மை லார்ட் (MY LORD ) @விமர்சனம்

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்க, சசிகுமார்,  சைத்ரா , ஆஷா ஷரத், குரு.சோமசுந்தரம், ஜெய பிரகாஷ், கோபி நயினார் , வசு மித்ர நடிப்பில் ராஜு முருகன் எழுதி இயக்கி இருக்கும் படம். 

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை வள்ளலார் பெருமான் ஆசிரமம் ஒன்றை , தீப்பெட்டி தொழில் பற்றி எரியும் சிவகாசி பகுதியில் நடத்திய ஒரு  பெரியவரால்,  சிறுவயதில் கை  தூக்கி விடப்பட்ட நபர் முத்துச் சிப்பி(சசி குமார்)

அவர் இறக்கும்போது தனது மகள் சுசீலாவுக்கு (சைத்ரா)  நல்ல வழி  காட்ட வேண்டும்  என்று முத்துவிடம்  கேட்டுக் கொள்ள. சுசீலாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறான் முத்துச் சிப்பி. முத்துச் சிப்பியை அவள் நேசிப்பது தெரிய வர கல்யாணமும்  நடக்கிறது. 

இருவரும்  ரேஷன் கார்டு வாங்கி குடும்பமாக முயல்கிறார்கள். ரேஷன் கார்டுக்கு லஞ்சம் கேட்க , கொடுப்பதற்கு வசதி இல்லை.  

போராடி வாங்கினால் , சுசீலாவுக்கு உடல் நலக்  கோளாறு.   மருத்துவம் பார்க்க காசு இல்லை. 
கடன் வாங்கப் போனால் அதிக வட்டி . 

எனினும் கடன் வாங்க , கடனுக்கு ஏற்பாடு செய்யும் புரோக்கரே மருத்துவமனையும் சொல்கிறான். அங்கே போனால் ஓவர் செலவு. 

‘வட்டியும் முதலும்’ சேர்ந்து எகிற   ” பணம் தர முடியாவிட்டால் உன் கிட்னியை  கொடு” என்கிறான், கடன் கொடுத்தவன் (வசுமித்ர) .

இது எல்லாமே ஒரு நெட் ஒர்க். 

திருப்பூரில் போய் பிழைத்து  பணம் சேர்த்துக் கொண்டு வந்து கடனைக் கட்ட முடிவு செய்து, யாருக்கும் சொல்லாமல் மனைவியோடு போய் விடுகிறான் முத்துச் சிப்பி. 

அவனை கண்டுபிடிக்க முடியாத கந்து வட்டிக்காரன் தீப்பெட்டி பேக்டரியில் நடந்த ஒரு தீ விபத்தில் முத்துச் சிப்பியம்  சுசீலாவும் செத்து விட்டதாக  இறப்புச் சான்றிதழ் தயார் செய்து  நிவாரணத் தொகையை வாங்கி கொள்கிறான் . முத்துச் சிப்பியின்  ரேஷன் கார்டும் எரிக்கப்படுகிறது. 

மீண்டும் ரேஷன் கார்டு கேட்டு கிரியேட்டிவான போராட்டங்களை நடத்துகிறான் முத்து. 
ஆனால் இருவருக்கும் இறப்புச் சான்றிதழ் இருப்பதால் செத்துப் போனவர்களுக்கு ரேஷன் கார்டு தர முடியாது என்கிறது அரசு நிர்வாகம் . உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் (குரு  சோமசுந்தரம்) முத்துவுக்கு  உதவுகிறார் 

இந்தியாவின் ‘டேஷ் துறை அமைச்சரும்  (சென்சாரில் சவுண்ட் கட்  செய்து விட்டதால் என்ன துறை என்று தெரியவில்லை. ) தேசிய அளவில் சக்தி வாய்ந்த அரசியல்வாதியுமான  ஒருவருக்கு (ஆஷா ஷரத்) இரண்டு கிட்னியும் பழுது .  அமைச்சரின் மகனும் மகளுமே அம்மாவுக்கு கிட்னி தர விரும்பவில்லை. 

அரிய வகை ரத்தப் பிரிவு என்பதால் எல்லா கிட்னியும் அவருக்கு சேராது . பீகாரில் உள்ள ஒருவரின் கிட்னி . அப்புறம் முத்துச் சிப்பியின் கிட்னி. .

பீகார்க்காரர் முன்பே  விற்று விட்டதால் ஒரே சான்ஸ் முத்துச் சிப்பிதான். 

