மதுரை வீரன் கதை போல இதுவும் மக்களைக் காக்கும் மனிதனாக விளங்கி பின் கடவுளாகவே வணங்கப்பட்ட ஒரு கிராம தேவாதியின் கதை .
கூத்து வடிவம் பிரபலமாக இருந்த காலத்திலேயே இது , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க , காத்தவராயன் என்ற பெயரில் படமாக வந்தது (எம் ஜி ஆருக்கு ஒரு மதுரை வீரன் ; சிவாஜிக்கு ஒரு காத்தவராயன் )
ஆனால் கூத்துக் கலை பெரும்பாலும் அழிந்து சினிமாவின் வடிவமும் நவீனமாகி விட்ட நிலையில், காத்தவராயன் கதையை காத்தவராயன் கூத்து என்ற பெயரில் படமாக எடுக்க வருகிறார் ஒருவர் .
அவர் ஓர் ஈழத் தமிழர் பெயர் எஸ் கே சுந்தரம் .
காத்தவராயன் படத்துக்கான கதை திரைகதை வசனம் எழுதி இசை அமைத்து பாடல் தயாரித்து,
அதன் வெளியீட்டு விழாவை வி சி குகநாதன் மற்றும் கே . பாக்யராஜ் தலைமையில் சென்னையில் நடத்திய இவர், அடுத்து இதை படமாக எடுக்கவும் இருக்கிறார் .
பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய எஸ் கே சுந்தரம் ” நான் இலங்கை யாழ்ப்பாணம் அனலை தீவில் பிறந்த பிறந்தவன். என் தந்தை பரம்பரை கூத்துக் கலைஞர் .
காத்தவராயன் கூத்து உள்ளிட்ட கூத்துகளை சிறுவயது முதலே அவர் சொல்லைக் கேட்டு வளர்ந்தவன் நான் . எனக்கும் இதில் ஆர்வம் பிறந்தது .
பின்னர் நாங்கள் போர்ச் சூழல் காரணமாக சுவிட்சர்லாந்து போனோம் , அங்கே நான் காத்தவராயன் கூத்தை பாடப் பாட கேட்டுக் கொண்டே உயிர் துறந்தார் எனது தந்தை .
இந்தக் கலையை பரப்ப வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை .
அதன் படி நான் இந்த காத்தவராயன் கூத்தை கதை திரைக்கதை வசனம் மற்றும் பாடல்களாக எழுதி இசை இயக்கம் செய்து சுவிட்சர்லாந்தில் பலமுறை இசை நாடகங்களாக நடத்தி இருக்கிறேன்.
தமிழர் கலையான கூத்துக் கலையை உலகம் முழுக்க பரப்புவதே எனது நோக்கம் .
அதன் உச்சமான இந்த காத்தவராயன் கூத்தை அழியாமல் காக்க எண்ணி, படமாக்கி உலகம் முழுக்க வெளியிட இருக்கிறேன் ” என்றார் .
நிகழ்ச்சியில் பேசிய வி சி குகநாதன் ” என் தாய் தமிழ் நாட்டுக்காரர் . என் தந்தை யாழ்ப்பாணம் புங்கிடு தீவை சேர்ந்தவர் . அதன் பக்கத்தில்தான் அனலை தீவு.
பல கல்விமான்களை கொடுத்த மண் அது . அங்கிருந்து வந்து கூத்துக் கலையை படமாக்கும் சுந்தரத்தின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன் ” என்றார் .
கே . பாக்யராஜ் பேசும்போது ” நான் சுந்தரத்தை விட சுந்தரத்தின் மனைவியை ரொம்ப பாராட்டறேன்.
ஏன்னா … இலங்கையில் இருந்து போர்ச் சூழலில் நொந்து சுவிட்சர்லாந்து போய் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு , நாலு குழநதைகளுக்கும் அப்பா ஆகிட்ட நிலையில ,
சம்பாதிச்ச காசை எல்லாம் போட்டு படம் எடுக்கிறேன்னு செலவு பண்றார் சுந்தரம் .
‘அந்த சூழ்நிலையில சுந்தரத்துகிட்ட அவங்க ” சம்பாதிச்ச காசை வச்சு பிள்ளைகளை வளர்க்கறத பாருங்க . கூத்தும் வேணாம் . ஒன்னும் வேணாம்’னு சொல்லி இருந்தா,
அதை யாரும் தப்புன்னு சொல்ல முடியாது . ஆனா கணவரோட ஆசைக்காக அவங்க தர்ற ஒத்துழைப்பு பெரிய விஷயம் .
கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுல படம் பண்றீங்க . ஜனங்களுக்கு புடிக்கிற மாதிரியும் உருவாக்கி போட்ட காசை நீங்க எடுக்கணும் . அதான் என் விருப்பம் ” என்றார் .
வாழ்த்துகள் !