ஷமயாலயா கிரியேஷன்ஸ் சார்பில் பொள்ளாச்சி வி .விசு , பொள்ளாச்சி கோல்டு வி.குமார் ஆகியோர் தயாரிக்க,
ஷாந்தனு , சிருஷ்டி டாங்கே, ஸ்கந்தா , ஆகியோர் நடித்துள்ள படம் முப்பரிமாணம் . படம் காட்டும் பரிமாணம் என்ன ? பார்க்கலாம் .
வேற்று சாதிப் பையனை மணந்த தங்கையையும் அவள் கணவனையும் வெட்டிக் கொல்லும் அளவுக்கு சாதி வெறி பிடித்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிக்கும் ,
பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் மகனான சிறுவனுக்கும் பால்ய பருவம் முதலே ஈர்ப்பு .
கொலைக் குற்றத்துக்காக போலீஸ் அதிகாரி நேர்மையாக நடவடிக்கை எடுக்க , இரண்டு குடும்பத்துக்கும் பகையாகிறது . குற்றவாளி ஜெயிலுக்குப் போகும் அதே நேரம் போலீஸ் அதிகாரிக்கும் மாற்றல் வருகிறது.
சிறுவனும் சிறுமியும் வளர்ந்து இளைய பருவம் எய்தும் நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸ் அதிகாரி மீண்டும் சொந்த ஊருக்கு மாற்றலாகிப் போகிறார் .
அவரைப் பார்த்த சிறுமியின் குடும்பம் பகையை தீவிரப்படுத்துகிறது .
ஆனால் பால்ய கால ஈர்ப்பு பருவம் எய்த, இருவரும் ( சாந்தனு — சிருஷ்டி டாங்கே ) காதலிக்கிறார்கள் .
காதலைப் பிரிக்க , பெண்ணின் குடும்பம் அவளை வெளி ஊருக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறது . அங்கும் காதல் தொடர , பிரச்னை பெரிதாகிறது .
ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள காதலன் தீர்மானிக்க , ‘ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டால் எப்படியும் அவளை தேடிப்பிடித்து வெட்டுவார்கள் . எனவே திட்டத்தைக் கை விடு’ என்று, காதலியின் தோழி கூற
காதலனும் ஏற்கிறான் . காதல் ஜோடி பிரிகிறது .
படிக்கப் போன இடத்தில் காதலிக்கு பிரபல நடிகர் ஒருவரின் (ஸ்கந்தா ) நட்பு கிடைக்கிறது
காதலன் போதைக்கு அடிமையாகிறான் . அந்த போதை காரணமாக , இதய நோயாளியான தன் தாயைக் காக்கும் வாய்ப்பை இழக்கிறான் .
காதலியாவது நன்றாக் இருக்கட்டும் என்று காதலன் எண்ணி இருந்த நிலையில் , இதெல்லாமே நாடகம் என்பது தெரிய வருகிறது ?
அது என்ன நாடகம்? நடத்தியது யார் ? அதன் விளைவு என்ன ? காதல் ஜோடி சேர்ந்தார்களா, இல்லையா ? ஆம் எனில் நிகழ்ந்தது என்ன ? இல்லை எனில் இழந்தது என்ன என்பதே இந்தப் படம் .
படம் துவங்கிய முதல் நொடியிலேயே மனம் கவர்கிறார் ஒளிப்பதிவாளர் ராசாமதி , படம் முழுக்க அவரது அழகியல் அரசாங்கம் தொடர்கிறது . வாழ்த்துகள்.
காட்சிகளை மிக அழுத்தமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் அதி ரூபன் . நடிகை நடிகையரிடம் நன்றாக வேலை வாங்கி இருக்கிறார் .
வித்தியாசமான தோற்றம் ,உணர்ந்து நடிக்கும் நடிப்பு, ஆக்ஷன் காட்சிகளில் அசத்தல் என்று படம் முழுக்க உழைப்பைக் கொட்டி இருக்கிறார் சாந்தனு . இதுவரை பார்க்காத வித்தியாசமான சாந்தனு . சபாஷ்
படத்தின் முதல் பாதியில் அழகான சுட்டிப் பெண்ணாக மனம் கவர்கிறார் சிருஷ்டி டாங்கே . அந்தக் காட்சிகளை இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ரசித்து ரசித்துப் படமாக்கி இருக்கிறார்கள் .
இரண்டாவது பாதியில் வேறு பரிமாணத்துக்கு மாறும்போதும் சிருஷ்டி ஒகே .
நடிகராக வரும் ஸ்கந்தா இயல்பாக நடித்துள்ளார் .
நாயகனின் அம்மாவாக வரும் கல்யாணி நடராஜனும் கவனம் கவர்கிறார் .
ஜி வி பிரகாஷின் இசையில் சொக்கிப் போறான்டி , கண்ணோடு கண் பாடல்கள் இனிமை . பின்னணி இசையும் ஒகேதான் .
பல பிரபல நடிக நடிகையர் ஆடிப் பாடும் ”உல்லாசமாய் உற்சாகமாய்… ” பாடல் ரசிக்க வைக்கிறது . இப்படி படத்தில் பல சிறப்பான விஷயங்கள் உண்டு
அதே நேரம் , பார்த்துப் பழகிப் புளித்துப் போன சாதி வெறி காதல் பிரிவு, கல்லூரி படிப்பு , என்று,,,, புதிய விசயங்கள் இல்லாத அடிப்படைக் கதை மைனஸ்.
எதிர்பாராமல் வரும் அந்த இரண்டாம் பகுதிக் கதைத் திருப்பம் ஏற்கும்படியாக இல்லை . சம்மந்தப்பட்ட நபர் அப்படிப்பட்டவர் என்பதற்கான எந்த அடையாளமும்,
முந்தைய கதைப் பகுதியில் இல்லாததால் திரைக்கதை தவறு செய்கிறது .
இதுதான் கதை எனில் அந்த ஆரம்ப கட்ட சிறுவர் சிறுமியர் காட்சிகள் படத்துக்கு தேவை இல்லை . இப்படி படத்தின் அடிப்படைக் கதைக்கு சம்மந்தம் இல்லாத அல்லது தேவை இல்லாத காட்சிகள் !
கடைசியில் வயசுப் பசங்களின் எமோஷனல் சைக்காலஜியை பிடித்து ஒரு உசரத்துக்கு ஏறுவார்கள் என்று நம்பினால் ,
அந்த நம்பிக்கையையும் சுட்டுத் தள்ளி விடுகிறார்கள் .
தயாரிப்பாளர் என்ற வகையில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள் பொள்ளாச்சி வி . விசுவும் , கோல்டு வி.குமாரும் !
இன்னும் சற்று புதுமையான கதையும், சிரத்தை மிக்க திரைக்கதையும் அழுத்தமான காட்சிகளும் பிடிப்பான வசனங்களும் இருந்து இருந்தால் ,
இந்த படத்தில் இருக்கிற சிறப்பான படமாக்கலுக்கு பல பரிமாணங்களைக் காட்டி இருக்கும் , இந்த முப்பரிமாணம்









