு ஓர் ஆங்கிலப் படம் கூட உண்டு )
மாலைக் கண் குறைபாடு உள்ள நாயகன் ( வைபவ்) ஆறு மணிக்குள் கடற்கரையில் ஒரு போராட்ட கும்பலில் சிக்கிக் கொண்டு விட , கண் தெரியாத காரணத்தால் எதற்கும் பயப்படாமல் இருக்க, அதைப் பார்த்து டிவி செய்தியாள நாயகி (பல்லக் லால்வானி) பிரம்மித்து நட்பாக
பகலில் அவளை பார்த்து அழகில் மயங்கும் நாயகன், உண்மையை மறைத்து காதலித்து, காதலிக்க வைக்க , அதற்கு நண்பன் ( சதீஷ் ) உதவ , உண்மை தெரிய வரும்போது அந்த காதல் என்ன ஆனது என்பதை …

அமைதி அமைதி .. பதட்டம் எல்லாம் வேண்டாம் …. நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்கள் .
லாஜிக் மருந்துக்கும் இல்லாத கதை. சில படங்களை மூளையைக் கழட்டி வைத்து விட்டுதான் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள் இல்லையா ? பத்தாது . இந்தப் படத்தை எல்லாம் மூளையைக் கழட்டி முக்கூடல் சங்கமத்தில் வீசி விட்டுத்தான் பார்க்க முடியும்
(கடற்கரையில் மாலைக் கண் உள்ள ஒருவன் என்னதான் ஹெட் போன் போட்டுக் கொண்டு உட்கார்ந்தால் கூட , தனக்கு முன்னும் பின்னும் பக்கவாட்டுகளிலும் அத்தனை பேர் உட்கார்ந்து கோஷம் போடுவதை உணரக் கூடவா முடியாது ?
அதே போல ஹீரோ திடீர் திடீர் என்று கோழையாவார் .அப்புறம் அது போரடித்தால் சூப்பர் ஹீரோவாகி அடியாட்களை பந்தாடுவார் . அப்புறம் தொபுக்கடீர் என்று ஒரு வில்லனை மூளையால் மிரட்டி பணிய வைப்பார். என்ன கருமம் புடிச்ச கேரக்டரைசேஷன்யா அது . )

ஆனால் அதையும் மீறி சிரிக்க வைக்கிறார்கள் . அதுதான் படத்தின் பலம் .
பல பெரிய ஹீரோக்களின் படங்களில் எல்லாம் மொக்கை போட்டு விட்டுப் போன சதீஷ்தானா இது ? ஒன் லைனர்களால் வெடிச் சிரிப்பை கொண்டு வருகிறார் .
ராதா ரவியின் செருமலுக்கு , ” மேல் மாடியில் யாரோ பீரோவ நகத்துறாங்க போல இருக்கு ” என்று சதீஷ் அடிக்கும் கமெண்டுக்கு தியேட்டரே குலுங்குகிறது . ( ”ஆக்சுவலா அவ௫ லேசாதான் சார் டப்பிங் ல செருமி இருந்தாரு. நான் இந்த கமென்ட் பேசறதுக்காக அவர் மாதிரியே எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்கா செருமி அப்புறம் அந்த கமென்ட் போட்டேன் ” என்றார் சதீஷ் , பத்திரிகையாளர் காட்சி முடிந்த பிறகு . லவ்லி . )

வைபவ் மாலைக் கண் நோயாளியின் கேரக்டரில் சிறப்பாக நடித்து இருக்கிறார் . அவர் மூலமும் நகைச்சுவை வருகிறது .
பத்தாததுக்கு ராதா ரவி, இளவரசு ஆகியோரும் கலகலக்க வைக்கிறார்கள் .
அடையாளம் காட்டி ‘அந்த ஸ்வீட் கொடுங்க ‘ என்று லாலா கடையில் கேட்டு வாங்கி ரசித்து ருசிப்போமே…. அப்படி இருக்கிறார் நாயகி பல்லக் லால்வானி. அவரது தோற்றமும் இளமையும் படத்துக்கு பலம் .

போதையில் தெரிந்து கொள்ளும் எந்த விசயத்தையும், தெளிந்ததும் ராதா ரவி மறந்து விடுவார் என்ற சினிமாத்தனமான சுவையான விசயத்தை திரைக்கதையில் பயன்படுத்திய விதம் சிறப்பு .
“உண்மைய சொல்லு நான் உனக்கு எத்தனையாவது லவ்வர்? “.
“நீதான் என் கடைசி லவ்வர் “
— ரம்மியமான வசனம் . சபாஷ் நந்தா மணிவாசகம்
பிரபல ஹீரோக்கள் சில படங்களில் ஏற்ற கெட்டப்புகள் பாட்டுகளை ஆங்காங்கே பயன்படுத்திய விதம் .. திறமைதான் !
பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவும் ஜிப்ரானின் இசையும் சிறப்பு .
படத் தொகுப்பாளர் ஜோமின் கத்தி மேல் நடந்து காப்பாற்றுகிறார்.

படத்திலேயே பெரிய நகைச்சுவை என்ன தெரியுமா ? டிஜிட்டல் வாட்ச் வைத்து 5:59 வரை தெரியும் கண் டக்கென்று சரியாக 6:00 மணி முதல் தெரியாமல் போய்விடும் என்பதுதான் மாலைக் கண் நோய் என்று சொல்லி இருப்பதுதான் . நகைச்சுவைய!
சாப்பாட்டையும் டாய்லெட்டையும் சம்மந்தப்படுத்தும் காட்சிகளை எடுத்து நகைச்சுவை என்ற பெயரில் இன்னுமா நாற்றம் தெளிப்பீர்கள் ?
எனினும் ,
கதையே இல்லாம ஓபி அடிச்சே ஒகே என்று சொல்லும் அளவுக்கு ஒரு படம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் . சினிமா தெரிகிறது அவருக்கு
அடுத்த பந்தை இன்னும் நல்ல கதை திரைக்கதையோடு அடிங்க இயக்குனர் சாச்சி .
மொத்தத்தில் சிக்சர் … பவுண்டரி !