சென்னை உலகப் பட விழாவில் திரையிடப்படும் ‘மழையில் நனைகிறேன்’

ராஜ் ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் பி. ராஜேஷ்குமாரும் அவரது மனைவி ஸ்ரீவித்யா ராஜேஷும் தயாரிக்க, 

அன்சன் பால், ரேபோ மோனிகா ஜான், சங்கர் குரு ராஜா,மாத்யூ வர்கீஸ் , அனுபமா குமார்,  சுஜாதா பஞ்சு , வெற்றிவேல் ராஜா, கிஷோர்குமார் மற்றும் பலர் நடிப்பில்

டி சுரேஷ் குமார் இயக்கி இருக்கும் படம் மழையில் நனைகிறேன் . 

நாயகி ரேபோ மோனிகா ஜான் பிகில் படத்தில் நடித்தவர். 

படத்தில்  கவின் பாண்டியன் என்பவரோடு சேர்ந்து வசனம் எழுதி இருக்கிறார் இயக்குனர் விஜி .

ஏ ஆர் ரகுமான் பள்ளியில் பயின்ற விஷ்ணு பிரசாத் இசை அமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவு கல்யான்,   படத் தொகுப்பு ஜி பி வெங்கடேஷ். 

இளமை துள்ளும் காதல் கதையாக உருவாக்கி இருக்கும் இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் சிறு முன்னோட்டத்தை (டீசர்) பத்திரிக்கையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டினர் தயாரிப்பாளர் ராஜேஷ் குமார், இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் படத் தொகுப்பாளர் வெங்கடேஷ் மூவரும் . 

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்மதம் இருந்தால் வேறு எந்த மதமும் பிரச்னை இல்லை என்ற வசனத்துடன் துவங்கும் அந்த சிறு முன்னோட்டத்தில், 

மழை பெய்யும் பின்னணியில் ஒரு இளம் காதல் ஜோடியின்  காதல், நாயகனுக்கும் அவனது அப்பாவுக்குமான வாக்குவாதம், காதலன் காதலி  சிணுங்கல்கள், ஒரு டிஷ்யூம் டிஷ்யூம் சண்டை  எல்லாம் இருந்தது .

போ என்ற வார்த்தையின் மூலம் வா என்று சொல்கிறாய் என்று ஒரு கவிதைப்பூர்வமான வசனமும் மணத்தது. 

படத்தைப் பற்றிப் பேசிய இயக்குனர் டி சுரேஷ் குமார், ” எஞ்சினியரிங் படித்த ஒரு பிராமணப் பெண்ணுக்கும் படித்து விட்டு வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டு இருக்கும் ஒரு கிறித்தவ இளைஞனுக்கும் ஏற்படும் காதலும் அதன் விளைவுகளுமே இந்தப் படம்.

காதலில் ஒரு  பிரச்னை வரும்போது ஒன்று காதலர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது . அல்லது காதலர்களின் பெற்றோர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது. அது பற்றியும் இந்தப் படம் பேசுகிறது . படத்தில் சண்டைக் காட்சி இருந்தாலும் வில்லன் என்று யாரும் இல்லை. 

படத்தின் ஆரம்பக் காட்சியும் கடைசிக் காட்சியும் மழையில் நடக்கும் .  அதனால்தான் படத்துக்கு இந்தப் பெயர். 

எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும்” என்றார் . 

தயாரிப்பாளர் பி. ராஜேஷ் குமார் , “படத்தின் கதையை இயக்குனர்  சொன்ன விதமும் குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதியும் என்னை மிகவும் கவர்ந்தது . அதனால்தான் இந்தப் படத்தைத் தயாரித்தேன் . சென்னை, புதுச்சேரி, அரக்கு வேலி ஆகிய இடங்களில் படம் பிடித்தோம். இது குடும்பத்தோடுஎல்லோரும் பார்க்க முடிகிற பார்க்க வேண்டிய படம். இது எனது முதல் படம். தொடர்ந்து நல்ல படங்கள் தருவேன் ” என்றார் . 

பல வருடம் முன்பு, நடிக்க ஆசைப்பட்டு சினிமாவுக்கு வந்தவராம் இந்த தயாரிப்பாளர் ராஜேஷ்குமார் . இப்போது தயாரிப்பாளர் ஆகி விட்டார். 
சரி.. தயாரித்த படத்தில் அவர் நடித்துள்ளாரா ?

ஒரு கதாபாத்திரத்துக்கு நடிக்க வேண்டியவர் வராத நிலையில் அந்த கதாபாத்திரத்தில் ராஜேஷ்குமாரே நடித்து இருக்கிறார். 

சரி, புரடியூசர் நடித்த பிறகு புரடியூசரம்மா மட்டும் என்ன லேசா ?

படத்தின் ஆடை வடிவமைப்பை செய்திருப்பதோடு பாடலும் பாடி இருக்கிறார் ஸ்ரீவித்யா ராஜேஷ் . 

சென்னையில் நடைபெறும் உலகப் படவிழாவில் திரையிடப்படத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம் . 

அப்போ படத்தில் என்னவோ இருக்கு !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *