மேதகு திரைக்களம் தயாரிப்பில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனாக கவுரி சங்கர் நடிக்க, நாசர் முக்கிய வேடத்தில் நடிக்க, வினோத் ராஜேந்திரன் ஒளிப்பதிவில் பிரவீன் குமார் இசையில் ஆதித்யா முத்தமிழ் மாறன் படத் தொகுப்பில் இரா . கோ. யோகேந்திரனின் ஆக்கம் மற்றும் இயக்கத்தில் வந்திருக்கும் படம் மேதகு 2.
சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கு சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதையும்,
அவற்றை எப்படி துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி அந்த முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. அதில் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.
குறிப்பாக தமிழினத் துரோகியான துரையப்பாவை பிரபாகரன் சுட்டுக் கொள்ள, போராளிகளை சிங்கள அரசு தேட ஆரம்பிக்க, அவர்கள் காட்டுக்குள் தலைமறைவாவதோடு முதல் பகுதி முடிந்தது.
மேதகு 2 இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியும் தமிழக தலைவர்களின் உதவியும் இந்திரா காந்தி அரசு இலங்கைக்கு செக் வைக்க மட்டும் போராளிகளைப் பயன்படுத்திக் கொண்டதையும் ராஜீவ் காந்தியின் அரசில் பிரபாகரன் டெல்லியில் முறைகேடாக மிரட்டப்பட்டது பற்றியும் அதை வென்று புலிகள் அடுத்த கட்டத்துக்கு நகர்வது பற்றியும் சொல்லப்படுகிறது .
மூன்றாம் பாகம் வரும் என்ற அறிவிப்போடு இந்த மேதகு 2 முடிகிறது .
முதல் பாகத்தில் இருந்த படமாக்கல் தரம் இதில் இல்லை. பிரபாகரனாக நடித்தவரே தோற்றப் பொருத்தம் இருந்தாலும் நடிக்கத் தெரியாமல் முழிக்கிறார். எல்லாரும் வசனம் பேசி விட்டுப் போகிறார்கள் .
இந்தப் படத்தின் தன்மைக்கு வில்லுப்பாட்டு பொருந்தவில்லை. அதற்குப் பதிலாக வாள் கொண்டு ஆடும் தெருக் கூத்துப் பின்னணி பொருத்தமாக இருந்திருக்கும்
எனினும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக சிங்கள ராணுவம் தமிழர்களை உயிரோடு எரித்தது, பாலியல் வன்கொடுமைகள் செய்தது, கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து குழந்தைகளின் கருவை எடுத்துக் கொன்றது போன்ற கொடுமைகள் ரத்தம் கொதிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
புலவர் கலியபெருமாள் , பாவலரேறு பெருஞ்சித்திரனார் , பழ . நெடுமாறன் , புதுக்கோட்டை பாவண்ணன், வைகோ ஆகியோர் புலிகள் இயக்கத்துக்கு அளித்த ஆதரவும் எம் ஜி ஆர் கோடிகளை அள்ளிக் கொடுத்த விதமும் சொல்லப்படுகிறது .
ஈழப் போராட்ட விசயத்தில் கருணாநிதி செய்த சந்தர்ப்பவாத அரசியலின் முதல் துளி உணர்த்தப்படுகிறது.
இந்தப் படத்தில் தனது பங்களிப்பைக் கொடுத்திருக்கும் நாசர் பாராட்டப்பட வேண்டியவர்.
மேதகு 2 பார்க்க வேண்டிய படம்
