கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ், இந்துஜா, எல்லி அவ்ரம், பிரபு, யோகி பாபு நடிப்பில் செல்வராகவன் இயக்கி இருக்கும் படம்.
மனைவி (இந்துஜா), ஒரே ஒரு மகள்(ஹயா தவே) என்று – சக நண்பனே ( யோகி பாபு) பொறாமைப் படும்படி நிம்மதியாக வாழும் நாயகனுக்கு (தனுஷ்) , திடீரென்று ஒரு பிரச்னை வருகிறது.
அந்த ஒரே ஒரு மகளை ஒரு வடக்கத்திப் சிறுவனின் ஆவி பிடிக்கிறது . ஆவியிடம் காரணம் கேட்டால் நாயகனிடம் நீ உன் அண்ணனைக் கொன்றால்தான் நான் உன்னை விடுவேன் என்கிறது. நாயகன் சிறுவனாக இருந்தபோது அவனது அண்ணன் அடங்காத பிள்ளையாக இருந்து சிறு வயதிலேயே எங்கோ ஓடிப் போய் விட்டதும் படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லப்படுகிறது.
மகளோடு அண்ணனைத் தேடித் போகும் நாயகனுக்கு நடந்தது என்ன என்பதே இந்த நானே வருவேன் .
புதிய கதை இல்லை என்றாலும் திரைக்கதையில் வளைத்து முறுக்கி நெருக்கி கவர்கிறார் செல்வராகவன் படமாக்கலில் வழக்கம் போல அசத்திக் கவர்கிறார் .
யுவன் சங்கர் ராஜாவின் இசை, அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு இரண்டும் அவருக்கு தக்க பக்க துணை .
பக்குவமான வயது முதிர்ந்த தோற்றம் கொண்ட தம்பி, இளமை துள்ள ரத்த ரகளை செய்யும் அண்ணன் என்று வித்தியாசமான் இரட்டைக் கதாபாத்திரங்களில் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார் தனுஷ்.
நாயகிகள் இந்துஜா, எல்லி அவ்ரம் இருவரும் சிறப்பான பங்களிப்பு .
பிரபுவும் யோகி பாபுவும் இருக்கிறார்கள். பிரபுவின் குரலுக்குப் பொருத்தமான ஒரு கதாபாத்திரம் . யோகிபாபு லைட்டாக சிரிக்க வைக்கிறார்
ஹயா தவே முதற்கொண்டு குழந்தை நட்சத்திரங்கள் அனைவரும் நல்ல தேர்வு சிறந்த நடிப்பு. அதுவும் மனுவாக நடிக்கும் சிறுவன் , வந்திருக்கும் பெண்ணின் உடம்பில் இருப்பது தனது சகோதரனின் ஆவி என்று தெரிந்து கொள்ளும் நொடியில் நடிப்பில் கலங்க அடிக்கிறான்.
பளிங்கினால் ஒரு மாளிகை போன்ற பழைய பாடல்களை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார் செல்வராகவன் .
மகன்களே அப்பாவைப் பார்த்துப் பயப்படும் படியான கதைப்போக்கைத் தவிர்த்து இருக்கலாம் .
நானே வருவேன் … மிரட்டல்