கோமதி துரைராஜ் தயாரிப்பில் பவித்ரா தென் பாண்டியன் , விமல் குமார், டென்சில் ராஜ், தென் பாண்டியன், ஜெயபிரகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் கிரண் துரைராஜ் இயக்கி, ஷார்ட் ஃபிலிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கும் ஒன்றே முக்கால் மணி நேரப் படம்.
ஆண்ட சாதி ஒன்றைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன் ஒருவனும் காதலிக்கின்றனர் . இருவரும் மருத்துவர்கள் . எனினும் அந்தக் கல்யாணத்துக்கு மறுக்கும் பெண்ணின் தந்தை , அவனைப் பிரிந்து விடுகிறேன் என்று மகள் சொன்ன பிறகும், அவனைக் கொன்று விடுகிறார்.

அதோடு தன் சாதியைச் சேர்ந்த ஒருவனுக்கு கல்யாணமும் செய்து வைக்கிறார்.
விஷயம் தெரிந்து கணவன் அவளைத் தொடாமல் அதே நேரம் வெறுக்காமல் வாழும் போதும் அவள் கர்ப்பமாகி இருப்பது தெரிகிறது .
எப்படி என்பதற்கு யூகிக்க முடியாத ஒரு மருத்துவ ரீதியான காரணத்தைக் கூறி அசத்துகிறார் இயக்குனர். படத்தின் பெரிய முக்கிய ஒரே பலம் அதுதான் . ஆனால் அதுவே படத்தைத் தாங்குகிறது.
மிக இயல்பான எளிய படமாக்கல்.

ஆனால் தேவைக்கு மேல் நீளும் காட்சிகள் .
வலிந்து திணிக்கப்பட்ட சில கெட்ட வார்ததைகள் அதிலும சில யாரிடம் எப்போது பேச முடியும் என்ற புரிதல் இல்லாமல் சில இடங்களில் வருவது எல்லாம் பக்குவமின்மை கணக்கில்தான் வருகிறது.
பெரியார் , பக்தி, என்று பரபரப்புக்காக சில எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளும் வருகின்றன . அது கூடப் பரவாயில்லை. ஆனால் செத்துப் போன காதலனுக்கு பிடித்த கம்பெனி சிகரெட்டை கர்ப்பிணியாக இருக்கும் போது நாயகி புகைப்பதாகக் காட்டுவது எல்லாம் ”கோபப்படற மாதிரி காமடி பண்ணாத ” ரகம் !

எனினும் கர்ப்பத்துக்கான காரணம் ஏற்படுத்தும் வியப்பு (மேற்படி மருத்துவ உண்மை தெரிந்தவர்கள் கூட இங்கே யோசிப்பது சிரமம் ) அதற்குப் பின்பு காட்சிகளை இயக்குனர் டீல் செய்த விதம் யாவும் சிறப்பாக இருப்பதால் பாராட்டுக்குரிய படமாகிறது இந்த நவயுக கண்ணகி