வராஹி சலன சித்ரம் சார்பில் சாய் கொர்ரபட்டி தயாரிக்க,
மோகன்லால் , கௌதமி , ஊர்வசி , நாசர் ஆகியோர் நடிக்க , சந்திர சேகர் எலேட்டி இயக்கத்தில்
தெலுங்கிலும் , தமிழிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வந்திருக்கும் படத்தின் தமிழ் வடிவமே நமது .
எமது என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு இருக்கிறதா படம் .
டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றின் அடுத்த மேனேஜர் பதவிக்கு, தன்னோடு போட்டியிடும் நபரை லேசாகத் ‘தட்டி’ இன்டர் வியூவுக்கு வர விடாமல் செய்ய,
ரவுடி ஒருவரை ஏற்பாடு செய்கிறார் ஒருவர் (மோகன்லால்) .அதற்கு கூலியாக ஐயாயிரம் ரூபாய் தருகிறார் .
அவருக்கு மேனேஜர் வேலையும் கிடைத்து விடுகிறது
அதே நேரம் ரவுடிக்கு இதயத்தில் ஓட்டை என்று டாக்டர் சொல்ல, ஆபரேஷனுக்கு ஒன்றரை லட்சம் பணம் தேவைப்பட , லைட்டாக தட்ட வேண்டிய நபரை வெயிட்டாக தட்டிவைக்கும் அந்த ரவுடி ,
வேலை கிடைத்த நபருக்கு போன் பண்ணி “நீ ஒன்றரை லட்சம் பணம் கொடுத்தால்தான் அவரை உயிரோடு விடுவேன் ” என்கிறான் . பணத்தோடு போனால் ரவுடி இறந்து கிடக்கிறான் .
மன சாட்சி குத்திக் கிழிக்க, பாதிக்கப்பட்டவனை கண்டு பிடிக்க போராடுகிறார் இந்த புது மேனேஜர்
ஒரு மிடில் கிளாஸ் குடும்பத் தலைவி (கவுதமி ) தன்னை சுற்றி நிகழும் பணத்தாட்டத்தைப் பார்த்து மனம் நோகிறாள் .
இந்த நிலையில் அவளுக்கு அயல் நாட்டில் ஒரு வேலை கிடைக்க , குடும்பத்தை பிரிந்து போக அவள் வருந்துகிறாள் .
ஆனால் அவளது கணவன் , மகன் , மகள் எல்லோருமே ”பணம்தான் முக்கியம். நீ போ..” என்று சொல்ல மனம் உடைகிறாள் .
ஒரு கான்வென்ட் மாணவி ஓர் சாலையோர ஏழைக் குடும்பத்துச் சிறுவன் மீது பாசம் வைத்து அவனை, தான் படிக்கும் பள்ளியில் சேர்க்கிறாள்.
அந்த சிறுவன் தொலைந்து போக , அவனை கண்டுபிடிக்க அவள் அலைகிறாள் .
ஒரு கல்லூரி மாணவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் . அவளுக்கும் சம்மதம் போல் தெரிந்த நிலையில் காதலைச் சொல்ல, அவள் அவனை அடித்து அவமானப் படுத்திப் புறக்கணித்துப் போகிறாள் .
இந்த நாலு புள்ளிகளும் ஒன்று சேரும் போது என்ன நிகழ்கிறது என்பதுதான் இந்தப் படம்
— என்றதும் நீங்களாக ஏதாவது கற்பனை செய்து கொண்டு நம்பிக்கை வைத்தால் அதற்கு www.nammatamilcinema.in நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது .
அந்த நான்கு பேரும் யார் என்ற சஸ்பென்ஸ் உடையும் இடத்தை பெரிதாக நம்பி படத்தை எடுத்து இருக்கிறார்கள் . ஆனால் அது ஒரு பக்குவமில்லாத அரை வேக்காட்டுத்தனமான விசயமாகவே இருக்கிறது .
தவிர அந்த சஸ்பென்ஸ் முன்னதாகவே ஒரு நிலையில் தானாகவே புரிந்து விடுகிறது
எதற்கு அந்த சஸ்பென்ஸ் ? அதனால் என்ன பலன் ? அதை ஆரம்பத்தில் சொல்லி இருந்தால் கூட ஒரு எமோஷனலான ஃபேமிலி டிராமா கிடைத்து இருக்குமோ என்று தோன்றுகிறது .
நான்கு கதைகளில் மோகன்லால் கதை மட்டும் அழுத்தமாக இருக்கிறது . ஆனால் திரைக்கதையில் நன்றாக கையாளப்படவில்லை .
கவுதமி கதையில் சில காட்சிகள் பரவாயில்லை . ஆனால் ரொம்ப இழுவை .
கான்வென்ட் மாணவி ஏழைப் பையன் மீது பாசம் வைக்கும் காட்சிகள் சொல்லப்பட்ட விதம் படு செயற்கை .
காதல் டிராக்கில் அந்த பெண் ஏன் புறக்கணிக்கிறாள் ? அது தற்காலிக கோபம் எனில் அது அவனுக்கு ஏன் புரியவில்லை ?
இப்படி கதை திரைக்கதைதான் கடுப்படிகிறது என்றால்
ஒரு பக்கம் மோகன்லால் சொந்தக் குரலில் பேசுகிறேன் என்று மலையாள பாணியில் பேசுகிறார் .
இன்னொரு பக்கம் சொந்தக் குரலில் பேசுகிறேன் பேர்வழி என்று கௌதமி தெலுங்கு பேசுகிறார் .
கவுதமியின் தோழியாக வெகு சாதரணமான ஒரு கேரக்டரில் ஊர்வசி . ஆனால் வேலை அதிகம் இல்லை
படத்தின் முடிவுக்கு பொருத்தமான துவக்கம் இல்லை . துவக்கத்துக்கு ஏற்ற முடிவு இல்லை .
மோகன்லாலின் சக போட்டியாளன் காணாமல் போனதற்கு மோகன்லாலின் ‘தட்டல்’ ஐடியா காரணம் இல்லை என்று,
ஒரு நிலையில் வேறு கதை சொல்லி படத்தைக் கொண்டு போயிருந்தால் நன்றாக இருந்து இருக்கும் .
நமது … யாருதோ?