பிரபல இந்தித் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான கே சி பொக்காடியா தயாரித்து இயக்க, ஸ்ரீகாந்த், எஷான்யா,, நாசர், பிரம்மானந்தம், ஷாயாஜி ஷிண்டே, ஓ ஏ கே சுந்தர், கராத்தே ராஜா , ரமேஷ் இவர்களுடன் ராக்கி என்ற பயிற்சி பெற்ற நாய் ஆகியோர் நடித்து இருக்கும் படம் ராக்கி .
இந்தப் படம் தமிழ் , தெலுங்கு , இந்தி மொழிகளில் வெளியாகிறது . அதற்கேற்ப படத்தின் சில காட்சிகள் இந்தி, சில காட்சிகள் தெலுங்கு , சில காட்சிகள் தமிழில் எடுக்கப்பட்டு அதற்கேற்ப டப்பிங்கும் செய்யப்பட்டு வந்திருகிறது படம் . இந்த ராக்கி ராகியா ? இல்லை போகியா ? பேசுவோம் .
சந்தோஷ் (ஸ்ரீகாந்த்) ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார். அவரது மனைவியும் (எஷான்யா)ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறாள். ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். கமிஷனர் செல்வம் (நாசர்) கண்ணியமானவர். அவர் சந்தோஷ் மீது மகன் போல பாசம் கொண்டவர்.

எம்.எல்.ஏ. ஒருவரும் ( சாயாஜி ஷிண்டே) ஆயுதக் கடத்தல் நபர் ஒருவரும் (ஓ ஏ கே சுந்தர்) இருவரும் செய்கின்ற சமூக விரோதச் செயல்களுக்காக சந்தோஷ் அவர்களைக் கைது செய்து லாக்கப் பில் அடைக்கிறார்.
இருவரும் சந்தோஷின் உதவியாளர்கள் ராஜா, சேகர் இருவரையும் கைக்குள் போட்டுக் கொள்கின்றனர். லாக்கப்பில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.
சந்தோஷ் கொதிப்படைகிறார். அவர்களைக் கைது செய்ய தேடிப்போகிறார். ராக்கியும் அவருடன் செல்கிறது.
எம்.எல்.ஏ.சாயாஜி, சுந்தர், இன்ஸ்பெக்டர் கள் ராஜா, சேகர் நால்வரும் கூட்டுச்சதி செய்து சந்தோஷைக் கொலை செய்துவிடுகின்றனர்.

இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சேகர் இருவரும் கமிஷனர் செல்வத்திடம், சந்தோஷைக் கொலை செய்தது யாரென்று தெரியவில்லை என்று பொய் சொல்கின்றனர்.ஆனால் நடந்தவற்றுக்கு ராக்கியே சாட்சி
சந்தோஷைக் கொலை செய்த எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர், ராஜா, சேகர் ஆகிய நால்வரையும் ராக்கி எப்படி தண்டித்தது அல்லது அவர்கள் தண்டிக்கப்பட காரணமாக இருந்தது என்பதே இந்த ராக்கி .
தமிழில் எம் ஜி ஆர் , சிவாஜி, கமல் ரஜினி உட்பட எண்பதுகள் வரையிலான எல்லா ஹீரோக்களும் (மற்ற மொழிகளில் மற்ற முக்கிய ஹீரோக்களும் ) தவிர சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவர் மற்றும் ராம நாராயணன் மூலம் நாய்களும் நடித்துவிட்ட கதைதான்

ஆனால் ஒரு இடைவெளிக்கு பிறகு பார்க்கும்போது மலரும் நினைவுகள் போலதான் இருக்கிறது .
ஸ்ரீகாந்த் ஜஸ்ட் லைக் தட் நடிக்கிறார் , எஷான்யா அழகு நடிப்பு இரண்டிலும் ஒகே . நாசர் கம்பீரம் . ஷிண்டே வில்லத்தனம் .
பிரம்மானந்தம் நடித்துள்ள நாய்கள் பயிற்சி பள்ளி அதிகாரி கேரக்டருக்கு எம் எஸ் பாஸ்கர் பின்னணி பேசி இருக்கிறார் . சில இடங்களில் கல கல
ஒரு சில இடங்களில் பி அண்ட் சி ரசிகர்கள் விசிலடிக்கும்படியான சில திருப்பங்களும் உள.
பப்பி லஹரி இசையில் அப்படியே தொண்ணூறுகளின் இந்தி சினிமா வாசனை . மனம் உன்னை தேடுதே பாடல் முணுமுணுக்க வைக்கிறது .
எடுத்துக் கொடுத்ததை வைத்து தொகுத்துக் கொடுத்து இருக்கிறார் லெனின் .

முதல் காட்சியிலேயே கார் பயணிக்கும் வேகத்துக்கும் அடுத்த ஷாட்டில் காரை ஓட்டுவது போல காட்டும் போது இருக்கும் வேகத்துக்கும் மேட்ச் ஆகவில்லை .
ஏகப்பட்ட ஷாட்கள் ரிப்பீட் ஆகி நம்மை அப்பீட் ஆக்குகின்றன .
ஆக்ஷன் கணிடின்யுட்டி ஏராளமாக மிஸ் ஆகிறது
நாயை நன்றாக பயன்படுத்தி இருக்கிறார்கள் . குழந்தைகளைக் கவரலாம் ( நாய்கள் ஜாக்கிரதை படம் நல்லா ஓடின ஊருதானே இது )
