மெஹந்தி சர்க்கஸ் @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருபாதி,வேல ராம மூர்த்தி, ஆர் ஜே விக்னேஷ், மாரிமுத்து நடிப்பில், ராஜூ முருகனின் கதை வசனத்துக்கு  அவரது சகோதரர் சரவண ராஜேந்திரன் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ் . படம் எப்படி ? பேசலாம் . 

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தைச்  சேர்ந்த ஜாதி ஆணவம்  கொண்ட நபரான ராஜாங்கத்தின் ( மாரிமுத்து) மகனும் , ராஜ கீதம் மியூசிகல்ஸ் நடத்திக் கொண்டு காதல் பாடல்களை கேசட்டில் பதிவு செய்து கொடுத்து அதன் மூலம் பல சாதி மறுப்புக் காதல் திருமணங்கள் நடக்க காரணமாக இருப்பவனுமான ஜீவாவுக்கு ( மாதம்பட்டி ரங்கராஜ்)

 அந்த ஊருக்கு  சர்க்கஸ் நடத்த வரும் வடநாட்டுக் குடும்பம் ஒன்றின் பெண் மகளும் , சர்க்கஸில் முக்கிய அங்கம் வகிப்பவளுமான மெஹந்தி ( ஸ்வேதா திருபாதி) மீது காதல் வருகிறது . 
இளையராஜாவின் தமிழ்ப் பாடல்களும் பழைய இந்திப் பாடல்களும் அவளையும் காதலை ஏற்க வைக்கிறது .

 சர்க்கஸில் மெஹந்தி ஒரு மரப்பலகையின் முன்னால் நிற்க, அவளைச் சுற்றி கத்தி வீசி (சற்று கத்தி குறி தப்பினாலும் உயிராபத்து) பார்ப்பவர்களை விதிர் விதிர்க்க வைக்கும் சாகசம் முக்கியமான ஒன்று . அப்படி கத்தி வீசும் நபர் ஜாதவ் (அங்கூர் விகாஸ் ).

ஜீவா – மெஹந்தியின்  காதல்,  மெஹந்தியின் அப்பாவான  சர்க்கஸ் உரிமையாளருக்கு (சன்னி சார்லஸ் )பிடிக்கவில்லை . ஆனால் ஜீவா உறுதியாக இருக்கிறான் . பிழைக்க வந்த இடத்தில் பகைத்துக் கொள்ள முடியாத அந்த அப்பா , ”மெஹந்தியை நிற்க வைத்து அவள் மீது படாமல் எல்லா கத்திகளையும் வீசிவிட்டால் என் மகளை உனக்கு தருகிறேன் ” என்கிறார் . 

அது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்க, காதலுக்கு உதவும் பாதிரியார் ஒருவர் ( வேல. ராம மூர்த்தி) உதவியுடன் காதலர்கள் தப்பிக்க , துரோகம் ஒன்று காதலர்களை காட்டிக் கொடுக்கிறது . 
காதல் பிரிக்கப்படுகிறது . காதலி தெரியா தூரம் போய் விடுகிறாள் . காதலனின் தேடும் முயற்சியிலும் ஒரு வஞ்சகப் பொய்மை முட்டுக்கட்டை போடுகிறது . 

இப்படிதான் ..

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு , கொடைக்கானலில் மதுவும் பாடல்களுமாய் கத்தி வீசிப் பழகிக் கொண்டு வாழ்ந்து வரும் காதலனை தேடி, மகாராஷ்டிராவில் உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கும் காதலியின் மகள் வர , அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த மெஹந்தி சர்க்கஸ்.

மேற்படி கடைசி வாக்கியத்தை ஆரம்பக் காட்சிகளாக்கி பின்னணியில் கதை சொல்கிறார்கள். 

சிவாஜி, சரோஜா தேவி , தேவிகா நடித்த குலமகள் ராதை படம் சர்க்கஸ் பின்னணியில் ஒரு காதலை சொன்ன படம் . அது கூட இரண்டாவது கதாநாயகிதான்  சர்க்கஸ் குழுவை சேர்ந்தவள் ( ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்.. பகலுக்கு ஒன்றே’ ஒன்று பாடல் கேட்டு இருக்கிறீர்களா?)

 ஆனால் இந்த மெஹந்தி சர்க்கஸில் அதில் இருந்து வேறு பட்டு எளிய சர்க்கஸ் , இயல்பான வட  நாட்டுப் பெண் , அவளது ரசனை என்று அழகியல் மிக்க ஒரு ரசனையான கதையை எழுதி இருக்கிறார் ராஜு முருகன் . 

அதற்கு ஏற்ற மனதை ஈர்க்கிற நெகிழ்த்துகிற திரைக்கதையை அமைத்து ஒரு கவிதை போல படத்தை இயக்கி இருக்கிறார் சரவண ராஜேந்திரன் . படம் முழுக்க ஓர் இனிய அமைதியை உணர வைக்கிறார் இயக்குனர் .  தொண்ணூறுகள் கால கட்டத்தை இழந்து விட்டோமே என்று இருந்தவர்களையும் , அப்போது இல்லாமல் போய் விட்டோமே என்று பின்னால் பிறந்தவர்களையும் உணர வைக்கிறார் . 
லொக்கேஷன் தேர்வுகள் மிக சிறப்பு .வறண்ட – வடக்குக் கிராமம் ஒன்றின் அழகான பெண் , பசுமையான பூம்பாரை கிராமத்தின் நாயகன் என்ற வித்தியாசமே ஓர் ஈர்ப்பு . 

அபாரமான நடிக நடிகையர் தேர்வை செய்து இருக்கிறார் இயக்குனர் 
பின்புலங்களை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார். மரத்துப் போன நாவின் சுவை அரும்புகளை தூண்டி விடுகிற சிகிச்சை போல , மசலாத்தனங்களில் இருந்து வேறு பட்டு மனசின் ரசனையின் நுண்ணிய உணர்வுகளை உயிர்க்க வைக்கிற படம் . வாழ்த்துகள் சரவண ராஜேந்திரன் .

ஜாதி வெறி, எந்த மொழி மற்றும் இனமாக இருந்தாலும் பெண்கள் மீள முடியாத அடிமைத்தனம் , இன பேதங்களையும்  கடந்து வர்க்க பேதங்களின் வலி, சர்க்கஸ் போன்ற கலைகளில் இருக்கும் பெண்கள் எப்படி எல்லாம் சமூகத்தால் பார்க்கப்பட்டு , நடத்தப்பட்டு ஏய்க்கப் படுகிறார்கள் என்ற பதிவு , பெரியாரியம் , அம்பேத்காரியம் ஆகியாவற்றை  உள்ளடக்கி பயணிக்கிறது படம் . 

காதலுக்கு உதவும் பாதிரியார் காட்சிகளின் எளிமை ஈர்க்கிறது 
மதுபான பார் காட்சியில் நடத்தி இருக்கும் பாடல் ஆராய்ச்சி, அரசியல் நக்கல் முதல், படம் முழுக்க குறும்பும் கனமும் காட்டுகின்றன ராஜு முருகனின் வசனங்கள் .

 “நாம சேர முடியாதுன்னு சொல்லத்தான் இவ்வளவு மேக்கப் போட்டுகிட்டு வந்தியா ?” 

“நம்ம ஊருல இவ்வளவு சாதி மாறிக் கல்யாணம் நடக்குதுன்னா அதுல அக்கியூஸ்ட் நம்பர் 1 இளையராஜா, அக்கியூஸ்ட் நம்பர் 2 ஜீவா “
“தாலி கட்டறதால ஒருத்தன் புருஷன் ஆகிட முடியாது . மனசுல இருக்கறவன்தான் புருஷன் “

-போன்ற வசனங்கள் படத்தின் சுவாசம் .

 இளையராஜா பாடலை ஒரு காட்சியில் பயன்படுத்தி விட்டால் அடுத்த காட்சிக்கு பின்னணி இசை அமைப்பது என்பது எல்லா இசை அமைப்பாளருக்குமே அக்கினிப் பரிட்சை . அதில் பொசுங்கிய நபர்கள்தான் எத்தனை பேர் .  முதல் முதலாக அப்படிப் பொசுங்காமல் பத்திரமாக வெளியே வருகிறார் சான் ரோல்டன் . படம் முழுக்கவே சிறப்பான பின்னணி இசை . பாடல்களும் இனிமை . வெள்ளாட்டுக் கண்ணழகி போன்ற வரிகளில் சபாஷ் வாங்குகிறார் யுகபாரதி .

படத்தின் இன்னொரு மேஜிக் செல்வகுமாரின் ஒளிப்பதிவு . கொடைக்கானலின் பசுமை , கதாநாயகி கிராமத்தின் வறட்சி என்று காட்சிப் பதிவுகள் வழியே கதை சொல்வதற்கு அதை  ரசிகன் உணர்வதற்கும் ஒளிப்பதிவு பெரிய உதவி செய்கிறது . சிறப்பு . 
சதீஸ் குமாரின் கலை இயக்கமும் சிறப்பு.

முதல் படத்திலேயே ஒரு அழுத்தமான காதல் கதையில்  சிறப்பாக நடித்துள்ளார் நாயகன் ரங்கராஜ், கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பு , உற்சாகமாக பணியாற்றி இருக்கிறார் . ஆர்வம் தெரிகிறது . வாழ்த்துகள் . 

பெரிய கண்கள், குணாதிசயச் செறிவுள்ள முகம் ,என்று கவனிக்க வைக்கிறார் ஸ்வேதா திருபாதி . நுண்ணிய முகபாவனைகளில் அசத்துகிறார்.

 சன்னி சார்ல்ஸ் ,  அங்கூர் விகாஸ் இருவரும் மிக சிறப்பாக நடித்துள்ளார்கள் .அசத்தல் நிஷாவாக வரும் பூஜா கம்மியான காட்சிகள் என்றாலும் தேர்ந்த நடிப்பு . மாரிமுத்து இயல்பு .

 இப்படி ஒரு காதல் கதைக்கு அந்த காதல் வரும் தருணம் ரொம்ப முக்கியம் இல்லையா ? அட கதை சொல்லும் தீம் படி அந்த இடத்தில் ஓர் இளையராஜா பாடலாவது இருக்க வேண்டாமா ? இப்படியா மேம்போக்கான காட்சி வைப்பது ?

மெஹந்தியின் அப்பா சொன்னபடி ஜீவாவால் கத்தி வீச முடியவில்லை என்ற நிலையில் அப்படியே அந்த காதல் பிரிந்தது என்றால் ( அது யதார்த்தம் இல்லைதான்)  இந்த கிளைமாக்ஸ் நியாயம் .

 ஆனால் அப்போதே அப்பாவுக்கு தெரியாமல் கிளம்பிப் போய் ரகசிய திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாச்சு . அப்பவே அப்பா போட்ட சவால் நோட்டாவுக்கு கீழே ஓட்டு வாங்கும்  பிஜேபி போல ஆச்சு .

 அப்படி இருக்க இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு எல்லாமும் மாறிய பின் கடைசியில் ‘நான் நிக்கறேன்  நீ கத்தி வீசு . எங்க அப்பா கண் கலங்கட்டும் ‘ என்பது எந்த வகையில் பொருத்தமான கிளைமாக்ஸ் ? ஓட்டு மெஷினில் தில்லு முல்லு பண்ணி ஜெயிக்க முயல்வது மாதிரி தப்பா இருக்கே ? அதிலும் கடைசியில் கண்ணை கட்டிக் கொண்டு வீசுவது மோடி ஜி பேசுவது போல அம்புட்டு  டிராமா .

படத் தொகுப்பும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் . அழுத்தமாக சொல்ல வேண்டிய சில காட்சிகள் டக் டக் என்று போகிறது . சில தேவையின்றி நீள்கின்றன .

 நம்ம ஊரில் நடக்காமல் இல்லைதான் . ஆனால் ஜாதி மத வெறியில் நம்மை விட ஆயிரம் மடங்கு மூர்க்கத்தனம் வட இந்தியாவில் உண்டு . அந்த ஊர் பெண்ணை நம்ம ஊரு ஆட்கள் சாதி வெறியால் அடித்து உதைத்து பிரித்தார்கள் என்று கதை சொல்வது ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒப்ப முடியாமல் வலிக்கிறது .

 இப்படி ஓரிரு குறைகள் இருந்தாலும் , அலுத்துப் போன கதை  புளித்துப் போன களம் சலித்துப் போன விஷயங்கள் என்று உளுத்துப் போன படங்களுக்கு மத்தியில்

மெஹந்தி சர்க்கஸ் ஒரு ரசனை மிகு நல்லனுபவம் .

மெஹந்தி சர்க்கஸ் … கரணம் தப்பாது ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *