சலார் முதல் பாகம் (தமிழ்ப் பதிப்பு) @ விமர்சனம்

ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்க, பிரபாஸ், ப்ரித்வி ராஜ், சுருதிஹாசன், ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய், மைம் கோபி நடிப்பில்  பிரஷாந்த் நீல் இயக்கி இருக்கும் படத்தின் தமிழ் மொழி மாற்று வடிவம். 

2014 ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் தனது முதல் படமாக கன்னடத்தில் இரண்டு பாகங்களாக இயக்கிய உக்ரம் படத்தில் இருந்து உருவாக்கப்பட்ட படம் இது . 

குஜராத்தின் கட்ச் பகுதி, தெற்கு பாகிஸ்தான் இடையே இருந்த இருந்த கான்சார் என்ற நிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுதந்திரத்துக்கு முன்பு , உலக வரை படத்தில் இருந்தே தங்களை மறைத்துக் கொண்டு , அந்தப் பகுதியை அரசன், அரசனுக்கு கீழ்  குறுநில மன்னர்கள், குறுநில மன்னர்களுக்குக் கீழ் ஜமீன்தார்கள் போல என்ற பாணியில்  ஆண்டு வருகிறார்கள். 

அதில் ஒரு பகுதியில் வாழும் மக்களில் ஒரு தாய் (ஈஸ்வரி ராவ்) மற்றும் அவளது சிறு வயது மகனை அந்தப் பகுதிக் காவலர்கள் கொல்ல வர, அந்தச் சிறுவனின் நண்பனான ராஜ குடும்பத்து சிறுவன் வரத மன்னார் , தங்களுக்குக் கீழ் உள்ள ஒரு பகுதியை ஒரு குறுநில ஆட்சியாளனுக்கு விட்டுக் கொடுத்து நண்பனையும் அவனது தாயையும் காப்பாற்றுகிறான் . 

எனினும் அம்மாவும் மகனும் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் .  வெளியேறி ‘ இந்தியாவுக்குள் வந்து அந்தப் பெண்மணி ஒரு பள்ளியை நடத்த . அந்த சிறுவன்  தேவா வளர்ந்து இளைஞனாகி ( பிரபாஸ்) மெக்கானிக் ஆக இருக்கிறான். 

கான்சாரின் ஒரு குறுநில அரசியான ராதா ராம மன்னார் (ஸ்ரேயா ரெட்டி) முன்பகை காரணமாக ஒரு கோடீஸ்வரரின் அயல்நாடு வாழ் மகளான ஆத்யாவைக்  ( சுருதி ஹாசன்) கொல்ல முயல , அந்த பணக்காரருக்கு வேண்டிய பிலால் என்ற நபர் (மைம் கோபி),  இந்தியா வரும் அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதற்காக  , அவளை தேவாவின் அம்மா வசம் ஒப்படைக்கிறார் . 

ஆனால் ராதாவின் ஆட்கள் அவளைக் கடத்திக் கொண்டு போக , அவளைக் காக்க தேவா களம் இறங்குகிறான் . இதற்கிடையில் சிறுவனாக இருந்த போது தேவாவைக் காப்பாற்ற வரத மன்னார் விட்டுக் கொடுத்த பகுதியை,  இழந்த காரணத்தால் ஏற்பட்ட மாற்றங்களால்,  வரத மன்னார் இளைஞனான நிலையில் (பிருத்வி ராஜ்)  மரியாதை இழந்து எல்லோரும் கேலி செய்யும் நிலைக்குப் போகிறான். 

இந்த அரசியலில் ராஜ மன்னார் ( ஜெகபதி பாபு) ரங்க மன்னார் (ஜான் விஜய்) ஆகியோரின் பங்கும் உண்டு .

இந்த கதையை அப்படியே தலை கீழாக சொல்லி , ராதாவின் ஆட்கள் ஆத்யாவை கான்சார் கொண்டு போக, அவளைக் காக்க மீண்டும் தான் பிறந்த மண்ணுக்குள் நுழையும் தேவா என்கிற சலார் அவளைக் காத்து நண்பனை மீண்டும் உயர்த்தும் முயற்சியில்  இறங்க ,  நடந்தது என்ன என்பதே சலார் . 

அதே கருப்பு சுரங்கம், அதே கருப்பு உடை, கருப்பு மண் , புழுதி , கனரக ஆயுதங்கள் ,  ரத்தம் , கை கால் மண்டை உடை, கிழி , பிய்த்து எறிவது, 

அரிவாளை வீசி ஆகாய விமானத்தை உடைக்கும் சண்டைகள் ….

அம்மா செண்டிமெண்ட் , ஓவர் ரியாக்ஷன் கொடுத்தபடி அடிக் குரலில் பேசும்  கதாபாத்திரங்கள் என்று….  கே ஜி எஃப் பாணியில் ஒரு படம் !  ரவி பஸ்ரூர் இசை , புவன் கவுடாவின் ஒளிப்பதிவும் அதே பாணி, அதே பில்டப் . 

ஆனால் இந்த சலாரை Kidding Goose field  என்று சொல்லலாம் . அப்படி ஒரு சொதப்பல். 
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபரை வதம் செய்யும் கதைப்பகுதி மட்டும் ஆறுதல். கமர்ஷியல் என்றாலும் அது  எமோஷனலாகவும் இருக்கிறது 

சலார் முதல் பாகம் (தமிழ்ப் பதிப்பு ) @ விமர்சனம் என்பதை நான் 

ச……..ல்….ஆ… ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்…. மு…த்தத்த்த்த்த் … தல்ல்ல்ல்ல்ல்ல்……பா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ …க…  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்த…. மி…… ழ்ழ்ழ்ழ் ….. ப்ப்ப்ப்ப்பப்ப்ப்ப் … ப…… தி…. ப்ப்ப்ப்ப்பப்ப்ப்ப். புபுபுபுபுபு ….. உ உ உ உ உ …. @@@@@@@@@ வ்வ்வ்வவ்வ்வ்வ் …. வி வி வி வி வி வி வி. ம ர்ர்ர்ர்ரர்ர்ர்ர். ச னனனன ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ………

என்று எழுதினால் எப்படி இருக்கும் ?

படமும் அப்படித்தான் இருக்கிறது . அவ்வளவு ஸ்லோ… அவ்வளவு பில்டப். நகக் கண்ணுக்குள் நயாகரா அருவியை நிரப்புவது போலவே எல்லா காட்சிகளும் !

நல்லதோ கெட்டதோ.. ஹைதராபாத்தில் இருந்து வட இந்தியா வரை இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களையும் படத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் . ஆனால் சென்னை மட்டும் இவர்களுக்கு இந்தியாவில் இல்லை . ஆனால் தமிழில் டப் செய்து வெளியிட்டு காசு மட்டும் பார்க்க வேண்டும் . 

ஒருவேளை இப்படி கேவலமான கதை மற்றும் மனிதர்கள் என்ற பெயரில் கொடிய மிருகங்கள்  மென்டல்கள் ( நாம சொல்லல…. படத்தில் பிரபாஸ் நடித்து இருக்கும் கதாபாத்திரத்தை  அப்படித்தான் அவர்களே சொல்கிறார்கள்) உலவும் கதைக்கு, 

சென்னையை பிரதிநிதிப்படுத்துவது நியாயம் இல்லை என்று நினைத்து இருப்பார்களோ என்னவோ .  அப்பச் சரி… அப்பச் சரி.. 

”தமிழ் சினிமா என்றாலே லாஜிக் இல்லாத மசலாதானே?” என்று ஒரு காலத்தில் கிண்டலாகப் பேட்டி கொடுத்த பிருத்விராஜ்,  இந்தப் படத்தில் அதை விட ஆயிரம் மடங்கு அராஜக அரதப் பழைய மசாலா பேக்டரி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது எல்லாம்… . அடடா..! அடடே…! 

கடைசியில் முன்னூத்தி சொச்சம் பேரையும் வரிசையாக ஒரு வசனம், ஒரு குளோசப்  அப்புறம் அவர்களை  பிரபாசோ சுகுமாரனோ கொல்வதை…  தொடர்ந்து பார்க்க வேண்டிய கொடுமை இருக்கே..

படத்தில் பெரிய வன்முறையே அதுதான் . 

மொத்தத்தில் சலார் .. …..  பார்ப்பவர்கள் கன்னத்தில் காட்சிக்கு காட்சி பளார்.. பளார்…  பளார் … !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *