ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சனத் , இமயா, மடோனா செபாஸ்டியன், வாட்ஸ்அப் மணி , டெப்னிட்டா, பிரகதி, ஆகியோர் நடிப்பில் கிஷோர் ராஜ் குமார் எழுதி இயக்கி இருக்கும் படம்.
ராஜஸ்தான் ஜெய்ப்பூருக்கு பாரம்பரிய சுற்றுலாப் பயணம் போயிருக்கும் சாதனா என்ற பெண்ணுக்கு (இமயா), அங்கு இருக்கும் ஒரு தென்னிந்திய உணவகத்தில் பணியாற்றும் சிவா என்ற இளைஞன் மீது காதல் வருகிறது. ஆனால் சிவா எப்போதும் சிடு சிடு என இருப்பதற்கான காரணத்தை ,உணவக உரிமையாளர்களும் சிவாவின் நண்பர்களுமான மணி (வாட்ஸ் அப் மணி) – அங்கிதா (டெப்னிட்டா ) தம்பதி சொல்கிறது.
சிவாவுக்கும் சாகித்யா ( மடோனா செபாஸ்டியன்) என்ற பெண்ணுக்கும் காதல் இருந்திருக்க, ஒரு நிலையில் அந்தக் காதல் தனது முன்னேற்றத்துக்கும் வாழ்க்கையின் நோக்கத்துக்கும் எதிராக இருப்பதாக எண்ணி, ஒதுங்குகிறாள் சாஹித்யா. அவளை சந்திக்க சிவா செல்லும்போது ஒரு சின்ன ஆக்சிடென்ட் .
விபத்தால் ஒன்றும் பாதிப்பு இல்லை என்றாலும் சிவா சாகித்யாவை சந்திக்க, அந்த சந்திப்பில் பிரேக்கப் செய்கிறாள் சாகித்யா. மனம் வெறுத்துப் போன சிவா ஜெய்ப்பூருக்கு வந்து தங்கி விட்டது சாதனாவுக்கு தெரிய வருகிறது.
ஒரு நிலையில் சாதனாவின் காதலை சிவா ஏற்றுக் கொள்ள, அந்த சமயம் பார்த்து சிவாவுக்கு ஒரு ஆக்சிடென்ட் நடந்து மூளையில் அடி படுகிறது. நினைவிழத்தல் குறைபாடு !
அதாவது சாகித்யாவை சந்திக்க, சிவா போனபோது நடந்த , அந்த ஆபத்தில்லாத அந்த ஆக்சிடெண்டுக்குப் பிறகான மொத்த நினைவுகளும் போய் விட்டன.
இப்போது அவனைப் பொறுத்தவரை சாதனா யார் என்றே அவனுக்கு தெரியாது. தவிர, சாகித்யா இன்னும் அவனை காதலிக்கிறாள் என்பது அவன் எண்ணம்.
சிவனை குணப்படுத்த ஒரே வழி… மீண்டும் அவனை சாகித்யாவை சந்திக்க வைப்பதுதான் என்று எண்ணி, ஆறு வருடம் முன்பு பிரேக்கப் செய்த சாஹித்யா இருக்கும் இடத்துக்கு, சிவாவை அழைத்துச் செல்கிறார்கள் மணியும் சாதனாவும் .
நடந்தது என்ன என்பதே படம்.
மிக இயல்பாக நிதானமான துவங்கும் படம் ஜெய்ப்பூரின் அழகை சுற்றி வளைத்துக் காட்டியபடியே, சாதனாவின் இயங்குதலை, மணியின் மீதான காதலை சொல்கிறது .
சிவாவின் முதல் காதலி பிரிவதற்கான காரணம் ரொம்ப நுணுக்கமான ஒன்று.
விபத்தில் நினைவிழக்கும் பழைய காலத்துக் கதை என்றாலும் , நாயகனின் நினைவு, முன்பு நடந்த ஓர் , ஆபத்தில்லாத விபத்துக்கு பிறகு இல்லாமல் போகிறது என்ற கதைப் போக்கு, வித்தியாசமான ஒன்றுதான் .
