பொன்னியின் செல்வன் 1 @ விமர்சனம்

லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,சரத் குமார், பார்த்திபன்,  திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லக்ஷ்மி, பிரகாஷ் ராஜ், மற்றும் பலப்பலர் நடிப்பில்  மணிரத்னம் இயக்கி இருக்கும் படம் .

எழுத்தாளர் கல்கி எழுதி கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் தமிழ் சரித்திர நாவல்களில் முதலிடத்தில் இருக்கும் பொன்னியின் செல்வன் நாவலின் திரைவடிவத்தின் முதல் பகுதி . 

எனவே முதலில் வரலாறு மற்றும் நாவல் பற்றிக் கொஞ்சம் …. 
 
முற்காலச் சோழர்கள் காலத்தில் இங்கே சைவம்  வைணவம் என்று இல்லை. புத்தமும் சமணமும் அதோடு கடவுள் மறுப்புக் கொள்கையான ஆசீவகமும் இருந்தன . 
 
பல்லவர்கள் காலத்தில் பிராமணியம் அதிகாரத்துக்கு வந்த பிறகே சைவம் வைணவம் எல்லாம்  பலம் பெறுகிறது . வர்ணாசிரம பாகுபாடு  வளர்கிறது. 
 
பல்லவர்கள் வீழ்ச்சி பெறும் நிலையில்  வருணாசிரம தர்மத்தை முழுக்க ஏற்கவும் முடியாமல் அதே நேரம் புறக்கணிக்கவும் முடியாமல் பிற்காலச் சோழர்கள் உருவாகிறார்கள் . காலம் செல்லச் செல்ல ஏற்றுக் கொள்ளும் அளவும் பெருகவும் செய்கிறது . அந்த மரபில் வந்த சுந்தரச் சோழனுக்கு இரண்டு மகன்கள் . மூத்தவன் ஆதித்த கரிகாலன்  இளையவன் அருண்மொழிவர்மன் . 
 
இவர்களில் மூத்தவன் ஆதித்த கரிகாலன்  முற்காலச் சோழர்கள் பாணியில் செயல்பட்டவன். அதாவது பிராமணியத்தை வருணாசிரம தர்மத்தை ஏற்க மறுத்தவன். ஆனால் மாவீரன் . அவன் ஆட்சிக்கு வந்தால் வந்தால் பிராமணியமும் வர்ணாசிர கருத்தியலும்  பாதிக்கப்படும் என்பதால் , அவனை வஞ்சகமாகக் கொன்றனர் அன்றைய பிராமணர்கள். 
 
தந்தையும் மற்றவர்களும் வர்ணாசிரம தர்மத்தில் ஊறியவர்கள் என்ற நிலையில் அதை ஏற்க மறுத்தால் நம்மால் அரசராக முடியாது  என்ற எண்ணத்தில் அருண்மொழி வர்மன் அதை ஏற்கிறான் . ராஜராஜ சோழன் ஆகிறான் . 
 
ஆனால் அடுத்து வந்த ராஜேந்திர சோழன் பெரியப்பன் அளவுக்கு இல்லாவிட்டாலும் வர்ணாசிரம கருத்தியலை எதிர்த்தவன் . ஒரு கட்டுக்குள் நிறுத்தியவன் . 
 
எனவேதான் ராஜ ராஜ சோழனை விட ராஜேந்திர சோழனே மாபெரும் அரசன் என்று பல கல்வெட்டு, பட்டயம் மற்றும் வரலாற்று ஆதாரங்கள் உண்மையை சத்தியம் செய்து சொன்னாலும் இருபதாம் நூற்றாண்டு வரை பெரும்பாலும் பிராமணர்களே அதிகமாக வரலாற்று ஆய்வாளர்களாகவும் வரலாற்று நாவல் ஆசிரியர்களாகவும் இருந்த காரணத்தால், 
 
அவர்கள் ராஜ ராஜ சோழன் பற்றியே அதிகம் எழுதினார்கள் . ராஜேந்திர சோழன் பற்றி எழுத வில்லை . ராஜேந்திர சோழன் இலக்கிய ரீதியாக மக்களிடம் இருந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு புறக்கணிக்கப்பட்டான் . இது விருப்பு வெறுப்பற்ற உண்மை வரலாறு . 
 
 அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலை எழுதுகிறபோது ஆதித்த கரிகாலனுக்கு அன்றைய பிராமணர்கள் செய்த துரோகத்தை கல்கியால் எப்படி எழுத முடியும்? அது நாவலில் வந்தால் எல்லோரும் படித்தால் என்ன ஆகும்? 
 
எனவே தான் நந்தினி என்ற கற்பனைக் கதாபாத்திரத்தைப் படைத்து அவளை ஆதித்த கரிகாலன் காதலித்தான் . ஆனால் அவள் பெரிய பழுவேட்டரையருக்கு மனைவி ஆனாள். அதன் பிறகும் ஆதித்த கரிகாலனால் அவளை மறக்க முடியவில்லை. வீரபாண்டியனை போரில் ஆதித்த கரிகாலன் கொன்றதற்குப் பழி வாங்க , நந்தினி சோழ தேசம் வந்து ,
 
சோழ அரசின் முக்கியத் தூணான பெரிய பழுவேட்டரையரை மணந்து , சதி செய்து ஆதித்த கரிகாலனை கொன்றாள்.  அவன் உலகம் வியக்கும் ஒப்பற்ற வீரன்தான் . ஆனாலும் முரடன் ஆத்திரத்தில் அறிவிழப்பவன்  பெண்ணால்தான்  அவன் வீழ்ந்தான்  என்று எழுதி அவன் புகழுக்கும் விஷம் வைத்தார் கல்கி .  
 
அதற்கு வாகாக ஆதித்த கரிகாலன், ராஜ ராஜ சோழன் என்று இரண்டு வரலாற்று நாயகர்கள் இருந்தும் அவர்களை முதன்மை நாயகனாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதாமல் வானகப்பாடி வல்லவரையன் வந்தியத் தேவன் என்று ஓரிடத்தில் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள நபரை நாயகனாக்கி ,
 
வரலாற்றில் பெயர் உள்ள குந்தவைக்கு அவனை காதலனாக்கி கணவன் ஆக்கி ஆழ்வார்க்கடியான் உட்பட நிறைய கற்பனைக் கதாபாத்திரங்கள் மாயக் கதாபாத்திரங்கள் சேர்த்து வர்ணாசிரமத்துக்கு வலு சேர்க்கும் விதமாக எழுதினார் . 
 
அது அப்பட்டமாகத் தெரியக் கூடாது என்பதற்காக நாவலின் ஆரம்பத்தில் ஒரு சைவ பிராமணரும் வைஷ்ணவ பிராமணரும் ஒருவரை ஒருவர் நக்கல் செய்வது போல எழுதி நடுநிலைமை பிம்பம்  வரவழைத்துக் கொண்டார் 
 
எனினும் ஆதித்த கரிகாலனை நாம் சித்தரிக்கும் விதம் நமக்கு ஒருவேளை எதிராக வரலாம் என்று எண்ணியோ என்னவோ , ”நான் எழுதியது நிஜ வரலாறு அல்ல ..  கற்பனைக்கதைதான் என்று கல்கி சொல்லியும் விட்டார் . ஆனால் அப்படி அவர் சொன்னது எத்தனை பேருக்குத் தெரியும் ?.
 
பொன்னியின் செல்வன் நாவலை  நிஜமான  சோழர் வரலாறாக நவீன தமிழ் சமூகம் படித்துக் களித்தது . காலம் காலமாக தமிழ் இலக்கியங்கள் கல்வெட்டுகள் ஆதாரங்கள்  சொல்லும்  போர்மரபுகளுக்கு மாறான பாணியில் வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் கொன்றான் என்ற கல்கியின் கட்டுக் கதையையும் நம்பித் தொலைத்தது . 
 
இப்போது படத்துக்கு வருவோம் . 
 
பிரம்மிக்க வைக்கிறார் மணிரத்னம்.  ராட்சஷ உழைப்புக்கும் மேலான ஓர் உழைப்பைத் தந்திருக்கிறார் . மிகப் பிரமாதமான செய் நேர்த்தி . மேட்டிமையான படமாக்கல் . அவர் ஓடித் தேடித் பிடித்து இருக்கும் நிஜ லொக்கேஷன்களும் உறுத்தாமல் கணினி வரைகலை கலந்திருக்கும் விதமும் அபாரம் . 
 
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் வரலாற்று நாவல்களை எல்லாம் மொத்தமாக லவட்டிக் கொண்டு போய் ஒரே படத்தில் கொட்டி  கிம்மிக்ஸ் சர்க்கஸ் காட்டிய பாகுபலி ராஜமவுலி போல இல்லாமல் நிஜ சூழலை உணரச்  செய்யும் மாஸ்டர் டச் ஆக இயல்பாகக்  காட்சிகளை அமைத்துள்ளார் மணிரத்னம் . சில காட்சிகளில் நாமும் ஒரு கதாபாத்திரமாக உள்ளே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்படியான அற்புத இயக்கம் . 
 
கொஞ்சம் மரபு ரொம்ப நவீனம் என்று இசையில்  ஜொலிக்கிறார்  ஏ ஆர் ரகுமான் . பாடல் இசை சிறப்பு என்றால் பின்னணி இசை மிக சிறப்பு. 
 
ரவிவர்மனின் ஒளிப்பதிவு, தோட்டாதரணியின் கலை இயக்கம் இவற்றை எல்லாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும் தொழில் நுட்ப ரீதியாக மிகத் தரமான படைப்பு . 
 
இயல்புத் தமிழிலேயே இன்னும் சிறப்பான வசனங்கள் எழுதி இருக்க முடியும் .  ஜெய மோகன் தப்பான தேர்வு . அதே போல ஈ ஆரி எச மாரி என்ற அட்டகாசமான தமிழ் தவிர எந்தப் பாடலிலும் சொல்லிக் கொள்ளும்படியாக வரிகள்  ஒன்றும் இல்லை  இதில் ”எதிரிகளை வாளோடு வேலோடு போராடு போராடு” என்று இலக்கணப் பிழை வேறு . கொடுமை 
 
வந்தியத் தேவனாக கார்த்தி, பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி இருவரும் சிறப்பு. ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம் மனம் நிறைக்கிறார் . நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய் அருமை .  குந்தவையாக அசத்துகிறார் திரிஷா . பெரிய பழுவேட்டரையராக சரத் குமார் , சுந்தரச் சோழனாக பிரகாஷ் ராஜ் , பூங்குழலியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி , ஆழ்வார்க்கடியானாக ஜெயராம் எல்லோரும் சிறப்பான நடிப்பு . 
 
மூவாயிரம் ஆண்டுகளாக  சோழர்களின் அடையாளமாக விளங்கிய புலிக் கொடியை காட்டாமல் ஏதோ கோடு கிழித்து இருப்பதும் கல்கியே சாதாரணமாகக் காட்டிய இலங்கை மன்னன் கயவாகுவை தங்க அரண்மனையில் மிக உயர்ந்த பீடத்தில் உட்கார வைத்துக் காட்டி இருப்பதும் இலங்கை சிங்கள அரசியல் குடும்பங்களை திருப்திப்படுத்தவே என்பது புரிகிறது. 
 
ஐந்து  பாகங்களாக இருக்கும் நாவலை இரண்டு படங்களாக மட்டும் எடுப்பதே பெரிய  வேலை என்ற நிலையில் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்கு இவ்வளவு நேரத்தை வீணடித்து இருக்க  வேண்டுமா? அதுவும் முதல் பாகம் முழுக்கவே மணிமேகலை பாத்திரமே இல்லாத நிலையில்?
 
எனினும் திரையில் செதுக்கிய விதத்தில் ஜொலிக்கிறது மணிரத்னம்  அணி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *