சிங் கீதம் (sing geetham) @ விமர்சனம்

94 வயதிலும் திரைப்படம் இயக்கிக் கொண்டு இருக்கும்  பிரம்மிப்பு இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவின் எழுத்து மற்றும் இயக்கத்தில், ஸ்வப்னா சினிமாஸ் சார்பில்  நாக் அஸ்வின் தயாரிக்க, அஹில்யா பம்ரூ , ஷாலினி கொண்டேபுடி, அயான், நிவேதா பெத்துராஜ்,  ராகுல் நாராயணன்,  நடிப்பில்  கவுதமி சல்லகுல்லா, ஷஷாங்க் சிந்தலபூடி & ரத்னா ஸ்ரீகர்,  நந்தகிஷோர் ஆகியோரின் இணை எழுத்தில் வந்திருக்கும் படம் . 

சிங்கீதம் சீனிவாசராவ் என்ற பெயரின் முதன் வார்த்தையான சிங்கீதம் என்பதை சிங் கீதம் என்று பிரித்த விதத்தில் இருந்தே ரகளை தான். 
 
தாத்தாவின் உயில் மூலம் நிலக்கரி சுரங்கம் ஒன்றில்  கிடைத்த  தனது பங்கைப் பெற, செல்கிறான் பிரதாப் (அயான்). அந்த பகுதியில் ஒரே ஒரு மரம்தான் இருக்கிறது. அந்த மரத்தை வெட்ட விடாமல் தடுக்க, கவுரி என்ற பெண் ( அஹில்யா பம்ரூ) அந்த மரத்தின் நடுவிலேயே கூண்டு அமைத்து தங்கி இருக்கிறாள். 
 
அந்தப் பெண்ணின் அப்பா சுரங்கத்தில் வேலை செய்பவர் . அந்த சுரங்கத்தை இப்போது நிர்வாகிக்கும் ரேணு  ( ஷாலினி கொண்டேபுடி) என்றால், அந்த அப்பா உட்பட எல்லோருக்கும் பயம் 
 
சுரங்கம் உண்மையில் யாருடையது என்பதிலும் நிறைய விவகாரங்கள் உண்டு. ஊரில் குபேரன் மலைக் கோவில் ஒன்றும் உண்டு.  அங்கே உள்ள சுரங்கத்தில் தங்கம் இருக்கிறது  என்றும்  ஒரு பேச்சு உண்டு. 
 
ஒரு நிலையில் அந்த மரத்தையும் வெட்டுவதற்கு எல்லோரும் திரள , கவுரி தடுத்தும் முடியாமல் மரம் வெட்டப்படுகிறது. மனம் வெறுத்துப் போன கவுரி , குபேரன் மழைக்கு சென்று  வணங்க, எதிர்பாராத விதமாக குகைக்குள் விழுந்து விடுகிறாள் 
 
மரத்தை வெட்டுவது மற்றும் பணவெறியோடு பேசும் இந்த மக்களுக்கு பேச்சே வராமல் போகட்டும் என்று குகைக்குள் புலம்பும் கவுரி மேலே வருகிறாள். 
 
மறுநாள் ஊரில் யாருக்கும் பேச்சே வரவில்லை. மாறாக எல்லாரும் எது சொன்னாலும் அது அவர்கள் வாயில் இருந்து பாட்டாகவே வருகிறது. 
 
சாப்பிட்டியா? என்ன விஷயம்? அறிவு இருக்கா? இப்படி எது பேசினாலும் அது பாட்டாகவே வருகிறது. 
 
அதுதவிர  ஒரு பழைய சுரங்கத்துக்குள் இருந்து தங்கம் கிடைக்கிறது. எல்லோரிடமும் மனிதாபிமானம் போகிறது. அப்படி தங்கத்தை தொட்டவர்கள் வேறு யாரையாவது தொட்டால் மிடாஸ் டச் போல, தொடப்பட்டவர்கள் எல்லோரும் தங்க சிலையாக மாறுகின்றனர். 
 
ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் … அந்த தாய் குழந்தையைத் தொட்டால் குழந்தை தங்கமாகிறது. ஒரு நிலையில் தங்கமாவதே விபரீதமாக,  என்ன நடந்தது என்பதே படம். 
 
வித்தியாசமான கதை, வித்தியாசமான களம், வித்தியாசமான படம். 
 
பொதுவாக சினிமாவில் இப்போதெல்லாம் பாடல்களே போரடித்து,  பாடல்கள் குறைந்து கொண்டு இருக்கும் சூழலில், ஒரு படம் முழுக்க எல்லோரும்  பேசும் வசனங்களை எல்லாம் பாட்டாகவே பாடிக் கொண்டு இருந்தால்,..? ஆனால் படம் கொஞ்சம் கூட போரடிக்கவில்லை.அப்படி ஒரு கதை போக்கு,  காட்ச்சி அமைப்பு, சிறப்பான  கதை , பிரம்மதமான இயக்கம் .. அதுதான் சிங்கீதம் சீனிவாசராவ்.
 
இதில் சமூக அக்கறை, இயற்கை மீதான அக்கறை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மனித மனங்களின் அழுக்குகளை கழுவும் முயற்சி என்று அற்புதமான படத்தை கொடுத்துள்ளார் சிங்கீதம் சீனிவாசராவ். 
 
இரண்டாவது சாதனையாளர் படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். பொதுவாக பாடல்களுக்கு டியூன் போடுவார்கள், ஆனால் படம் முழுக்கவே டியூன் போட்டிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். இதோடு பின்னணி இசை மிகவும் சிறப்பாக இருக்கிறது. பாட்டாகவே வசனங்கள் போக அவற்றுக்கு இடையில் வரும் பாடல்களும் இனிக்கிறது. சபாஷ் டி எஸ் பி 
 
பொட்டல் காடு லொக்கேஷனை கண்களை விளக்க முடியாத அளவுக்கு சிறப்பாக காட்டி அசத்துகிறார் அங்கூர்.
 
கலை இயக்கம், சி ஜி என்று அட்டகாசம். 
 
துறுதுறுப்பான அழகான நடிப்பால் படத்தை தாங்குகிறார் கவுரியாக நடித்து இருக்கும்  அஹில்யா பம்ரூ.  ஷாலினி கொண்டேபுடியம் மனசை கவ்வி பிடிக்கிறார். பிளாஷ்பேக்கில் கொஞ்ச நேரமே என்றாலும் அசத்துகிறார் நிவேதா பெத்துராஜ்.
 
பிளேஷ்பேக் நல்ல விஷயம்தான். ஆனால் தெளிவு இல்லை. நிவேதா கேரக்டரை இன்னும் தெளிவாக வடிவமைத்து இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். 
 
எனினும் கிளைமாக்ஸ் அதை சொல்லி இருக்கும் நெகிழ்வான விதம் இவை முத்தாய்ப்பாக நின்று படத்தை முடிக்கிறது. 
 
மொத்தத்தில் சிங்  கீதம்.. எல்லோரும் பாடலாம்.  
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *