E5 எண்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜெயகிருஷ்ணன் மற்றும் மெட்ரோ புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இருவரும் தயாரிக்க,
அறிமுக நாயகன் சிரிஷ், மாயா, பாபி சிம்ஹா, சென்ராயன் , யோகி பாபு ஆகியோர் நடிக்க ,
ஆள் படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் மெட்ரோ . இது சி எம் டி ஏ வா ? இல்லை புறம்போக்கா ? பார்க்கலாம் .
நேசமிக்க வாழ்க்கை வாழும் ஒரு தம்பதியின் (இயக்குனர் ராஜா — துளசி) மூத்த மகன் அறிவழகன் (சிரிஷ்) , இளையமகன் மதியழகன் (சத்யா) . அறிவழகனின் உயிர நண்பன் குமார் (சென்ட்ராயன்)
ஒரு பத்திரிகையில் வேலை செய்து மாதம் 25000 சம்பளம் வாங்கும் அறிவழகனுக்கு, தம்பி என்றால் உயிர் . தம்பி என்ன கேட்டாலும் செய்யத் துடிப்பவன் அவன் .
கல்லூரியில் படிக்கும் மதியழகனுக்கு ஒரு காதலி . ஆடம்பர மோகம் கொண்ட அவள்,
மதியிடம் ‘விலை உயர்ந்த செல்போன் வேண்டும்’ என்கிறாள் . ‘ஒண்ணே கால் லட்ச ரூபாய் விலை உள்ள பைக் வாங்க வேண்டும்’ என்கிறாள் .
ஆனால் அறிவழகனால் தம்பிக்கு சாதாரண பைக்தான் வாங்கித் தர முடியும் என்ற நிலைமை . ஆனால் அதற்கு சம்மதம் சொல்ல மறுக்கிறாள் மதியின் காதலி .
தவிர, தனது ஆடம்பர ஆசைக்கு மதியால் தீனி போட முடியாத நிலையில் மதியை வெறுக்கவும் செய்கிறாள் .
என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறும் மதி, , தனது கல்லூரி வகுப்புத் தோழனான கணேஷ் (நிஷாந்த் ), அவனுடைய குடும்பப் பின்புலத்துக்கும் அப்பாற்பட்டு,
விலை உயர்ந்த போன், பைக் என்று படாடோபமாக வாழ்வதைப் பார்க்கிறான் .
பைக்கில் சென்றபடி பெண்களில் கழுத்தில் உள்ள நகையை அறுக்கும் நகை பறிப்புத் திருடனான கணேஷ், தன்னைப் போல மாறினால் வசதியாக வாழலாம் . என்று கூற,
மதியும் நகை பறிக்கும் பைக் திருடனாக மாறுகிறான் .
கணேஷ் போன்ற ஏராளமான இளைஞர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து திருட்டு நகையை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்த்துக் கொண்டு ,
நகை பறிக்கும் இளைஞர்களுக்கு கால் வாசிப் பணம் மட்டுமே தருகிற குணா என்ற நபரின் (பாபி சிம்ஹா) கீழ் மதியும் இணைகிறான் .
கையில் லட்ச லட்சமாய் பணம் புழங்குகிறது . காதலிக்கு எல்லாமும் வாங்கித் தர முடிகிறது . ஒரு நிலையில் மதிக்கும் இன்னும் நிறைய பணம் சம்பாதிக்க ஆசை வருகிறது .
எனவே குணாவின் கீழ் இருந்து விடுபட்டு அங்கு இருந்த நண்பர்கள் சிலரையும் சேர்த்துக் கொண்டு , தாங்கள் பறிக்கும் நகைகளை தாங்களே விற்று பெரும் லாபம் பார்க்கின்றான் .
இந்த நிலையில்தான் பலரின் உயிருக்கு ஆபத்து உருவாக்கி , இன்று போலீஸ் தேடும் மர்ம நபர்களில் மதியும் ஒருவன் என்ற உண்மை…… அவனது அம்மாவுக்கு தெரிகிறது .
நடுநடுங்கிப் போகும் அம்மா அவனை கண்டிக்க , ஒரு கொடூர முடிவு எடுக்கிறான் மதி . இதனால் அறிவழகன், அவன் அப்பா எல்லோரும் பாதிக்கப்படுகின்றனர்
நகை பறிப்புத் திருடர்களை ஒரு வழி செய்ய அறிவழகனும் குமாரும் கூட்டணி அமைத்துச் செயல்பட, ஒரு நிலையில் திருட்டுக் கும்பலின் தலைவனே தன் தம்பி மதிதான் என்பது,
அறிவழகனுக்கு தெரிய வர , அப்புறம் என்ன நடந்தது என்பதுதான் இந்த மெட்ரோ .
சிவாஜி நடித்த தங்கப் பதக்கம், சத்யராஜ் நடித்த வால்ட்டர் வெற்றிவேல போன்ற படங்களை நினஈவுபடுத்தும் திரைக்கதை வடிவம் .
ஆனால் சங்கிலி பறிப்பு என்று ஷார்ப்பாக ஒரு விசயத்தை எடுத்துக் கொண்ட வகையிலும் , மேக்கிங்கிலும் மிரட்டுகிறார்கள்.
சென்னை மணலி பகுதியில் ஓர் உயர்ந்த இடத்தில் கேமராவை வைத்து கான்கிரீட் வனமாகத் தோன்றும் சென்னையைக் காட்டி மெட்ரோ என்று டைட்டில் போடும்போதே,
நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன்
கடைசியில் சென்னை பறங்கி மலை பகுதியில் ஓர் உயர்ந்த இடத்தில் கேமராவை வைத்து இன்னொரு கான்கிரீட் காட்டைக் காட்டி,
எண்டு கார்டு போடும் வரை மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் . அழுத்தமான நிதானமான படமாக்கல் .
அப்பா அம்மாவோடு டூ வீலரில் பயணிக்கும் குழநதையின் கழுத்தில் உள்ள செயினை பைக்கில் வந்து இழுத்துப் பறிக்கும் போது,
அந்த குழந்தை காற்றில் பறக்கும் காட்சியை — தொழில் நுட்ப ரீதியாக பாதுகாப்பாக எடுத்து இருந்தாலும் ,
காட்சிப்படுத்தி இருக்கும் விதத்தில் விதிர்விதிர்க்க வைக்கிறார் ஆனந்த் கிருஷ்ணன் .சபாஷ் டைரக்டர் . சபாஷ் !
“பெத்தவங்க புள்ளைகளோட ஆசைகளை நிறைவேத்தலாம் . ஆனா பேராசைகளுக்கு துணை போகக் கூடாது . அப்படி போனா அது புள்ளைங்க பெத்தவங்க எல்லாரையும் அழிச்சுடும் …”
“நகை பறிக்கறது தப்புன்னு சொன்னா பொம்பளைங்க ஏன் காஸ்ட்லி நகை போட்டுட்டு வெளிய வரணும்னு கேட்கறீங்க .
நகை இல்லன்னா பலாத்காரம் பண்ணுவாங்க . பொம்பளைங்க என்னதான் செய்யணும்னு சொல்றீங்க ?”
– உட்பட, பல இடங்களில் வசனமும் கிளாஸ் . அதே போல கடன் வாங்காமல் வாழ்வதன் பெருமை சொல்லும் காட்சி அருமை
உதய குமாரின் ஒளிப்பதிவும் ஜோகனின் பின்னணி இசையும் மூர்த்தியின் கலை இயக்கமும் நம்மை அந்த நகை பறிக்கும் கிரிமினல்களின் இருட்டு — திருட்டு உலகுக்குள் பதைபதைப்போடு வாசம் செய்ய வைக்கிறது . . சூப்பர்
கொண்டை அல்லது சடை போட்ட பெண்ணிடம்தான் திருட வேண்டும் . அப்போதான் நகை மட்டும் கைக்கு வரும் . ஹை ஹீல்ஸ் போட்ட பெண்ணிடம் திருடலாம் . அவங்களால ஓடி வர முடியாது .
வேற எதாவது விசயத்துல கவனமா இருக்கும் பெண்கள்கிட்டதான் நகை அடிக்கணும்
— என்பது போன்ற விவரணைகள் எல்லாம்,
நகை பறிப்புத் திருடர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது போல மேலோட்டமாக தோன்றினாலும் சம்மந்தப்பட்ட பெண்களுக்கு தரும் எச்சரிக்கைதானே ?
ஓரிரு அதி முக்கியமான காட்சிகளில் போதுமான நடிப்பைத் தராமல் நின்று விட்டிருந்தாலும், பொதுவில் அறிவழகன கேரக்டருக்கு நியாயம் செய்கிறார் சிரிஷ் .
நாயகி மாயாவுக்கு வேலை கம்மி என்றாலும் கிடைத்த இடங்களில் அபிநயிக்கிறார் .
தம்பி கதாபாத்திரததில் நன்றாக நடித்துள்ளார் சத்யா . அறிவழகனின் நண்பனாக சென்ட்ராயன் சிறப்பு .
குணாவாக வரும் பாபி சிம்ஹா ஆரம்பத்தில் கெத்து அப்புறம் கோமாளி என்கிற மாதிரியான கேரக்டரில் நடித்துள்ளார் .
இயக்குனர் ராஜா — துளசி ஜோடி யதார்த்தம் .
ஏ எஸ் பி யாக நடித்து இருக்கும் சக்திவேல் ஏனோ எல்லா காட்சிகளிலும் திருடன் போலவே முழித்துக் கொண்டு இருக்கிறார் .
கல்லூரிக் காதலியின் ஆடம்பர மோகம் காரணமாகவே மதி சங்கிலி பறிப்பு செய்யத் துவங்குகிறான் என்பது சரியான விஷயம் .
இன்று யதார்த்தத்தில் பல இளம் சங்கிலி பறிப்புத் திருடர்கள் உருவாக முக்கியக் காரணங்களில் இதுவும் ஒன்று .
அப்படி இருக்க , குற்றவாளியை உருவாக்கிய அந்த பெண் கதாபாத்திரத்துக்கு படத்தில் எந்த ஒரு முடிவும் சொல்லப் படாமல் அப்படியே விட்டு விட்டது பெரிய குறைபாடே .
காதலியின் ஆடம்பர மோகத்தால் சங்கிலி பறிப்புக் கொள்ளைக்காரனான மதியின் அதீத பண மோகம்ஒ ரு நிலையில் அந்த பெண்ணையே பாதித்தது…
பணம் இல்லாததால் காதலியால் வெறுக்கப்பட்ட மதி , காதலியையே நண்பர்களோடு சேர்ந்து சீரழித்து, அதற்கு நிவாரணமாக பணத்தை தூக்கி எறிந்து விட்டுப் போனான்….
என்று ஒரு முடிவு கொடுத்து இருந்தால் , அது போன்ற பெண்களுக்கு பாடமாகவும் இருக்கும்
அதே போல நிஜத்தில் சங்கிலி பறிப்பு திருடர்களுக்கும் சில காவல்துறை கருப்பு ஆடுகளுக்கும் உள்ள ‘புரிதலை’ இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும் சொல்லி இருக்கலாம் .
ஆனாலும் என்ன …
இந்தப் படத்தை பெண்கள் ஒரு முறை பார்த்தால் கூட , சாலைகளில் நடக்கும்போது ஜாக்கிரதையாக இருப்பார்கள்
மெட்ரோ …. அவசியமான மிரட்டல் !