அறிமுக நாயகி இமயா, அலட்டிக் கொள்ளாமல். இயல்பாக எளிமையாக சிறப்பாக நடித்துள்ளார்.பக்கத்து வீட்டுப் பெண் போல் அவரைப் பார்க்கும்போது ஒரு மன நெருக்கம் வருவது, அவருக்கு பிளஸ் பாயிண்ட்.
நுணுக்கமான உணர்ச்சி பாவனைகளோடு சிறப்பாக நடித்துள்ளார் மடோனா செபாஸ்டியன்.
காதல் தோல்வியில் இறுக்கம், மறதி பிரச்னையில் குழப்பம் என்று ஆழமாக நடிக்கிறார் சனத்.
உற்சாகமான நடிக்கிறேன் என்ற பெயரில் நடித்துக் குவிக்கிறார் பிரகதி
ராஜேஷ் முருகேசனின் இசை ஜஸ்ட் ஓகே.
ஊட்டியின் இயற்கை அழகும் முகேஸ்வரனின் ஒளி ஆளுமை நிறைந்த ஒளிப்பதிவும் ஒன்றை ஒன்று கட்டிப்பிடித்து கானம் பாடி ஹார்ட்டின் விட்டு, காதலிக்கிறன.
ரொம்ப மென்மையான வழக்கமான கதை போக்குள்ள காதல் கதை. இன்றைய நிலையில் இதுதான் படத்துக்கு மைனஸ் பாயிண்ட்.
இதெல்லாம் பத்து வருடம் முன்பு வந்திருக்க வேண்டிய படம். இன்று இதற்கான தியேட்டரிக்கல் ஆடியன்ஸ் இல்லை. அதே நேரம் ஓ டி டி ரசிகர்களை பெரிதாக கவரும் விதத்திலும் இல்லை.
யாரோ எழுதி எல்லோரும் படித்த கதையை தனது வார்த்தைகளால் எழுதி பார்ப்பதால் அது புதுக் கதை ஆகி விடுமா? அப்படித்தான் இந்தப் படமும்.
எனினும் படத்தை பரபரப்பாக்க உள்ளேயே ஒரு விஷயம் இருக்கு.
மீண்டும் சிவாவை பார்க்கும் சாகித்யா அவன் மேல் சற்றே ஈர்க்கப்பட்டு பின்னர் விலகி விடும்போதே படமும் வெற்றியில் இருந்து விலகி விடுகிறது.
மீண்டும் வந்த சிவாவின் இழப்பை உணரும் சாகித்யா, தான் பிரேக்கப் செய்ததை மறந்து, அவனோடு இணைய முடிவு செய்கிறாள். பிரேக்கப் ஆனதையே அறியாத சிவாவுக்கும் அது சந்தோஷமே.
இப்போது சிவாவை உயிருக்கு உயிராக காதலிக்கும் சாதனா என்ன செய்தாள்? நியாயமாக நிறைவேற வேண்டிய அவள் காதலுக்கு என்ன ஆனது? சாஹித்யா சாதனா ..இருவரில் தங்கள் போராட்டத்தில் ஜெயித்தது யார் என்று, படத்தின் இரண்டாம் பகுதியில் திரைக்கதை போயிருந்தால் இந்தப் படம் பட்டையைக் கிளப்பி இருக்கும் .
அதை செய்யத் தவறி இருக்கிறார்கள்.
இப்படியாக, கதை பழசு என்றாலும் கூட, நல்ல திரைக்கதை அமைத்து இருந்தால் இந்த ஹார்ட்டினுக்கு ரசிகர்கள் ஐ லவ் யூ சொல்லி இருப்பார்கள், அது இல்லாததால் இப்போது கதாநாயகிகளுக்கு மட்டுமே சொல்ல முடிகிறது. படத்துக்கு சொல்ல முடியவில்லை
மொத்தத்தில் ஹார்ட்டின்… ஹார்ட் பீட் கம்மி.