மத்திய அமைச்சரின் மகன் பணம் அதிகாரம் அரசியல் இவற்றின் மூலம் முத்துச்சிப்பி வளைக்க, ”எனக்கு ரேஷன் கார்டு வாங்கி கொடுத்தா ல் கிட்னி தருகிறேன்”  என்கிறான் முத்துச் சிப்பி.

நடந்தது என்ன என்பதே படம்.

சொல்லப்பட வேண்டிய கதை, உடல் உறுப்புகளை பணத்தாசை காட்டியோ, மிரட்டியோ தெரியாமலோ கவரும் கொடுமை,  அதன் பின்னால் உள்ள தூண்டில்கள், வலைப் பின்னல்கள் இவற்றை அழகாக சொல்லி  இருக்கிறார் ராஜு முருகன். 

விளிம்பு நிலை மக்களின் வாழ்வின் அவலங்களையும்  அவர்களது கையறு நிலையையும்  காட்சிப்படுத்துவது என்ற நல்ல வழக்கத்தை இதிலும் தொடர்ந்து இருக்கிறார். 

பின்புல உருவாக்கம், லொக்கேஷன் பயன்பாடு  , படமாக்கல் நேர்த்தி எல்லாம் சிறப்பு. 
தன்னை அடித்த கந்து வட்டிக்காரனை ஜெயிலுக்குள் போய் (கைதியாக அல்ல) முத்துச் சிப்பி அடிக்கும் காட்சி பணமும் அதிகாரமும் சேர்ந்தால் என்ன எல்லாம் செய்யலாம் என்பதை சொல்கிறது . 

ஒரு சுயநல அரசியல்வாதிக்கு அந்த சுயநலமே எப்படி திரும்பும் என்ற நோக்கில் வித்தியாசமான சிந்தனை . 

இது எல்லாவற்றையும் விட இந்தப் படத்தில் ராஜு முருகன்   செய்த செய்த ஒரு மாபெரும் விஷயம். படத்தில் வள்ளலார் வழிபாட்டுக்கு கொடுத்த முக்கியத்துவம் .

சாதி மதங்களைக் கடந்த மிகச் சிறந்த ஆன்மிகம் என்றால் அது வள்ளலார் வழிதான். அதற்கு இணை வேறு ஏதும் இல்லை. இதுவரை பெரும்பாலும் புகைப்படங்களுடன் மட்டுமே நின்று போயிருந்த வள்ளலார் வழியை நீண்ட இடைவேளைக்குப் பிறகு  சினிமாவுக்குள் விவரணையாகக் காட்டி இருப்பது அவர் செய்து இருக்கும் சமூகத் தொண்டு.. நன்றிகள் ராஜு முருகனுக்கு. 

இயல்பு  வாழ்வில் பார்க்கிற ஒரு அப்பாவி ஏழை நல்ல மனிதனின் கேரக்டருக்கு உயிர் கொடுத்து இருக்கிறார் சசிகுமார். அலட்டிக் கொள்ளாத ஆழமான நடிப்பு. அவரது குரலும் உடல் மொழிகளும் கேரக்டருக்கு அப்படிப் பொருந்துகிறது . 

சுசீலாவாக சைத்ரா நடிப்பதே தெரியாத அளவுக்கு இயல்பாக வளைய வருகிறார். இது எல்லாம் ஷோபா வகையறா.

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு கதை நிகழும் களத்தின் எளிமையை காயப்படுத்தாமல் தன்னையும் நிரூபித்துக் கொள்கிறது . சான் ரோல்டன் இசையில் பாடல்கள் ஓகே, பின்னணி இசை சிறப்பு

ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை நியாயமாக மறைமுகமாக விமர்சித்து விட்டு அதை  நீதிபதி கேரக்டரின் அடையாளத்தின் மூலம் பேலன்ஸ்  செய்திருப்பது புத்திசாலித்தனம் . 

கிட்னி  மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒரு மாபெரு கோடீஸ்வரப்  பெண்ணின் மனநிலை , சூழல் ஆகியவற்றை  மருத்துவ ரீதியாகவும் சேர்த்து காட்சிப் படுத்தி இருக்கும் விதம் சிறப்பு.  

அவ்வளவு ஆயிரம் கோடி இருந்தும்  ஒரு நாளைக்கு நூறு மில்லி தண்ணீருக்கு மேல் எதுவும் சாப்பிட முடியாத மத்திய அமைச்சர்…..  அவ்வளவு பிரச்னை இருந்து பழைய சோற்றை அள்ளிக் கட்டும் முத்துச்சிப்பி…  என்ற  அந்த விஷுவல்  ஒப்பீடும் அருமை. 

லாஜிக் மீறல்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இது இன்றைக்கு  சொல்லப்பட வேண்டிய கதை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் சொல்லப்பட வேண்டிய திரைக்கதையா –முக்கியமாக கிளைமாக்சா என்பது,  ட்ரில்லியன் டாலர் கேள்வி .  

ஒரு பழைய உதாரணம் பார்ப்போம்.

திருடனாக இருக்கும் நாயகன் ( நவரச நாயகன் கார்த்திக்) ஒரு அப்பாவிப் பெண்ணுக்குஉதவாபி போய்,  அவளது  அவல நிலை அறிந்து காப்பாற்றி அவள் ஆசைப்படி பெரிய பாடகி ஆக்கி,  பணமும் புகழும் பெற வைக்க, அவள் புதிதாக  வந்த யாரோ ஒருவனை திருமணம் கல்யாணம் செய்து கொள்ள,  அவளைக் காதலித்த நாயகன் கார்த்திக் தியாகியாகி  நின்ற படம் நந்தவன தேரு.  

அதே போல திருடனாக இருக்கும் அதே கார்த்திக் அதே போல ஓர் அப்பாவிப் பெண்ணுக்கு உதவப்  போக, ,அதே போல அவல நிலையில்  அவள்   இருக்க, அவளும் அதே போல பாடகியாக ஆசைப்பட, அதே போல கார்த்திக் அவளை கஷ்டப்பட்டு பாடகியாக்க அவளுக்கு பேரும் புகழும் வர, அப்போது வரும் அவளது உறவினர்கள் அவளை தங்கள் வீட்டு மருமகளாக்க முயல ,நாயகனும்  கனத்த மனதோடு ஒதுங்க முயல, நாயகி அதை மறுத்து  நாயகனையே கல்யாணம் செய்து கொண்ட படம் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். 

முதல் வண்டி போன அதே பாதையில் போன இரண்டாவது வண்டியை ஓட்டிக் கொண்டு  வந்தாலும் கடைசியில் வண்டியை சரியான திசையில் திருப்பி அந்தப் படத்தில் வெற்றியூருக்கு போனார் இயக்குனர் விக்ரமன். 

அதுதான்  சொல்லப்பட  வேண்டிய கதை . 

தவறு செய்யும் அரசியல்வாதிகள்  அதற்கான தீர்ப்பில் இருந்து தப்ப முடியாது தப்ப முடியாது என்று சொல்வதுதானே ஊழல் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கையாகவும் மக்களுக்கு ஆறுதலாகவும் இருக்கும்? 

திருடனுக்கு கட்டுச்சோறு கட்டிக் கொடுத்தால் நாளை இன்னும் நாலு வீட்டில் திருடத்தானே செய்வான்?

இதை நியாய படுத்தத்தான் வள்ளலார் வழி படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது வள்ளலார் வழியை துஷ்பிரயோகம் செய்வதாகத்தானே அமையும்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று  சொன்ன அதே வள்ளலார்தான் ஆன்மீகத்தின் பெயரால் பேதம் பார்க்கும் ஆட்களை விலக்கி வைக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.

நாயைத் தூக்கி நாடு வீட்டில் வைத்தால்… ! ,  பாம்புக்கு பால் வார்த்தால்.. ….! இவை எல்லாம் தானே யதார்த்தப் பழமொழிகள்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து …. விடல் தான்.   நாண ‘நன்னயம் செய்து  நலிதல்’ இல்லை. 

கொட்டுவது தேளோட குணம். காப்பாத்துறது நல்லவர்கள்  குணம் என்பது எல்லாம் சரிதான் . காப்பாத்தறதால எந்த தேளும் கொட்டாம விடுமா ? தொடர்ந்து தேள் கிட்ட கொட்டு வாங்கினா நல்லவன் விஷம் தலைக்கு ஏறி செத்துருவானே சார் ?

இந்த நோக்கில் யோசித்தால் இப்போது படத்தில் உள்ளதை விட சிறப்பான எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கிளைமாக்ஸ் ஒன்று இருக்கிறது .

எனினும் விழிப்புணர்ச்ச்சியை ஏற்படுத்தும் கதை , சசிகுமார் சைத்ரா இவர்களின் அட்டகாசமான நடிப்பு ,அரசு இயந்திரம் பற்றிய அசத்தலான விவரணை இவற்றால் கவர்கிறது படம் . 

இல்லை எனில்  JUDGEMENT IS RESERVED என்று MY  LORD சொல்ல  வேண்டிய நிலை வந்திருக்கும்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *